கடந்த ஏப்ரல் 17 சனிக்கிழமை அதிகாலையில் வாக்கிங் செல்ல புறப்பட்டவர்கள், வீட்டு வேலைகளை கவனிக்க எழுந்தவர்கள் என பல்வேறு வேலைகளுக்காக எழுந்தவர்களுக்கு தலையில் இடி விழுந்ததைப்போல ஒரு செய்தி... ''நடிகர் விவேக் காலமானார்...'' என்ற செய்தியால் உறைந்து போனார்கள். ''மருத்துவமனையில் அனுமதி, தொடர் சிகிச்சை என்றுதானே செய்தி வெளியானது. காலமானார் என்று சொல்கிறார்களே'' என்று அதிர்ச்சியின் உச்சத்துக்கு சென்றனர்.
அதற்கு பிறகு வீட்டுக்கு வரும் தினசரி பேப்பரை பார்க்கிறார்கள். நடிகர் விவேக் தனியார் மருத்துவமனையில் அனுமதி. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் குணமடைய வேண்டும் என திரையுலகைச் சேர்ந்தவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் கூறியிருந்த செய்திகள் நிரம்பியிருந்தன.
இதேபோல்தான் கடும் அதிர்ச்சிக்குள்ளானார் திருத்தணி அருகே உள்ள ஆர்.கே.வெங்கடேஷ். சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அரசு வழக்கறிஞராக இருந்த இவர் தற்போது திருத்தணி அருகே தனது தாய், தந்தையருக்காக கோவில் கட்டிக்கொண்டு அங்கேயே உள்ளார்.
நம்மை தொடர்புகொண்ட அவர், விவேக் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். ''டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி 1985ல் சென்னை தலைமைச் செயலகத்தில் அசிஸ்டெண்ட்டாக பணியில் சேர்ந்தார் விவேக். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். தலைமைச் செயலகத்தில் வேலை செய்து கொண்டே அப்போது MADRAS LAW COLLEGE (EVENING)-ல் படித்தார். மாலை நேர வகுப்புக்கு தினமும் சிவப்பு நிற சைக்கிளில்தான் வருவார். நாங்கள் 1985-88 பேட்ஜ். தினமும் மாலை 6 மணியில் இருந்து 9 மணி வரை வகுப்பு நடக்கும். அவ்வப்போது வகுப்பு முடிந்து வெளியில் நின்று பேசிக்கொண்டிருப்போம்.
''டைரக்டர் பாலச்சந்தரை பார்த்தேன். பேசிக்கொண்டிருந்தோம், எழுதித் தரச்சொன்னார்'' என சொல்லுவார். அப்போது ஒரு நாள் ''வேலையை விட்டுவிடலாமா? சினிமா வாய்ப்பு வருகிறது. அரசு வேலை, நிரந்தர சம்பளம் ஒரே குழப்பமாக இருக்கிறது'' என ஒருமுறை சொன்னார். ''எல்லோரும் இன்ஜீனியர் ஆகலாம், வக்கீல் ஆகலாம், மிகப் பெரிய டைரக்டர் வாய்ப்பு தந்திருக்கிறார். சின்ன வயதிலேயே சினிமாவில் நுழைந்தால் நல்ல எதிர்காலம் இருக்கும். பயன்படுத்துங்கள்'' என்றேன். நான் சொன்னதால்தான் நடிகர் ஆகணும் என்ற முடிவை எடுத்தார் என்று நான் சொல்லவரவில்லை. என்னைப் போல் நிறைய பேரிடமும் கேட்டுள்ளார். LAW COLLEGE-ல் அவர் படித்தது பலருக்கு தெரியவில்லை என்பதால் பதிவு செய்கிறேன்.
ஆர்.கே.வெங்கடேஷ்
LAW COLLEGE-ல் மூன்றாவது வருடம் படித்துக்கொண்டிருக்கும்போதுதான் மனதில் உறுதி வேண்டும் பட வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. நாங்க LAW COLLEGE-ல் குரூப் போட்டோ எடுத்ததை பாருங்கள். ஜெ.பி.ஆர். வேட்டி கட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார். அவரும் எங்கள் பேட்ஜில்தான் படித்தார். அப்போது அவர் மெட்ரோ வாட்டர் சேர்மேனாக இருந்தார். நான் ஜெ.பி.ஆருக்கு பின்னால் வெள்ளை சட்டை அணிந்து நிற்கிறேன். எனக்கு வலப்பக்கம் மூன்றாவதாக நிற்கிறார் விவேக். டி.ஐ.ஜி.யாக இருந்த சண்முக ராஜேஸ்வரன், சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் பேராசிரியராகவும், துணை வேந்தராகவும் இருநத வணங்காமுடி ஆகியோரும் எங்கள் பேட்ஜில்தான் படித்தார்கள். அவர் மேல் வரிசையில் இடப்பக்கம் நிற்கிறார். தற்போது ஓய்வு பெற்றுவிட்டார். விவேக் LAW COLLEGE-ல் படித்ததை வெளியில் யாரும் சொல்லவில்லை. இது வெளியில் தெரியாம போய்விடுமோ என்றுதான் சொல்கிறேன்.
ஒருமுறை திருநெல்வேலியில் ஒரு கோவிலில் பார்த்தோம். விவேக் வந்திருந்ததால் நல்லக் கூட்டம். அப்போது பார்த்து பேசினோம். ராயப்பேட்டையில் ஒரு முறை பார்த்து பேசினோம். எனக்கு இதயத்தில் பிரச்சனை, ஸ்டென்ட் வைத்திருக்கிறார்கள். அதனால்தான் நான் போகவில்லை. கரோனா காலம் என்பதாலும் போகமுடியவில்லை என்றார் உருக்கமாக.