சமீபத்திய ஆளுநரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அதுகுறித்து திமுகவின் சூர்யா வெற்றிகொண்டான் அவர்களுடன் ஒரு நேர்காணல்.
திராவிட மாடல் மீது ஆளுநர் கடும் கோபத்தில் இருக்கிறார். அவர்களுடைய பாணி என்பது ஆரிய மாடல். எங்களுடையது திராவிட மாடல். கேள்வி கேட்பதுதான் திராவிட மாடல். ஆரிய மாடலை அழித்தது தான் திராவிட மாடல். இந்தியா என்பது ஒரு துணைக்கண்டம். திமுக என்றால் தேசபக்தி அற்றவர்கள் என்பது போல் பேசுகிறார்கள். யாருடைய தேசபக்திக்கும் குறைவானதல்ல தமிழ்நாட்டின் தேசபக்தி. தமிழ்நாட்டின் முதல்வரிடம் ஆளுநரின் அரசியல் எதுவும் எடுபடாது. கக்குபவரையே நக்க விடும் பழக்கம் திமுகவுக்கு இருக்கிறது.
ஆளுநர் அவருடைய வேலையைப் பார்ப்பதில்லை. ராஜினாமா செய்துவிட்டு தமிழ்நாடு பாஜகவின் தலைவராக வாருங்கள். சவாலுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். எதிர்த்துக் கேள்வி கேட்க எங்களுக்கு பெரியார் கற்றுக் கொடுத்திருக்கிறார். ஆன்லைன் ரம்மி மசோதாவை முதலில் எதிர்த்துவிட்டு இப்போது எப்படி ஆளுநர் கையெழுத்திட்டார்? அதேபோல் மீதமிருக்கும் அத்தனை மசோதாக்களுக்கும் கையெழுத்து வாங்குவோம். ஆளுநர் மாளிகையை விளம்பர ஏஜென்சி போல் நடத்தி வருகிறார்.
யார் ஆளுநராக இருந்தாலும் அரசு கணக்குக் கேட்டால் கொடுக்க வேண்டும். அனைவருக்கும் அனைத்தும் என்பது தான் திராவிட மாடல் என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார். எங்கள் மொழியை நாங்கள் பாதுகாக்கிறோம். இந்தி மொழிக்கு ஏஜெண்ட் போல் ஆளுநர் செயல்படுகிறார். ஒரு நாடு ஒரு பாரதம் என்றால் என்ன? அதை ஆளுநர் விளக்க வேண்டும். தமிழன் காசிலேயே சாப்பிட்டுவிட்டு தமிழனுக்கு எதிராக நடக்காதீர்கள். சட்டமன்றத்தில் அவருக்கு தவறான புள்ளி விவரங்களை நாங்கள் கொடுத்தோம் என்கிறார். அவை என்னென்ன என்பது குறித்து அவர் விளக்க வேண்டும்.
தமிழ்நாடு அமைதிப் பூங்கா என்கிற வார்த்தையை அவர் சொல்ல மறுக்கிறார். சட்டம் ஒழுங்கு எந்த வகையில் சரியில்லை என்பதை அவர் சொல்ல வேண்டும். 13 பேரை சுட்டுக் கொன்றுவிட்டுத் தனக்கு எதுவுமே தெரியாது என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவருக்கு சட்டம் ஒழுங்கு பற்றி என்ன தெரியும்? ஒருவேளை சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றால் அதில் ஆளுநருக்கு எந்தப் பங்கும் இல்லையா? மல்லாக்கப் படுத்து எச்சில் துப்பும் வேலையை ஆளுநர் செய்து வருகிறார். பிடித்தால் இங்கு இருங்கள். இல்லையென்றால் கிளம்பி விடுங்கள்.