தேனி மாவட்டத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான கம்பம் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது சுருளி அருவி. இந்த சுருளி அருவி இயற்கை எழில் சூழ, சுருளி வேலப்பர் வீற்றிருக்கும் அருவியில் இருந்து தண்ணீர் வரத்து அதிகமாக வருவதால் மதுரை, திருச்சி, தஞ்சை, திண்டுக்கல், கோவை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து இந்த அருவியில் குளித்து விட்டு போய் வருகிறார்கள்.
கோடை காலத்தை முன்னிட்டு தற்பொழுது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தளமான சுருளி அருவிக்கு மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. சுருளி அருவி மேகமலை வனக்காப்பகத்திற்குள் உள்ள பகுதி. இதனால் இப்பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. சுருளி அருவிக்கு குளிக்க வரும் சுற்றுலாப்பயணிகள் வனத்துறையின் சோதனைச் சாவடியில் கட்டணம் செலுத்தி தான் செல்ல முடியும்.
இதன் மூலம் வனத்துரையினரும் சுற்றுலா பயணிகள் மூலம் ஒரு வருமானம் பார்த்து வருகிறார்கள். ஏற்கனவே இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் வனத்துறையினர் கட்டணம் வசூல் செய்யக்கூடாது என கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள மக்கள் போராட்டம் செய்தனர். அப்படி இருந்தும் கூட வனத்துறையினர் சுற்றுலா பயணிகளிடம் வருமானம் பார்த்து வருகிறார்கள்.
அதுபோல் சுருளி அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கம்பத்தில் இருந்து பேருந்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. வனப்பகுதி சோதனைச் சாவடியில் இருந்து அருவிக்கு சிறிது தூரம் காட்டு வழியே நடந்து செல்ல வேண்டும். இருபுறமும் மரங்களும், அதில் அமர்ந்திருக்கும் பறவைகளும் என அருவிக்குச் செல்லும் பாதையில் சுருளி மலையின் அழகு நம்மை வியப்படையச் செய்யும்.
இங்கு பிளாஸ்டிக் பொருள்கள், சோப்பு, சாம்பு பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. குளித்து முடித்த பின்னர், ஆடைகளை அருவியிலேயே விட்டுச் செல்வதை தவிற்குமாறு வனத்துறை அறிவுறுத்துகிறது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் தொடர் மழையால், சுருளி அருவிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் குற்றாலத்தை மிஞ்சும் அளவுக்கு சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.