சென்னையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட பேராசிரியர் சுந்தரவள்ளி நடப்பு அரசியல் குறித்து அதிரடியாக சில கருத்துகளை முன்வைத்தார். அவரின் பேச்சு பின்வருமாறு, "நான் யாருக்கும் அடிமையில்லை, எனக்கும் யாரும் அடிமையில்லை என்ற வார்த்தைகளுக்கு சொந்தக்காரர் புரட்சியாளர் அம்பேத்கர். இந்த மேடையை ஒரு சனாதனத்துக்கு எதிரான ஒரு களமாக அமைத்துக்கொள்ளவே நான் விரும்புகிறேன். எப்போதும் சனாதனவாதிகளுக்கு எதிராக சமரசம் செய்யாத இருவர் இந்தியாவில் இருக்கிறார்கள் என்றால் ஒருவர் பெரியார், மற்றொருவர் அம்பேத்கர். ஆனால், இந்தியாவில் வேறு இருவரை மட்டும் தான் அவர்களுக்குப் புடிக்கும். ஒன்று அதானி, மற்றொன்று அம்பானி. இவர்கள் இருவரும் தான் அவர்களின் செல்லப்பிள்ளைகள். மற்றவர்கள் அனைவரும் சந்தில் நின்று கொண்டு இருக்கிறார்கள். சமூக மாற்றம் முதலில் தேவை. அதனால் தான் அம்பேத்கர் போன்றோர் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். பார்ப்பனியம் ஒரு பூனை குட்டியைப் போன்றது. மதிலில் இருந்து குதித்தாலும் பூனை சேதாரம் இல்லாமல் தன்னுடைய கால்களை ஊன்றி தன்னைக் காத்துக்கொள்ளும். அதுதான் பார்ப்பனியம். ஆனால் தற்போது சிலர் வாருங்கள் மனு பற்றி விவாதிப்போம் என்று குரல் கொடுக்கிறார்கள். இது எல்லாம் காலத்தின் கோலம்.
வட மொழியை, சமஸ்கிருதத்தை தெளிந்து கற்றவர் வில்லியம்ஸ் ஜோன்ஸ். எனவே மனு தொடர்பாக நீங்கள் விடும் கதை எதுவும் இங்கே எடுபடாது. என்னையும் வில்லியம்ஸ் ஜோன்ஸ் என்று சொன்னால் கூட சொல்லுவார்கள். அப்போதைய சூழ்நிலையில் தன்னுடைய மக்களின் விடுதலைக்காக 18 மணி நேரம் தொடர்ந்து பாடுபட்ட ஒரு தலைவர் இருக்கிறார் என்றால் அது அம்பேத்கர் மட்டுமே. உயர்கல்விக்காக அமெரிக்காவுக்குச் சென்ற முதல் இந்தியர் அண்ணல் அம்பேத்கர். பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகப் பதவியைத் தூக்கிப்போட்டு விட்டு வீட்டிற்கு வந்தவர். இந்தியாவில் அவருக்கு இணையான ஒரு தலைவர் வேறு யாரும் இருக்கிறார்கள் என்றால், அப்படி யாரையும் நினைத்துக் கூட பார்க்க முடியாது. எங்கள் ஐயா அமெரிக்காவில் சமஸ்கிருதத்தைப் படித்துவிட்டு இங்கே வந்து அவர்களை ஓட ஓட அடித்து விரட்டினார் என்பதுதான் வரலாறு. அதற்குப் பிறகு தான் மனுவை அவர் எரித்தார். மனித குலத்துக்கு எதிராக இருப்பதை மனிதர்கள் ஒன்று சேர்ந்து அடித்து நொறுக்குவது தான் சமூகநீதி. அதைத்தான் அண்ணல் அம்பேத்கர் செய்தார். அதனால் தான் அவர்களால் அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். அவர்கள் தவிக்கட்டும், அதுதான் நமக்கு வேண்டும். அப்போதுதான் நமக்கான விடியல் பிறக்கும்" என்றார்.