தமிழ் சினிமாவிலுள்ள நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் நடிகர் விஷால் முக்கியமான பொறுப்பில் இருக்கிறார். விஷால் பொறுப்பிற்கு வருவதற்கு முன் அவருடன் இருந்த சிலர், பதவிக்கு வந்தபின் அவரையே எதிர்க்க தொடங்கிவிட்டனர். இது பலருக்கு மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது. அதில் குறிப்பாக விஷாலுக்கு நெறுங்கிய நண்பராக இருந்தவர் ஜே.கே ரித்தீஸ். தற்போது இவர் விஷாலை எதிர்த்து வருகிறார். இந்நிலையில் அவரை சந்தித்து நேர்காணல் செய்தோம், அப்போது அவரிடம் கேட்ட கேள்விகளுக்கு, அவர் அளித்த பதில்கள்....
நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலுக்கு உதவியாக இருந்த நீங்கள் அவரை தற்போது எதிர்ப்பது ஏன்?
விஷால் நடிகர் சங்கத்திற்குள் வந்ததற்கு நான் தான் காரணம். ஏற்கனவே நடிகர் சங்க பொறுப்பில் இருப்பவர்களுக்கு வயதாகிவிட்டது, அவர்களே பல காலகட்டம் இருந்துவிட்டார்கள். சங்கத்தில் வேறு மாற்றம் வந்து புது நிர்வாகம் வந்தால் சரியாக இருக்கும் என்பதற்காக நான் விஷால் பக்கம் இருந்தேன். எப்போது விஷாலுக்கு பழி வாங்குகிற எண்ணம் வந்ததோ, அப்போதே நான் சங்கத்தைவிட்டு விலகிவிட்டேன். அதன் பின்பு, அவர் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக நிற்கிறேன் என்று சொன்னபோதுகூட. ஏற்கனவே ஒரு சங்கத்தில் இருக்கிறீர்கள். அதில் சொன்னதை செய்து வெற்றிபெற்றால் மக்களே உங்களை ஏற்றுக்கொள்வார்கள். அதன்பின் அடுத்த நிர்வாகத்திற்குள் வரலாம் என்றேன். அகல விழுவதைவிட ஆழ விழுவதே மேல் என்று சொல்வார்கள். ஆனால், அவரோ இல்லை நான் இப்போதே தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் நிற்பேன் என்றார். நான் இதற்கு முழு எதிர்ப்பாகவே இருந்தேன். அவரும் என் பேச்சை கேட்கவில்லை, தனியாக ஒரு குழுவை அமைத்து தயாரிப்பு சங்கத்தில் போட்டியிட திட்டமிட்டார்கள்.இதன் பின் அவருடன் இருப்பவர்களிடம், அவர் ஏற்கனவே ஒரு சங்கத்தில் இருக்கிறார். எதற்கு இன்னுமொரு சங்கத்தில் இழுத்துவிடுகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள், நான் அவரை ஒன்றும் அழைக்கவே இல்லை. அவராகவே நான் தான் தலைவர் என்று சொல்லிக்கொள்கையில் நாங்கள் என்ன செய்வோம் என்றனர். இது நடந்துகொண்டு இருக்கும்போதே விஷால் ஆர்.கே நகர் தேர்தலில் போட்டியிட போகிறேன் என்று காமெடியை செய்தார். நாங்களெல்லாம் அதைபார்த்து சிரித்துகொண்டிருந்தோம். நான் ஆர்.கே நகர் தேர்தல் வேலைகளில் பிஸியாக இருந்ததால், தயாரிப்பாளர்கள் தேர்தலை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். நான் தயாரிப்பாளர் என்ற முறையில் அப்போது ராதாகிருஷ்ணனுடன் இருந்திருந்தால் அவர்தான் கண்டிப்பாக தலைவராகி இருப்பார்.
நடிகர் சங்கத் தேர்தலிலும், தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலிலும் போட்டியிடுவதற்கு முன்பு பல வாக்குறுதிகள் கொடுத்த விஷானில் நடவடிக்கைகள் தற்போது என்னவாக இருக்கிறது?
இந்த இரண்டு சங்கத்திலும் பொறுப்புகளுக்கு வருவதற்கு முன் விஷாலுக்கு பல பிரச்சனைகள் இருந்தது. தற்போது பதவிக்கு வந்த பின்னர் அவருடைய சொந்த பிரச்சனைகள் எல்லாம் சரி செய்யப்பட்டது. மற்ற தயாரிப்பாளர்கள் பிரச்சனை எல்லாம் பெரிதாக்கப்பட்டது. குறிப்பிட்ட அளவிலான தியேட்டர்களில் மட்டும்தான் படங்களை வெளியிட வேண்டும் என்று அவர் அறிக்கை வெளியிட்ட அடுத்த வாரத்திலேயே அவருடைய படங்கள் அந்த விதிகளை மீறி 450 தியேட்டர்களில் வெளியானது. சொல்லுக்கும் செயலுக்கும் சம்மந்தமே இல்லாதவர் நண்பர் விஷால்.
அவருடைய பிரச்சனைகளை யார் தீர்த்து வைத்தார்கள்?
எனக்கு தெரிந்தவரை லைகா தயாரிப்பு நிறுவனம் அவருடைய பல பிரச்சனைகளை தீர்த்து வைத்துள்ளது. விஷால் ஒன்றும் பெரிய ஆளில்லை, அவருடைய படங்களை பெரிய தொகை கொடுத்து வாங்கவேண்டிய கட்டாயமும் லைகா நிறுவனத்திற்கு இல்லை. தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்ற பதவியை வைத்திருப்பதால்தான் லைகா நிறுவனம் இப்படியெல்லாம் செய்கிறது. அவருடைய படங்களை வாங்கியும், அது சரியாக ஓடவில்லை. சண்டக்கோழி 2 படத்தில் வேலை செய்தவர்களுக்கு சரியாக பணம் இன்னும் வரவில்லை என்று அதை அந்த யூனியனை சேர்ந்தவர் விஷால் நிறுவனத்திடம் கேட்டிருக்கிறார். இவ்வாறு அவர் கேட்டதால் விஷாலும் ஃபெஃப்ஸி தலைவர் ஆர்.கே. செல்வமணியும் சேர்ந்து ஃபெஃப்ஸியிலிருந்து ஒரு யூனியனையே தூக்கி இருக்கிறார்கள். இது எதுவும் பைலாவில் இல்லை, தன்னுடைய பவரை பயன்படுத்தி இவ்வாறு விஷால் செய்கிறார். நானும் ஐந்து வருடம் எம்பியாக இருந்திருக்கிறேன். எந்த ஒரு பதவிக்கும் காலவரை இருப்பதுபோன்று கடவுள் வரயறை செய்துள்ளார். யார் ஒருவர் தன்னுடைய பதவியின் பவரை பயன்படுத்தி தவறாக நடந்துகொள்கிறார்களோ, தங்களின் பதவிக்காலம் முடிந்தபின்னர், அவர்களின் நிலைமை கேள்விக்குறியாகத்தான் இருந்திருக்கிறது. அது பிரதமர் பதவியாக இருந்தாலும் சரி. பொதுநலமாக இருப்பேன் என்று சொல்லிவிட்டு இப்படி சுயநலமாக அவருடைய படங்கள் ஓடுவதிலேயே முழு சிந்தனையாக இருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில் சங்க உறுப்பினர்களுக்கு என்று எதையுமே செய்ததில்லை.
விஷாலின் எந்த மாதிரியான பிரச்சனைகளை சரி செய்திருக்கிறது லைகா நிறுவனம்?
எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் 100 தியேட்டர்களில்தான் முதலில் வெளியிட வேண்டும் என்று விஷால் அறிவித்திருந்தார். அதனால் அந்த நிறுவனம் விஷாலின் படத்தை வாங்கி, 400 முதல் 500 தியேட்டர்களில் வெளியிட்டு அதற்கு ஒரு முடிவு கட்டினர். இதுவே ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்களின் படங்கள் வெளியிடப்பட்டிருந்தால் வேறு மாதிரி பிரச்சனை ஆகியிருக்கும். சங்ககத்தில் போட்ட தீர்மானத்தை விஷாலை வைத்தே உடைத்தது அந்நிறுவனம். இதற்கு முன்பு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சன் டிவி கையில்தான் தமிழ் சினிமாவே இருந்தது. ஒட்டுமொத்த தயாரிப்பாளர்களுமே அப்போது பிரச்சனையில் இருந்தனர்.
2008 ஆம் ஆண்டு வெளியான காதலில் விழுந்தேன் என்ற ஒரு படம் சன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டபோது பயங்கரமான எதிர்ப்பு கிளம்பியதே?
அதை நான்தான் செய்தேன். அப்போது திமுகவில் இருந்தேன். அக்கட்சியில் இருந்தபோதே சொன்னேன், தமிழ் சினிமாவுக்குள் சன் டிவி வந்தால் ஒட்டுமொத்த சினிமாவும் அழிந்துவிடும் என்றேன். அவர்களிடம் சொந்தமாக சேனல்கள் இருக்கிறது. தற்போது எந்த ஒரு பொருளாக இருந்தாலும் விளம்பரம் செய்தால்தான் விற்கப்படுகிறது. சேனல்களை வைத்து அவர்கள் செய்யும் விளம்பரத்தால் எந்த ஒரு தயாரிப்பு நிறுவனம் எடுக்கும் படமும் தோல்விடையும். நீங்க சன் டிவிக்கு ஒரு கட்டுப்பாடு வையுங்கள். அதை யாரும் கேட்கவில்லை, அவ்வாறு கேட்காததால் அந்த காலகட்டத்தில் பல தயாரிப்பாளர்கள் நஸ்டம் அடைந்தார்கள். நீங்க எவ்வளவு கோடி போட்டு படம் எடுத்தாலும் சன் டிவியிடம் விற்க வேண்டும் இல்லையென்றால் உங்கள் படம் ரிலீஸாகாது, பெரிதாக ஓடாது. இது போன்ற சூழ்நிலை அந்த காலகட்டத்தில் இருந்தது. அதன் பின் அம்மா ஆட்சிக்கு வந்தவுடன் இதற்கு ஒரு முடிவு வந்தது. அனைத்து படங்களுக்கும் நியாயம் கிடைத்தது. இப்போது மீண்டும் சன் டிவி தலையெடுத்து வைக்கிறது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் சன் டிவியின் தொழிலாளி ஆகிவிட்டார்.
விஷாலை இயக்குவது லைகாவா அல்லது சன் டிவியா?
இரண்டுமே அவரை இயக்குகிறது. அவர் நடுத்தர தயாரிப்பாளர்களை தவிர்த்து பெரிய பெரிய கம்பெனிகளுக்காக இயங்குகிறார். இந்த பதவி இருக்கும் வரைதான் அவர்கள் கண்டுகொள்வார்கள். பதவி முடிந்த் வேறொருவர் தலைவராக வந்தால், விஷாலை தூக்கிப்போட்டுவிடுவார்கள். அவர் இந்த பதவியை வைத்து பழிவாங்குவது தண்டிக்கப்பட வேண்டிய ஒன்று, கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்.