Skip to main content

புயல் எச்சரிக்கை எண்களுக்கு அர்த்தம் இதுதான்...

Published on 26/04/2019 | Edited on 26/04/2019

புயல் எச்சரிக்கை எண்கள், புயலின் வேகத்தையும் அதனால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும் அறிவிக்கும் ஒரு அளவீடு. இதன் அடிப்படையிலேயே கடலுக்கு செல்லலாமா, வேண்டாமா என மீனவர்கள் முடிவெடுப்பர்.
 

storm


இது மீனவர்களுக்கு மட்டுமான எச்சரிக்கை இல்லை, கடற்கரையை ஒட்டியுள்ள அனைவருக்குமான ஒரு எச்சரிக்கை. புயல் எச்சரிக்கை எண்களுக்கான அர்த்தம் இதுதான்...


புயல் எச்சரிக்கை எண் 1: புயல் உருவாவதற்கான வானிலை உள்ளது என அறிவிக்கும் சமிக்ஞை இது. செவ்வக வடிவிலான கூண்டு ஏற்றப்பட்டிருக்கும், இரவில் இரண்டு வெள்ளை நிற விளக்குகள் எரியும். தூரத்தில் புயல் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை இது குறிக்கும். 60 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
 

புயல் எச்சரிக்கை எண் 2: தூரத்தில் புயல் உருவாகியுள்ளது என்பதை இது குறிக்கும். பகலில் செவ்வக கூண்டு செங்குத்தாக ஏற்றப்பட்டிருக்கும், இரவில் இரண்டு சிவப்பு விளக்குகள் எரியும். 60 முதல் 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
 

புயல் எச்சரிக்கை எண் 3: இதில் இருந்துதான் பாதிப்புகள் சிறிது,சிறிதாக தொடங்கும். முதல் இரண்டு எண்களும் தூர அறிவிப்பாக இருக்கும். இது உள்ளூர்களுக்கான முன்னறிவிப்பு. பலத்த காற்றுடன்கூடிய மழை பெய்யக்கூடும் என்பதற்கான அறிவிப்பு. பகலில் முக்கோண வடிவ கூண்டு தலைகீழாகவும், இரவில் மேலே வெள்ளை விளக்கும், கீழே சிவப்பு விளக்கும் எரியும். 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.

 

cyclone warning signs

 

புயல் எச்சரிக்கை எண் 4: 50 முதல் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் துறைமுகத்திற்கு ஆபத்துகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால் அந்த ஆபத்து அவ்வளவு தீவிரமாக இருக்காது. அதிகமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்கான சமிக்ஞை பகலில் முக்கோண வடிவ கூண்டு, இரவில் மேலே சிவப்பு, கீழே வெள்ளை விளக்குகள். 
 

புயல் எச்சரிக்கை எண் 5: பகலில் மேலே முக்கோண கூண்டு தலைகீழாகவும், அதற்கு கீழே சீட்டு கட்டிலிருக்கும் டைமண்ட் வடிவிலான கூண்டும் ஏற்றப்பட்டிருக்கும். இரவில் மேலே இரு வெள்ளை நிற விளக்குகளும், அதற்கு கீழே ஒரு சிவப்பு நிற விளக்கும் எரியும். 60 முதல் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இதிலிருந்துதான் அபாயம் தொடங்குகிறது. இதற்கான பொருள் துறைமுகத்தின் இடது பக்கம் புயல் கடந்துசெல்லும். புயல் கடக்கும் நேரத்தில் துறைமுக பகுதி கடுமையான வானிலைக்கு உட்படும் என்பதாகும்.
 

புயல் எச்சரிக்கை எண் 6: 5ம் எண்ணின் வேகம்தான் இருக்கும். ஆனால் துறைமுகத்தின் வலது பக்கம் புயல் கடந்துசெல்லும். புயல் கடக்கும் நேரத்தில் துறைமுக பகுதி கடுமையான வானிலைக்கு உட்படும் என்பதாகும். பகலில், முக்கோண கூடும் அதற்கு கீழே டைமண்ட் வடிவிலான கூடும் ஏற்றப்பட்டிருக்கும். இரவில் மேலே சிவப்பு விளக்கும், அதற்கு கீழே இரண்டு வெள்ளை நிற விளக்குகளும் எரியும்.
 

புயல் எச்சரிக்கை எண் 7: 60 முதல் 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இதை உணர்த்தும் விதமாக மணல் கடிகார வடிவிலான கூண்டும், அதற்கு கீழே டைமண்ட் வடிவிலான கூண்டும் ஏற்றப்பட்டிருக்கும். இதற்கு பொருள் துறைமுகத்தை நெருங்கும் அல்லது கடந்துபோகும் புயலால் துறைமுகத்திற்கு கடுமையான வானிலை ஏற்படும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை என்பதாகும். இரவில் வெள்ளை, சிவப்பு, வெள்ளை என்ற வரிசையில் விளக்குகள் எரியும்.
 

புயல் எச்சரிக்கை எண் 8: துறைமுகத்திற்கு இடதுபுறமாக கடந்துசெல்லும் கடும் புயலினால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும். பகலில் தலைகீழான முக்கோண கூடும், செங்குத்தான செவ்வக கோடும் ஏற்றப்படும். இரவில் வெள்ளை, சிவப்பு, சிவப்பு என்ற வரிசையில் விளக்குகள் எரியும். 90 முதல் 120 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.

 

cyclone warning signs


 

புயல் எச்சரிக்கை எண் 9: அதே வேகம்தான் ஆனால் துறைமுகத்திற்கு வலதுபுறமாக கடந்துசெல்லும் கடும் புயலினால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும். பகலில் முக்கோண கூடும், செங்குத்தான செவ்வக கோடும் ஏற்றப்படும். இரவில் சிவப்பு, சிவப்பு, வெள்ளை என்ற வரிசையில் விளக்குகள் எரியும்.
 

புயல் எச்சரிக்கை எண் 10:  துறைமுகத்திற்கு அருகிலோ அல்லது கடந்துசெல்லக்கூடிய கடும் புயலினால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும். மணல் கடிகார வடிவிலான கூடும், செங்குத்தான செவ்வக கோடும் ஏற்றப்படும். இரவில் சிவப்பு, வெள்ளை, சிவப்பு என்ற வரிசையில் விளக்குகள் எரியும். 120 முதல் 220 கி.மீ வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும். 
 

புயல் எச்சரிக்கை எண் 11: வானிலை எச்சரிக்கை மையத்தோடு இருந்த தகவல்தொடர்பு அற்றுப்போனது. மோசமான வானிலையால், மிக அதிகமான கேடு விளையலாம் என உள்ளூர் அலுவலர்கள் கருதுகின்றனர். என்பதுதான் இதற்கான பொருள். பகலில் மணிக்கூண்டு வடிவிலான கூடு ஏற்றப்படும், இரவில் ஒரேஒரு சிவப்பு விளக்கு மட்டும் எரியும்.