சேலம் மாவட்டத்தில் நேற்று கலைஞர் சிலை திறப்புவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, " நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நாம் 38 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளோம், அதிமுக ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், திமுக என்னவோ தோல்வி அடைந்தது போன்று, அதிமுக வெற்றி பெற்றது போன்ற ஒரு தோற்றத்தை இன்றைக்கு ஆளும் தமிழக அரசு ஏற்படுத்த துடிக்கிறது. 39 மார்க் எடுத்தவர்கள் வெற்றிபெற்றவரா? அல்லது ஒரு மதிப்பெண் பெற்றவர் வெற்றிபெற்றவரா? என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். நாடாளுமன்ற தேர்தலில் லட்சக்கணக்கான வாக்குகளில் வெற்றிபெற்ற நீங்கள், வேலூர் தொகுதியில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றது உங்களுக்கு தோல்வி தானே? என்று கேட்கிறார்கள். அவர்களுக்குகெல்லாம் நான் ஒன்று சொல்லவிரும்புகிறேன்.
கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் வாக்கு வித்தியாசம் ஒரு சதவீதம்தான். இன்னும் சொல்லப்போனால் பல தொகுதிகளில் ஆயிரம், இரண்டாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் அதிமுக வெற்றிபெற்றது. ஒரு வாக்குகளில் வெற்றிபெற்றாலும் வெற்றி வெற்றிதான். அதிமுக போல நாங்கள் தான் ஆட்சி அமைப்போம் என்று சொல்லவில்லை. நாங்கள் அதிமுகவை போல விவரம் தெரியதவர்கள் இல்லை. தமிழக முதல்வர் வெளிநாடு போகிறார். எதற்காக போகிறார் என்றால் வெளிநாட்டு முதலீட்டை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கு என்று காரணம் சொல்கிறார். அப்படி அவர் கொண்டு வந்தால் சந்தோஷம். ஆனால், இதற்கு முன் அதிமுக அரசு மாநாடு எல்லாம் நடத்தி அன்னிய முதலீட்டை கொண்டு வந்துள்ளோம் என்று கூறினார்களே, எவ்வளவு வந்தது என்று இதுவரைக்கும் அறிக்கை வெளியிட்டார்களா? தற்போது எடப்பாடி வெளிநாடு செல்ல இருப்பது தமிழக அரசுக்கு நிதி திரட்ட அல்ல, தனக்கு நிதி திரட்டி கொள்வதற்குதான்" என்றார்.