Skip to main content

"ரஞ்சித், தமிழ் தேசியவாதிகளை, திமுக - அதிமுகவை விமர்சனம் செய்யட்டும். ஆனால்..." - ராஜ்மோகன்  

Published on 20/06/2019 | Edited on 20/06/2019

பேட்டியின் முதல் பகுதி

"இதெல்லாம் தெரியாமலா கலைஞர் ராஜ ராஜ சோழனுக்கு விழா எடுத்தார்?" - ரஞ்சித் விவகாரத்தில் ராஜ்மோகன்

பா.ரஞ்சித்தின் பேச்சு குறித்த ராஜ்மோகன் பேட்டியின் தொடர்ச்சி...

 

rajmohan interview



தஞ்சை பெரிய கோவில் தமிழகத்தின் அடையாளமாக இருந்தாலும், அதை கட்ட பெரிய பொருட் செலவும், மக்களின் உழைப்பு சுரண்டப்பட்டதாக கூறப்படுகிறதே?

மக்களின் உழைப்பை சுரண்டி கட்டப்பட்ட சீன பெருஞ்சுவரில் அதை கட்டியவர்களின் பெயர் இருக்கா? இல்லை, மக்களின் உழைப்பை சுரண்டி இப்போது கட்டியிருக்கீங்களே ரிப்பன் பில்டிங், அதுல கட்டியவர்கள் பெயர் இருக்கா? இல்லை. ஆனா பெரிய கோவில் கட்டிய உதவியவர்களை சிற்றரசர் அளவுக்கு ராஜராஜன் போற்றி பாதுகாத்தார். அந்த கோயிலில் அதை கட்ட உதவியவர்களின் பெயர்களை பதித்தார். ராஜராஜன் கட்டினான் என்று பெயர் வரக்கூடாது என்பதில் அவர் தெளிவாக இருந்தார்.  இந்த மாதிரியான கிரெடிட்டை இதற்கு முன் யாரும் கொடுத்ததில்லை என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். தன்னை பெருமைப்படுத்திக்கொள்ள அனைத்து வாய்ப்புக்களும் இருந்த போதும் அதனை தவிர்த்து, அனைவருக்கும் சமமாக வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்தார்.

இதை நீங்க பெருமையா பேசுங்க. ஆனா, அந்த காலகட்டத்துல குறுநில மன்னர்களின் நிலங்களை பறித்தும், சேர பாண்டிய மன்னர்களின் சொத்துக்களை அபகரித்துதான் இந்த கோயில் உருவாக்கப்பட்டதுன்னு சொல்லப்படுதே?

புறநானூறு  முழுவதும் மன்னர்களின் போர் வெற்றிகளை மட்டும்தான் பெருமையாக பேசுகிறது. அவர்கள் போர் புரிந்ததும் உண்மைதான். அந்த கால வரலாறே அப்படிதான். ராஜராஜன் எதையும் புதிதாக செய்யவில்லை. மன்னராட்சியில் அப்படிதான் இருந்திருக்கிறது. இந்த விஞ்ஞான வளர்ச்சியான காலத்தில் கூட ஒருத்தரை ஒருத்தர் வெட்டிகிட்டு சாகிறாங்க.


அதை பற்றியெல்லாம் நீங்க வீடியோ போடலையே?

போடுவோங்க... நீங்க ஆசை பட்டீங்கன்னா ரொம்ப விரிவா வீடியோ போடுவோம். ஆனா சிறுமை படுத்தாதீங்கன்னுதான் நாங்க கேக்குறோம். நடிகர் சிவகுமார் ஒரு நல்ல நடிகர். அவர் செல்போனை தட்டிவிட்டது தப்புதான். அதற்காக அவரை வரப்போற சமூகம் மோசமானவர்னு பேசினா அது எவ்வளவு பெரிய அயோக்கித்தனம்? அவர் தமிழை பாமரன் வரைக்கும் கொண்டு சென்றார். கடைசி காலம் வரையில் சினிமாவில் ஒழுக்கமாக இருந்தார். ஒரு சிறிய தவறுக்காக அவர் செய்த நல்ல விஷயங்களை மறுப்பது என்பது ஏற்றுக்கொள்ள கூடியதல்ல. இன்னும் சில காலத்துக்கு பிறகு யார் அந்த செல்போன் தட்டிவிட்ட அயோக்கியனா என்று பேசினால், நாம் எப்படி பொறுக்க முடியும்.

  tanjai big temple



ரஞ்சித் எப்படி ராஜராஜனை தப்பா பேசலாம்னுதான் குற்றஞ்சாட்டப்படுதே?

ரஞ்சித்தே பிரச்சனை இல்லை, நெருப்புனா சுட்டுவிடாது. ரஞ்சித் காலகட்டத்துக்கு பிறகு, நானும் செத்துடுவேன், மனுஷனா பொறந்த எல்லாரும் இறந்துவிடதான் வேண்டும். அவருக்கு பிறகு யார் அவருனு பேசறப்ப, ராஜராஜ சோழனை தப்பா பேசுனாரே அந்த ரஞ்சித்தானு அவரை வரலாறு பதிவு செய்ய கூடாது. தன்னுடைய முதல்படமான அட்டகத்தியிலேயே உணவு அரசியலை பேசினாரே, மெட்ராஸ் திரைப்படத்தில் தற்கால அரசியல் நிலைமை குறித்து விரிவாக பேசினாரே, காலா படத்தில் ரஜினியை வைத்து, அதுவும் ரஜினிக்கு சோழர்களின் பெயரான கரிகாலன் பெயரை வைத்து தலித் மக்களின் உரிமையை பேசினாரே என்றுதான் வரலாறு பதிவு செய்ய வேண்டும். முன்னோர்களை மதித்தல் என்பது தமிழ் மரபு. அதைதான் செய்ய வேண்டும் என்கிறோம்.

ரஞ்சித் பேசியதில் மற்ற கருத்துக்களை எப்படி பாக்கிறீங்க, ஊரும் சேரியும் ஒன்னாகலைனு அவர் சொல்றது ஒத்துக்கொள்கிறீர்களா?

அதெல்லாம் நிச்சயம் இருக்கு. நாம் எவ்வளவு விஞ்ஞானத்துக்கு போனாலும் நவீன தீண்டாமை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கு. அதை ஆயிரம் பெரியார்கள் வந்தாலும் கட்டுப்படுத்த முடியாது. அதைதான் ரஞ்சித் போன்றவர்கள் முன்னெடுத்து வருகிறார்கள். அதை அவர்கள் தொடர வேண்டும். ஜாதிங்கிற கேன்சர் கட்டிய அறவே அழிக்க வேண்டும். அதுவே சாதி ஏற்றத்தாழ்வுகளை எதிர்ப்பவர்களின் விருப்பமாகவும் இருக்கிறது.


அவர் தமிழ் தேசியவாதிகளையும் கேள்வி கேட்கிறாரே?

அவர் தமிழ் தேசியவாதிகளை கேட்கிறார், திமுக, அதிமுக-வை விமர்சனம் செய்கிறார், செய்யட்டும். இதை எல்லாம் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்து செய்ய முடியாது. இதையெல்லாம் உடனடியாக பேச வேண்டிய விஷயங்கள். இதை யாரும் தடுக்கவில்லை. ஆனா... அயோக்கியன் ராஜராஜசோழன்னு யரோ தப்பா சொல்லியிருக்காங்க. அதைத்தான் தவறுனு சொல்கிறோம். அப்ப ராஜபக்ஷேவுக்கும் ராஜராஜனுக்கும் வித்தியாசம் இல்லையா?

ரஞ்சித் மீதான ஜாதி ரீதியான விமர்சனங்களை எப்படி பாக்குறீங்க?

நிச்சயம் தவறு. யார் மீதும் ஜாதி ரீதியாக தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது. அது முற்றிலும் தவறானது. யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது தமிழத்தின் மிகப்பெரிய கேடு. ஜாதியை சொல்லி திட்டுவதையும், விமர்சிப்பதையும் நவீன தீண்டாமையாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது.