Skip to main content

அமைச்சர் நடத்திய ஆன்மிக விழா... கரோனாவை மறந்த பக்தகோடிகள்!

Published on 28/08/2020 | Edited on 28/08/2020

 

Spiritual ceremony conducted by the Minister! -Corona Forgotten Devotees!

 

‘வாழும் ராஜராஜனே!’ என்று சிலிர்க்கிறார்கள், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது பாசத்தைப் பொழியும் ஆன்மிக அன்பர்கள். 

‘வரலாற்று நாயகன் ராஜராஜ சோழனோடு ராஜேந்திரபாலாஜியை ஒப்பிடுவது சரியா?’ என்று கேட்டால், “மன்னர் காலத்திற்கு பிறகு தனிநபராக சிவன் கோவில் கட்டிய பெருமைக்குரியவர் இவரே!  ராஜராஜ சோழன், சோழ சாம்ராஜ்ஜியத்தின் பேரரசன் என்பதால், தஞ்சையில் மகா சிவன் கோவிலாக, பிரகதீஸ்வரர் கோவிலைக் கட்டி எழுப்ப முடிந்தது. மன்னரோடு மந்திரியை ஒப்பிட முடியாதுதான்! ஆனாலும், தன்னால் முடிந்த அளவுக்கு பெருமுயற்சி எடுத்து, இங்கே விருதுநகர் அருகே மூளிப்பட்டியில் அதே சிவனான தவசிலிங்க சுவாமிக்கு, கோவில் எழுப்பி மஹா கும்பாபிஷேகமும் நடத்தியிருக்கிறார். தஞ்சையில் இருப்பது பெரிய கோவில் என்றால். மூளிப்பட்டியில் இருப்பது சிறிய கோவில். அங்கும்.. இங்கும்.. எங்கும் நிறைந்திருப்பது ஈசனே!” என்று பெருமிதம் கொள்கிறார்கள்.

 

admk minister rajendrabalaji


‘ராஜராஜன் ஒப்பீடு மிகையல்லவா?’ என்று சிந்திக்கும்போதே, முன்னாள் தி.மு.க அமைச்சர் தங்கம் தென்னரசுவும் கூட, தனது முகநூல் பக்கத்தில்- வெண்கொற்றக்குடை பிடித்தபடி அன்பர்கள் பின்தொடர, பட்டுத் தலைப்பாகை அணிந்து, கையில் வாளோடு,  ராஜேந்திரபாலாஜி நடந்துவரும் படத்துக்கு மேலே, ‘ராஜாதி ராஜ, ராஜ கம்பீர, ராஜ குலோத்துங்க, ராஜ மார்த்தாண்ட… பராக்! பராக்!’ என வாசகங்களைப் பதிவிட்டுள்ளது, கேலியாகவோ, கிண்டலாகவோ கருதப்படுகிறது.  

 

Spiritual ceremony conducted by the Minister! -Corona Forgotten Devotees!


தங்கம் தென்னரசுவின் பதிவு குறித்து நம்மிடம் பேசிய ராஜேந்திரபாலாஜியின் நட்பு வட்டத்தில் உள்ள ஒருவர் “போற போக்குல கேலி பண்ணிடலாம். அது ரொம்ப ஈஸி.  வீட்ட கட்டிப் பாருன்னு பெரிசா சொல்லுவாங்க. சிவன் கோயில கட்டி முடிச்சு, அதுவும் இந்த கரோனா நேரத்துல கும்பாபிஷேகம் நடத்துறது சாதாரண விஷயம் இல்ல. கோயிலைக் கட்டி முடிக்கிறதுக்குள்ள ராஜேந்திரபாலாஜி பட்ட பாடு இருக்கே..” என்று பெருமூச்சு விட்டவர், “ஆமாங்க.. கடந்த ஒன்றரை வருஷமா அமைச்சருக்கு அப்படி ஒரு சோதனை. மாவட்டச் செயலாளர் பதவில இருந்து தூக்கிட்டாங்க. மந்திரி பதவியும் போயிரும்னு பேச்சு வந்துச்சு. கோயிலைக் கட்டி கும்பாபிஷேகம் பண்ணும்போது பதவியோ பொறுப்போ இல்லாம போச்சுன்னா? இத நினைச்சு ரொம்பவே கவலைப்பட்டாரு.

 

‘எந்த மந்திரியாச்சும் கோவில் கட்டுறாங்களா?  இதெல்லாம் எதுக்கு’ன்னு கேட்டா, ‘பிறக்கிறப்ப நான் எதையும் கொண்டுவரல. எல்லாமே சாமி கொடுத்ததுதான். சாமி கொடுத்தத சாமிக்கே செலவழிச்சிட்டு போறேன். அதுல உங்களுக்கு என்ன நஷ்டம்’னு திருப்பிக் கேட்பாரு. மூளிப்பட்டிய சுற்றியிருக்கிறவங்க ஒத்துழைப்போடு கட்டிய கோயிலுன்னு சொன்னாலும்.. ராப்பகலா இந்த கோவிலையே நினைச்சு, மனசுக்குள்ள திட்டம் தீட்டி, பார்த்துப் பார்த்துக் கட்டினாரு. தன்னோட குலதெய்வம் தவசிலிங்கத்து மேல அவர் வச்சிருக்கிற நம்பிக்கை வீண் போகல. விருதுநகர் மாவட்ட கழகப் பொறுப்பாளரா தலைமை அறிவிச்சது.” என்றார்.

 

Spiritual ceremony conducted by the Minister! -Corona Forgotten Devotees!


500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றதால்,  கரோனாவை அறவே மறந்து, பக்தர்கள் பெருமளவில் கூடிவிட்டனர். அந்த ஏரியாவில், பலூன் கடை, வளையல் கடை, தின்பண்டக் கடை, பூக்கடை எல்லாம் முளைத்து, திருவிழாக்கோலம் பூண்டது மூளிப்பட்டி. அதுவும் யாகசாலை பூஜை நடந்த முந்தைய நாள் இரவு, வாண வேடிக்கையெல்லாம் நடத்தி கொண்டாடி தீர்த்தனர்.

 

http://onelink.to/nknapp

 

கையில் மகளைத் தூக்கிக்கொண்டு, மாஸ்க் போடாமல் கும்பாபிஷேகம் காண வந்த பாண்டியராஜனிடமும், மூதாட்டி சுந்தரம்மாளிடமும் ‘கரோனா பயம் இல்லையா?’ என்று கேட்டோம். “சாமி கும்பிடத்தானே வந்திருக்கோம்? எந்த கரோனாவும் எதுவும் பண்ணாது. இங்கே வந்திருக்கிற எல்லாரு முகத்துலயும் அன்பையும் பாசத்தையும் பார்க்கிறோம். அது போதும். ஓம் நமசிவாயா!” என்றார்கள், பக்தி பரவசத்துடன். 

 

திருமூலரும் சொல்கிறார் - அன்பே சிவம்!

 

 

சார்ந்த செய்திகள்