Skip to main content

நீட்டை எதிர்க்க அனிதாவுக்கே தகுதி இருந்தது!

Published on 04/09/2017 | Edited on 04/09/2017
அனிதாவைத் தவிர நீட்டை எதிர்க்க வேறு யாருக்கு தகுதி இருந்தது?

நீட் தேர்வை நியாயப்படுத்தும் அறிவுஜீவிகளுக்கும், அனிதா மரணத்தில் அரசியல் இருப்பதாக வெற்றுப்புரளியை கிளப்பும் அரசியல்வாதிகளுக்கும் எப்படிச் சொன்னால் புரியவைக்க முடியும் என்று மூளையை கசக்கிக் கொண்டிரு்ககத் தேவையில்லை.

அவர்களுக்கு நாம் என்ன சொன்னாலும் புரியாது என்பதில்லை. நாம் சொல்வது புரிந்தாலும், அவர்கள் சொல்வதையே சொல்லிக் கொண்டிருப்பார்கள் என்பதுதான் உண்மை.

மிக எளிய உண்மைகளை கலந்தாய்வில் பங்கேற்கும் அதிகாரிகளே சொல்கிறார்கள்.

மருத்துவ மாணவர் கலந்தாய்வு நடக்கும் மருத்துவக் கல்வி இயக்குனகரத்தில் பணிபுரிபவரின் அனுபவ வார்த்தைகள் இவை...

"இதுவரை வேட்டி சட்டை அணிந்து சாதாரண பைகளில் உடமைகளை கொண்டுவந்த சாதாரண நடுத்தர பெற்றோரை பார்க்க முடியும். ஆனால் இந்த ஆண்டு அந்த வளாகத்தில் கார்கள் அதிகமாக நின்றன. வேட்டி சட்டை அணிந்த பெற்றோரைக் காண முடியவில்லை."

அதாவது கடந்த ஆண்டுகளில் நடந்த கலந்தாய்வுகளில் பங்கேற்ற மாணவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பஸ்களிலோ, ரயில்களிலோ சென்னை வந்த சோர்வோடு காணப்படுவார்கள் என்கிறார்.

யோசித்துப் பாருங்கள். 1176 மதிப்பெண்களுடன் எளிதில் மருத்துவ கல்லூரி இடத்தை பெற்றிருக்க வேண்டியவர் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த அனிதா.

நீட் என்றாலே என்னவென்று தெரியாது என்று அப்பாவியாக சொல்கிறார் அனிதா. லட்சக்கணக்கில் செலவழித்து நீட் பயிற்சிக்கெல்லாம் போகமுடியாத தனது நிலையை வேதனையோடு வெளிப்படுத்துகிறார்.



தனக்கு மருத்துவ இடம் கிடைக்காது என்ற முடிவுக்கு வந்துவிட்ட அனிதாவை, ஆசைகாட்டி நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றதாக தமிழிசை சவுந்தரராஜனும், டாக்டர் கிருஷ்ணசாமியும் குற்றம் கூறுகிறார்கள்.

சமூகநீதிக்காக போராடும் ஒரு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், நீட் தேர்வை தொடக்கத்திலிருந்தே கடுமையாக எதிர்க்கும் ஒரு இயக்கத்தைச் சேர்வந்தவர்கள், அனிதாவுக்காக போராடுவதைத் தவிர்த்தால்தான் குற்றம்.

முந்தைய ஆட்சிகளில் கிராமப்புற மாணவர்களுக்கு என்று தனி ஒதுக்கீடு இருந்தது. முதல்தலைமுறை பட்டதாரிகளுக்கு என்று தனி ஒதுக்கீடு இருந்தது. தமிழறிஞர்களின் பிள்ளைகளுக்கென்று தனி இட ஒதுக்கீடு இருந்தது.

அந்த இடங்களை பெற்று படித்து மருத்துவர்கள் ஆக முடிந்தது. கிராமங்களில் சாதாரண ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் மருத்துவர்களாக பணிபுரிவதை காண முடிகிறது.

அந்த நம்பிக்கையில்தானே அனிதா தனது கனவை வளர்த்து, படிப்பில் கவனம் செலுத்தி 1176 மதிப்பெண்களைப் பெற்றார். அவருடயை கனவு தகர்வதை, சமூக நீதியில் அக்கறை உள்ள எவருமே வேடிக்க பார்க்க முடியாது என்பதுதானே உண்மை.

இன்னொரு விஷயத்தை தமிழிசையும், டாக்டர் கிருஷ்ணசாமியும் மறந்து அல்ல மறைத்து பேசுகிறார்கள். தமிழிசையும், டாக்டர் கிருஷ்ணசாமியும் இட ஒதுக்கீடு பயன்களைப் பெற்று படித்து மருத்துவர்கள் ஆனவர்கள் என்பதை மறைத்து பேசுகிறார்கள். கிருஷ்ணசாமியின் இரண்டு மகன்களும் இடஒதுக்கீடு பயன்களால்தான் டாக்டர்கள் ஆகியிருக்கிறார்கள் என்பதை மறைக்கிறார்.

அதனால்தான், அவருடைய மகன்களுக்கு இந்த நிலை ஏற்ப்டடிருந்தால் இப்படி பேசுவாரா என்று கேட்கிறார்கள். அந்த கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியாது. ஏனென்றால் அனிதா விவகாரத்தை திசைதிருப்புவதே அவருடைய வேலையாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அதைத்தான் செய்வார்.

அனிதாவை திமுகவைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் சிவசங்கரும், பிரின்ஸ் கஜேந்திர பாபுவும் திசை திருப்பியதாக தமிழிசையும், கிருஷ்ணசாமியும் சொல்கிறார்கள்.

நீட் தேர்வு நடந்து முடிந்த நிலையிலும் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத இடம் என்று தமிழக அரசு அறிவித்தது மாணவர்களை திசை திருப்பியது இல்லையா?

நீட் வரவே வராது. நிச்சயமாக விலக்குப் பெற்று விடுவோம் என்று தினந்தோறும் அமைச்சர்கள் பேட்டி கொடுத்தார்களே அது அனிதாவுக்குள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்காதா?

கடைசி நிமிடம் வரை இந்த ஆண்டு மட்டுமாவது விலக்கு பெற்றுவிடுவோம் என்று அவசரச்சட்டம் வரை சென்றதே தமிழகஅரசு அது அனிதாவின் கனவுக்கு புத்துயிர் கொடுத்திருக்காதா?

அந்த அவசரச்சட்டம் என்ற நிலை வந்தபோது அதையும் தடுக்கும் வகையில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடு்ககும்போது அதை அனிதா சார்பில் எதிர்த்து வழக்காட உதவி செய்தது மட்டும் எப்படி தவறாகும்?

நீட் தேர்வுக்கு விலக்கு வாங்கிவிடுவோம் என்று மாநில அரசு தொடர்ந்து கூறி வந்தது. முதல்வரும் அமைச்சர்களும் டெல்லிக்கு தொடர்ந்து காவடி தூக்கினார்கள்.

ஒரு ஆண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்க வாய்ப்பு இருப்பதாக மத்திய அமைச்சர்களும் நம்பிக்கை ஊட்டினார்கள். அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒப்புதல் அளிக்கப்படும் நிலை உருவான நிலையில் உச்சநீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞரைக் கொண்டு மறுப்புச் சொல்லி ஏமாற்றியது மத்திய அரசு.

இதையெல்லாம் மறைத்துவிட்டு, பாஜக அரசின் தமிழக மாணவர்களுக்கு செய்த பச்சைத் துரோகத்தை மறைப்பதற்காக தமிழிசை சவுந்தரராஜனும், டாக்டர் கிருஷ்ணசாமியும்  வாரி இறைக்கும்  கேடுகெட்ட பொய்கள் தமிழக மக்களிடம் எடுபடாது.

அனிதாவுக்கு சிவசங்கர் ஒரு சீட் கொடுத்திருக்கலாமே என்று கேட்கிறார் கிருஷ்ணசாமி. நீட் தேர்வு எழுதி மார்க் குறைவாக எடுத்து, ரேங்க் பட்டியலில் இடம்பிடிக்காதவர்களுக்கு சீட் கொடுக்கலாமா?

அப்படி கொடுக்க முடியும் என்றால் அரசாங்கமே இதுபோன்ற நல்ல மதிப்பெண் பெற்றவர்களுக்கு சில இடங்களை கொடுத்திருக்கலாமே.

அதெல்லாம் அந்தக் காலம் என்றாகிவிட்டது. முதல்வர் பார்த்து மருத்து இடத்துக்கு மார்க் குறைவாக இருந்தாலும் பரிந்துரை செய்திருக்கிறார்கள்.

இதே கிருஷ்ணசாமி குறைவான மதிப்பெண் பெற்ற தனது மகளுக்காக ஜெயலலிதாவிடம் கெஞ்சி சீட் பெற்ற கதையெல்லாம் 2015 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் வெளியானதே. அதையெல்லாம் நினைத்து கொஞ்சம்கூட வெட்கப்பட மாட்டாரா?

தனது மகளுக்கு ஒரு நீதி, அனிதாவுக்கு ஒரு நீதியென்று செயல்படும் இவரெல்லாம் ஒரு கட்சிக்கு தலைவராக எப்படி இருக்கிறார் என்பது தெரியவில்லை.

இந்த துரோகத்துக்கான விலையை மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசும், தமிழக அரசும் கொடுத்தே தீரும்.

-ஆதனூர் சோழன்

சார்ந்த செய்திகள்