Skip to main content

'மறைந்தது சொக்கத்தங்கம்'- வந்த பாதையும் வரலாறும்

Published on 28/12/2023 | Edited on 28/12/2023

 

nn

 

சில ஆண்டுகளாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் (71) சிகிச்சை பெற்றுவந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் காலமானார்.

அவரது ரசிகர்களை கண்ணீர் கடலில் தத்தளிக்க வைத்துள்ளது அவரது மறைவு செய்தி. திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் தங்களது கண்ணீர் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

 

dmdk

 

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அழகர்சாமி - ஆண்டாள் தம்பதிக்கு 1952 ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி  மகனாக பிறந்தார் விஜயராஜ். தந்தை, ரைஸ் மில்லை பார்த்துக் கொள்ள, செல்லப் பிள்ளையாகவே வளர்ந்த விஜயராஜுக்கு கல்வியில் அவ்வளவாக நாட்டமில்லை. ஆனால் சினிமாவும் அதில் நடிக்கும் நடிகர்களும் அவரை ஈர்த்திருந்தனர். குறிப்பாக எம்ஜிஆர் படங்களை விரும்பி பார்ப்பதோடு மட்டுமல்லாது, நேற்று பார்த்த எம்ஜிஆர் படத்தின் கதையை சுவாரசியமாக நடித்துக் காட்டி நண்பர்களிடம் வெளிப்படுத்தும் வழக்கம் கொண்டிருந்தார். அந்த அளவிற்கு சினிமாவில் ஆர்வம் இருந்தது. 

ஒரு கட்டத்தில்  சினிமா ஆர்வம் படிப்புக்கு முட்டுக்கட்டை போட, பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்திக் கொண்டார் விஜயராஜ்.  'இளங்கன்று பயமறியாது' என்பதைப் போல, ஊரில் நிகழும் சில சமூக பிரச்சனைகளில் தலைகாட்டும் ரௌத்திரம்  கொண்ட இளைஞராகவே வலம் வந்தார். அதுவே பின்னாளில் அவர் சமூகப் பொறுப்புள்ள படங்கள் மற்றும் அரசியலில் இறங்க காரணமானது என்றே சொல்லலாம். 

nn

விஜயராஜின் சினிமா ஆர்வமும், கோபமும் அவருடைய பெற்றோர்களுக்கு பெரும் மன வருத்தத்தை கொடுத்திருந்தது. எப்படியாவது விஜயராஜை ரைஸ் மில்லில் அமர்த்தி விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தனர் அவரது பெற்றோர்கள். பெற்றோரின் கட்டளைக்கு உடன்பட்ட விஜயராஜ், ரைஸ் மில்லை பார்த்துக் கொண்டாலும், மறுபுறம் அவருடைய சினிமா கனவுகள் நாளுக்குநாள் விரிவடையவே தொடங்கியது.

அடுத்தகட்ட தேடலில் இறங்கிய விஜயராஜ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேட முடிவு செய்தார். மதுரையில் என்னதான் சொகுசான வாழ்க்கை வாழ்ந்தாலும், சென்னைக்கு வரும் பொழுது அவர் பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டி இருந்தது. அன்றைய காலத்தில் பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களின் வாயில்களில் விஜயராஜின் கால் படாத படிகளே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு பல தயாரிப்பு நிறுவனங்களில் ஏறி இறங்கினார். 

nn

நிறம், உடல் மொழி போன்றவைகளை காரணம் காட்டி நிராகரிக்கப்பட்டார். இதனால் அவருக்கான வாய்ப்புகள் பல மைல் தூரத்திலேயே இருந்தது. விடாப்பிடியாக நின்ற விஜயராஜுக்கு ஒரே ஒரு படத்தில் சிறு வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 1978 ஆம் ஆண்டு கிடைத்த அந்த வாய்ப்பு அவருக்கு உற்சாகத்தை ஏற்படுத்த, முதல்நாள் படப்பிடிப்பு தளம் வரை வந்த விஜயராஜுக்கு இறுதியில் ஏமாற்றமே ஏற்பட்டது. காரணம் இறுதியில் அவர் நிராகரிக்கப்பட்டார். ''ஏன் எனக்கு நடிக்க வாய்ப்பு தரவில்லை" என கேட்டதற்கு 'நீ கருப்பாக' இருக்கிறாய்; தமிழ் கூட சரியாக வரவில்லை' என்ற பதில்கள் அவருக்கு அவமானத்தை பரிசளித்தது. 

எங்கு அவமானப்படுத்தப்பட்டோமோ அதிலேயே சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் களத்தில் இறங்கிய விஜயராஜ், இன்னும் தீவிரமாக வாய்ப்பு தேடலில் இறங்கினார். அப்பொழுது இயக்குநர் எம்.ஏ.காஜா  இயக்கிய 'இனிக்கும் இளமை' படத்தில் விஜயராஜுக்கு வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த நேரத்தில் நடிகர் ரஜினிகாந்த் வளர்ந்து வரும் நாயகனாக வலம்வந்த நிலையில் அவருடைய பெயரில் இருந்து காந்தை எடுத்து 'விஜய்காந்த்' என விஜயராஜுக்கு பெயர் சூட்டினார் இயக்குநர் எம்.ஏ.காஜா. அன்றுமுதல் விஜயகாந்த் ஆகிப்போனார் விஜயராஜ்.

அடுத்தடுத்து அகல் விளக்கு, நீரோட்டம், சாமந்திப்பூ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். மற்ற நடிகர்களுக்கு சினிமா தயாரிப்பு நிறுவனமே உடைகளை தர, விஜயகாந்த் மட்டும் அவர் தொடர்பான காட்சிகளுக்கு அவரே சொந்த செலவில் உடைகளை எடுத்துவர வேண்டும் என்ற நிலை நீடித்தது. 

தொடர்ந்து விஜயகாந்த் நடித்த எந்த படங்களும் பெரிதாக வெற்றியடையாத நிலையில் கருப்பானவர் என்பது மாறிப்போய் 'ராசி அற்றவர்' என்ற அடுத்த கட்டத்திற்கு தள்ளப்பட்டார் விஜயகாந்த். ஆனால் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தது,  விஜயகாந்த் நடிப்பில் வெளியான 'தூரத்து இடி முழக்கம்'. 80 ஆம் ஆண்டு கே.விஜயன் இயக்கி வெளியான இந்த படத்தில், விஜயகாந்த் ஒரு மீனவராக நடித்திருந்தார். விமர்சனம், வசூல் என முதல் வெற்றிப்படமானது தூரத்து இடி முழக்கம். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த படங்கள் ஒவ்வொன்றும் வெற்றிப் படங்களாக அமைந்தது.

nn

சட்டம் ஒரு இருட்டறை, சிவப்பு மல்லி, ஜாதிக்கொரு நீதி, நீதி பிழைத்தது உள்ளிட்ட படங்கள் ஆரம்பகாலத்தில் அவரின் பெயர் சொல்லும் படங்களாக மாறின. அதிலும் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய 'சட்டம் ஒரு இருட்டறை' படம் விஜயகாந்துக்கு நடிப்பின் மீது இருந்து மிகப்பெரும் ஆர்வத்திற்கு தீனி போடும் விதமாக இருந்தது. சினிமா சூட்டில் அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவு வழங்குவது என பல்வேறு  மாற்றங்களையும் கொண்டு வந்தவர் விஜயகாந்த். 

ஒரே வருடத்தில் 18 படங்கள் நடிக்கும் அளவிற்கு பிஸியான நடிகரானார் விஜயகாந்த். அவரது எளிமையான பேச்சு, பழகும் விதம் என இன்றளவும அவருடன் நடித்தவர்கள், பழகியவர்கள், பார்த்தவர்கள் என அனைவருமே அவரை 'சொக்கத்தங்கம்' என்று விவரித்து வருகின்றனர். அதிலும் விஜயகாந்த் - இப்ராஹிம் ராவுத்தர் நட்பு,  நவீன கால நட்பு இலக்கணமாக, சினிமா துறையினரால் இன்று வரை பேசப்படுகிறது

nn

தொடர்ந்து ராவுத்தர் - விஜயகாந்த் கூட்டணியில் பரதன், ராஜதுரை, கருப்பு நிலா, தர்மா என பல வெற்றி வெற்றிப்படங்கள் உருவாகியது. 1990 ஆம் ஆண்டு பிரேமலதா என்பவரை கலைஞர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். இளையராஜா கச்சேரி, நடிகர்கள், பிரபலங்கள், ரசிகர்கள், மக்கள் என வரவேற்பில் மதுரையே குலுங்கியது. தொடர்ந்து சமூக பிரச்சனைகளில் ஆர்வம் காட்டினார். இந்தி திணிப்பு, ஈழப் பிரச்சனை என பல்வேறு பிரச்சனைகளிலும் குரல் கொடுத்தார். 1989 ஆம் ஆண்டு இலங்கை அகதிகள் முகாம்களில் இருந்தவர்களை நேரில் சந்தித்து உதவி செய்த விஜயகாந்த், இலங்கையில் தமிழர்கள் கண்ணீர் கடலில் இருக்கும் பொழுது என்னால் எப்படி பிறந்த நாள் கொண்டாட முடியும் என அந்த வருட பிறந்த நாள் கொண்டாட்டத்தையே தவிர்த்தார். பிரபாகரன் மீது கொண்ட பற்றால் அவருடைய மகனுக்கு விஜய பிரபாகரன் என்று பெயர் சூட்டினார். அவர் நடித்த 'பொன் மன செம்மல்' படத்தில் இடம்பெற்ற 'நீ பொட்டு வச்ச தங்கக் குடம்' பாடலே பின் நாளில் அவரது அரசியல் பிரவேச படலாகிப்போனது. கேப்டன் பிரபாகரன் படத்தில் நடித்தபின் அவரது ரசிகர்களால் 'கேப்டன்' என்று கம்பீரமாக அழைக்கப்பட்டார். தமிழைத் தவிர வேறெந்த மொழி படங்களிலும் நடிக்காதவர்.
 

nn

அதேபோல் திரைப்படக் கல்லூரியில் படித்து முடித்தவர்களுக்கு வாய்ப்பு தருவதில் முன்னோடியாக இருந்தவரும் விஜயகாந்த் தான். இன்று இருக்கும் பல நடிகர்கள், இயக்குநர்கள் வாய்ப்புத்தேடி அலைந்த நேரத்தில் வயிற்று பசியை போக்கியவர் விஜயகாந்த். 'அவருடைய ஆபிஸ்க்கு எப்போ போனாலும் சோறு இருக்கும்' என கண்ணீருடன் விவரித்தவர்கள் ஏராளம். நலத்திட்ட உதவிகள் வழங்குவது. பள்ளி மாணவர்களுக்கு இலட்சக்கணக்கில் கல்வி உதவி, எம்ஜிஆர் காது கேளாதோர் பள்ளி, தமிழ்நாடு முழுவதும் 60 இடங்களில் இலவச கணினி பயிற்சி மையம், இலவச திருமணம் என கருப்பு எம்ஜிஆராகவே இருந்தார்.

கடனில் தத்தளித்த தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு இக்கட்டான சூழலில் கை கொடுத்தவர் விஜயகாந்த். 1999 ஆம் ஆண்டு கமல், ரஜினி உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களை ஒருங்கிணைத்து மலேசியாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் கிடைத்த வருமானத்தின் மூலம் நடிகர் சங்கத்தின் கடனை அடைத்து வைத்தார். ஒரு பொறுப்பை கொடுத்தால் திறம்பட செய்து முடிக்கும் அவருடைய ஆளுமை அதில் வெளிப்பட்டது. சீர்திருத்த படங்களில் நடித்திருந்தாலும் தொடர்ந்து குடும்ப ஒற்றுமை, குடும்ப உறவுகளை வலுப்படுத்தும் படங்களிலும் அவர் நடித்தார். 'வானத்தைப்போல' படம் மூலம் பல பெண்கள் மனதிலும் இடம் பிடித்தார். 'ரமணா' படத்தில் அவர் பேசும் புள்ளி விவரம் இன்றும் மலைக்க வைக்கும் . 

nn

அதேபோல் போலீஸ் என்றாலே விஜயகாந்த் தான். ஊமை விழிகள் தொடங்கி சத்ரியன், சேதுபதி ஐ.பி.எஸ், வல்லரசு, வாஞ்சிநாதன், நரசிம்மா, பேரரசு என பல போலீஸ் திரைப்படங்களில் நடித்துள்ளார். அதிலும் சண்டை பயிற்சிகளில் வித்தகரான நடிகர் விஜயகாந்த்தின் சண்டை கட்சிக்காகவே தனி ரசிகர் கூட்டம் இருந்தது. அதிலும் வில்லன்களையும், ரவுடிகளையும் நின்றுகொண்டே காலில் தூக்கி உதைத்து பந்தாடுவதும்,  தீவிரவாதிகளையும் சேசிங் செய்து சுட்டு வீழ்த்துவதும் என மாஸ் ஹீரோவாகிப் போனார் விஜயகாந்த். நடிகர் சிவாஜியின் இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலை போலீசாருக்கு முன் வேட்டியை தூக்கி கட்டிக்கொண்டு கூட்டத்தை அகற்றும் மாஸ் காட்சிகள் இன்றும் வைரல். படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் துணிச்சல் மிகுந்தவராக இருந்தார்.

nn

2005 செப்டம்பர் 14ஆம் தேதி மதுரையில் நடந்த மாநாட்டில் தன்னுடைய 'தேசிய முற்போக்கு திராவிட கழகம்' புதிய கட்சியை அறிவித்தார். விஜயகாந்த் கட்சி தொடங்கிய சில மாதங்களிலேயே 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். அதில் அவர் மட்டும் வெற்றி பெற்று எம்எல்ஏவாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். தொடர்ந்து 2009ல் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்று 10 சதவீதம் வாக்குகளை பெற்றார். தொடர்ந்து 2011 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக கூட்டணிக்கு தயாரானது. தேமுதிக-அதிமுக கூட்டணியில் 29 இடங்களில் வென்று திமுக வை பின்னுக்கு தள்ளி எதிர்க்கட்சி இருக்கையில் அமர்ந்தார் விஜயகாந்த். 

nn

அவருடைய கோபம் எப்படி வெளிப்படையானதோ, அதேபோல் அவரது வெகுளித்தனமும் வெளிப்படையானது. அப்துல்கலாம் இறந்த பின் நாட்களில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அப்துல் காலம் போன்று ஒருவர் வேடமணிந்து கலந்துகொண்டார். அவரை பார்த்த உடன் மரியாதை செய்தார். அந்த அளவிற்கு வெகுளித்தனமானவர். இப்படி  சினிமா, அரசியல் பயணம் என மிளிர்ந்த அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு நாளடைவில் இருக்கையை மட்டும் அவருக்கு சொந்தமாக்கியது.

சினிமா, அரசியல் பொதுவாழ்வு என ஒரு சகாப்தமாகவே வாழ்ந்த அந்த 'சொக்கத்தங்கம்' இன்று மறைந்தது.