கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கமல், ரஜினிகாந்த் தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கும்போது " அரசியலில் அவர்கள் இருவருக்கும் சிவாஜி கணேசனுக்கு ஏற்பட்ட நிலைமை தான் ஏற்படும்" என்று கூறினார். முதல்வரின் அந்த பதில் வெளியான சில மணிநேரங்களில் இருந்தே முதல்வரின் பேச்சுக்கு சிவாஜி பேரவையின் சார்பிலும், அவரின் ரசிகர்களின் தரப்பில் இருந்து கடும் கண்டனங்களை இணையதளங்கள் வாயிலாகவும், தொலைக்காட்சிகள் வழியாகவும் சிவாஜியின் ரசிகர்கள் தெரிவித்தார்கள். முதல்வர் கூறிய 'சிவாஜி நிலைமை' என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடுவதே இந்த கட்டுரையின் நோக்கம். அதற்கு முதலில் சிவாஜியின் அரசியல் வாழ்க்கை ஆரம்பித்த 50களின் மத்திய பகுதிக்கு செல்ல வேண்டும்.
50களின் ஆரம்பத்தில் பேரறிஞர் அண்ணா தன்னுடைய தமிழால் தமிழகத்தை ஆளத்துவங்கிய சமயம் அது. பெரியாரின் கருத்தையும், அண்ணாவின் பேச்சையும் தமிழக மக்கள் காதுகொடுத்து கேட்க ஆரம்பித்தா்கள். அவர்கள் மீதும், திமுகவின் மீது அதிகாரப்பூர்வமான பாசம் உருவான அந்த நேரத்தில், தனக்கான நல்ல திரைவாய்ப்பை தேடிக்கொண்டிருந்தார் நடிகர் திலகம் சிவாஜி. கலைஞரின் வசனத்தில் 52ம் ஆண்டு வெளிவந்த பராசக்தி திரைப்படம் சிவாஜியை தமிழக மக்களின் வீடுகளுக்கு கொண்டு சென்றது. கிட்டதட்ட 52ம் முதல் 55ம் ஆண்டு வரை அவர் திமுக ஆதரவாளராக செயல்பட்ட அவர், ஒரு மாற்றத்தை விரும்பி திருப்பதி சென்றார். திருப்பதி திருப்பத்தை ஏற்படுத்தும் என்பது யாருக்கு உண்மையோ இல்லையோ சிவாஜிக்கு 100 சதவீதம் நடந்தது. திமுகவில் நாத்திகம் உச்சத்தில் இருந்த அந்த நேரத்தில் சிவாஜியின் திருமலை தரிசனம் விஜய்யின் திருமலை படத்தை போல திமுகவில் அதிரடிகளை ஏற்படுத்தியது. " திருப்பதி கணேசா திரும்பிப்போ கணேசா" என்று திமுகவினரிடம் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் கோபம் அடைந்த அவர், " நான் ஒரு நடிகன், கள்வனாக நடிப்பேன், கடவுளாகவும் நடிப்பேன் அது என் விருப்பம், என்னால் வேஷம் போட முடியாது" என்று கூறி திமுகவில் இருந்து வெளியேறினார்.
1961ம் ஆண்டு, தான் மானசீகமாக காதலித்துவந்த காமராசர் தலைமையிலான காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார். அடுத்த ஆண்டே தேர்தல். காங்கிரஸ் பெருவாரியான தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கிறது. காமராசர் முதல்வராக பொறுப்பேற்கிறார். மற்றொருபுரம் திமுக முன்பை விட அதிகப்படியான தொகுதிகளில் வெற்றிபெற்று எதிர்க்கட்சியாக சட்டப்பேரவையில் அமர்கிறது. மற்றொருபுரம் பரங்கிமலை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக எம்ஜிஆர் வெற்றிபெறுகிறார். ஆனால், தேர்தலில் சிவாஜி போட்டியிடவில்லை. திமுகவில் தொடர்ந்து செயல்பட்டுவரும் எம்.ஜி.ஆர் தன்னை நாத்திகவாதியாக எப்போதாவது காட்டிக் கொண்டுள்ளாரா? என்ற சந்தேகம் யாருக்காவது வருமானால் அதற்கான பதிலை எம்.ஜி.ஆரை தவிர யாரும் கூறிவிட முடியாது. " முதல்வர் ஆனதும் எம்.ஜி.ஆர் உத்ராட்சை மாலை அணிந்துகொண்டும், அம்மன் கோயிலுக்கு தானமாக வேள் ஒன்றை கொடுத்ததே அதற்கு சாட்சி" இன்று எடப்பாடி கேட்கும் சிவாஜி நிலைமை என்ன என்பது இதன் மூலம் இப்போது ஓரளவு புரியவந்திருக்கும். எப்போதும் எதையும் மறைக்கும் பழக்கம் இல்லாதவர் சிவாஜி. இல்லையென்றால் அவரால் 150 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் திருப்பதிக்கு யாருக்கும் தெரியாமல் செல்லமுடியாதா?
62ம் ஆண்டு தேர்தலில் வெற்றியை பார்த்த அவருக்கு 67ம் ஆண்டு தேர்தல் பெருந்த ஏமாற்றத்தை தந்தது. இருந்தும் காமராசர் மீதும், காங்கிரஸ் மீதும் இருந்த அன்பின் காரணமாக அக்கட்சியிலேயே தொடர்ந்தார். இதனை தொடர்ந்து நடைபெற்ற 71ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் மண்ணை கவ்விய நேரத்திலும், எந்த கூவத்தூர் அரசியலுக்கும் இடம் கொடுக்காமல் காமராசர் கூடவே இருந்து அரசியல் செய்தார் சிவாஜி. 75ம் ஆண்டு காமராசர் மறைவுக்கு பிறகு தமிழக பொறுப்பு அவருக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் அதற்கு வாய்ப்பில்லாமல் போனது. இதில் மற்றொரு வியப்பான சம்பவம் என்னவென்றால், 77ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுகவும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. அரசியல் எதுவும் நிரந்திரம் இல்லை என்ற பாலபாடத்தின் அடிப்படையில் எம்ஜிஆருக்காக வாக்கு கேட்டார் சிவாஜி! அந்த தேர்தலில் தன் நண்பர் கலைஞர் தலைமையிலான திமுகவை வீழ்த்தி, அதிமுக ஆட்சியை பிடிக்க உதவி செய்தார். ஆனால் இவர் அந்த தேர்தலில் போட்டியிடவில்லை. இதற்கு பரிசாக அன்றைய காங்கிரஸ் கட்சி 1982ம் ஆண்டு அவரை ராஜ்யசபா உறுப்பினராக்கியது. இது அடுத்த வந்த தேர்தல்களிலும் தொடர்ந்த நிலையில் எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அதாவது 87க்கு பிறகு, அதிமுக ஜெயலலிதா வசம் சென்ற நிலையில், எம்ஜிஆரின் மனைவி ஜானகியை அரசியல் ரீதியாக ஆதரித்தார் சிவாஜி. ஜெயலலிதாவுடன் கூட்டணி என்ற காங்கிரஸ் மேலிடத்தின் உத்தரவை ஏற்க முடியாமல், 'தமிழக முன்னேற்ற முன்னணி' என்ற புதுகட்சியை உருவாக்கி ஜானகி அணியுடன் கூட்டணி வைத்துக்கொண்டார். 50 தொகுதிகளில் களம் இறங்கிய அவரது கட்சி ஒரு இடத்தில் டெபாசிட் வாங்கியது. வாங்கியவர் சிவாஜி, அவர் நின்ற தொகுதி தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவையாறு.
இதனால் கடும் மன அழுத்தத்துக்கு ஆனான அவர், கட்சி தொடங்கிய அதே ஆண்டில் அந்த கட்சியை கலைத்தார். வி.பி சிங்கின் ஜனதாவுடன் தன்னை இணைத்துக்கொண்டார். அந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஜனதா காணமல் போகவே, அரசியலில் இருந்து தன்னை விலக்கிக்கொண்டார் சிவாஜி. இவ்வாறு பல தேர்தல்களை சந்தித்து வெற்றியும் தோல்வியும் ஒருசேர பெற்ற அவரை எந்த அடிப்படையில் "சிவாஜி நிலைமை" என்று முதல்வர் கூறுகிறார் என எதிர் கேள்வி எழுப்புகிறார்கள் அவரின் ஆதரவாளர்கள். ஒருவேளை தன்னை போல முதல்வர் ஆகவில்லை என்று அவர் நினைக்கின்றாரா என்றால், அவருக்கு (சிவாஜிக்கு) கந்தன் கருணை படத்தில் வருவது போன்று நிமிர்ந்து நடக்க தெரியுமே தவிர, பதவிக்காக நாற்காலிக்கு கீழே தவழ்ந்து செல்ல தெரியாது என்று கண் சிமிட்டுகிறார்கள் பழைய சிவாஜி ரசிகர்கள். ஆனால், காங்கிரஸ் படுதோல்வி அடைந்த காலகட்டத்திலும் கூட முதல்வர் பதவி உள்ளிட்ட எந்த பதவிக்காகவும் காமராசர் உள்ளிட்ட எவரையும் எதற்காகவும் காட்டிக்கொடுக்கவில்லை என்பதே சிவாஜி அரசியலில் சாதித்ததற்கு போதுமான ஒன்று!