பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த அனைத்து எதிர்க்கட்சிக் கூட்டம் தொடர்பாகவும் மணிப்பூர் கலவரத்தைப் பற்றியும் மனித நேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி நமக்கு அளித்த பேட்டி;
பாட்னாவில் நடந்த ஆலோசனைக் கூட்டம் இந்தியாவில் மிகப் பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்களே அது பற்றி உங்களுடைய கருத்து என்ன?
இந்தியாவில் எமர்ஜென்ஸி கால நெருக்கடியின் போது அன்றைக்கு பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்தார்கள். அது நாடு முழுவதும் விழிப்புணர்வையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. அன்று பீகாரில் பிரபல சோசியலிச தலைவர் ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமையில் தான் அந்த சந்திப்பு நடந்தது. இப்பொழுது அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸிக்கு இந்த நாடு இருக்கும் சூழலில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் அதே பீகாரில் தான் இந்த ஆலோசனை கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது.
இந்த கூட்டத்தில் ஏறத்தாழ 17 முதன்மையான கட்சிகள் ஒன்றிணைந்திருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது என்பதுதான் உண்மை. இந்த கட்சிகள் சாதாரணமான கட்சிகள் அல்ல. 11 மாநிலத்தை ஆட்சி செய்யக்கூடிய கட்சிகளாக இருக்கின்றன. மேலும் நாடாளுமன்றத்திலும், மாநிலங்களவைகளிலும் தங்களுக்கான பிரதிநிதித்துவத்தை பேசக்கூடிய கட்சிகளாக இருக்கின்றன. எனவே தான் இந்த ஒன்று கூடல் என்பது இந்தியா முழுக்க 4, 5 நாட்களாக மிகப் பெரிய வாதமாக அமைந்திருக்கிறது. மேலும் எந்த சமூக வலைத்தள பக்கத்தை பார்த்தாலும் இது பற்றிய செய்திகள் தான் வருகின்றன. தொடர்ந்து ஒரு புது செயல் திட்டத்தின் கீழ் இவர்கள் ஒருங்கிணைந்து நாட்டின் ஜனநாயகத்தையும், நாடாளுமன்ற எதிர்காலத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பதை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த கூட்டத்தில் பங்கேற்காத நவீன் பட்நாயக், சந்திரசேகர ராவ், ஜெகன் மோகன் ரெட்டி இவர்களெல்லாம் அடுத்து சிம்லாவில் நடக்க இருக்கும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு இருக்கிறதா?
இந்த மாபெரும் எதிர்க்கட்சிகள் கூடியதில் இந்த மூன்று பேரும் கலந்திருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். ஆனால், இவர்களுக்கு பாஜகவுக்கு எதிராக மாற்றுக் கருத்துகள் கொண்ட சிந்தனையாளர்களாக இருப்பார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனால், தங்களுடைய மாநில அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தற்காலிகமாக தனித்திருக்க விரும்புவதாக தெரிகிறது. சந்திரசேகர ராவ், ஜெகன் மோகன் ரெட்டி இவர்களெல்லாம் காங்கிரஸ்க்கு எதிரான நிலைப்பாடு கொண்டுள்ளார்கள். அதனால் தான் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு தடங்கல் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அடுத்து நடத்த இருக்கும் கூட்டத்தில் இவர்களெல்லாம் வரக்கூடும். ஒருவேளை இவர்கள் தேர்தலுக்கு முன்பாக ஒன்றிணையவில்லை என்றாலும், தேர்தலுக்கு பிறகு இருக்கும் அரசியல் சூழலுக்கு ஏற்ப எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதையும் மறுக்க முடியாது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே வரவிருக்கும் 2024 தேர்தலில் இவர்கள் ஒற்றுமையாக இருக்க முடியாது என்று கூறுகிறார்களே?
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இதுபோன்ற முன்னெடுப்பு எடுக்கவில்லை. சந்திர சேகர ராவ் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் சுற்றி வந்தாலும் அனைவரையும் ஒன்றிணைக்க கூடிய ஆளுமையாக இல்லை. மேலும், ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் இருக்கக் கூடிய ஒரு தலைவராகத்தான் பார்க்கப்பட்டார். அதைத் தாண்டி வெளியே வருவதற்கு அவர் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. ஒரு காலத்தில் வி.பி. சிங் முன்னிலையில் தேசிய முன்னணியை கட்டமைக்கும்போது நாடு முழுதும் இருக்கக் கூடிய கட்சிகளான என்.டி.ராமாராவ், கலைஞர், சி.பி.எம்., சி.பி.ஐ. கட்சிகள் முதற்கொண்டு அனைவரும் இணைந்தார்கள். அது பெரிய முன்னெடுப்பாக பார்க்கப்பட்டது. அத்தகைய ஆளுமை மிக்கவராக சந்திர சேகர ராவ் தன்னை முன்னிலைப் படுத்தவில்லை.
இன்றைக்கு இருக்கக் கூடிய பீகார் முதல்வர் நிதிஷ் குமார், பாஜகவில் நெருங்கி அரசியல் செய்தவர். அவர்களோடு சில நேரங்களில் முரண்பட்டாலும், பல நேரங்களில் உடன்பட்டவர் தான் நிதிஷ் குமார். பாசிச போக்கை கண்டு, ஜனநாயகத்தை பாதுகாக்கக் கூடிய போக்கை புரிந்து கொண்ட பிறகு நாடு முழுக்க இத்தகைய அரிய முயற்சியை செய்திருக்கிறார்.
இந்த எதிர்க்கட்சிகளின் ஒன்று கூடலில், ‘யாருடைய பிரதிநிதியும் தலைநகருக்கு வர வேண்டாம், அவர்களுடைய கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள் வந்து சேர வேண்டும்’ என்று அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் நிதிஷ் குமார் அன்பு கட்டளை விடுத்திருந்தார். இதை ஏற்றுத்தான் திமுக உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளைச் சார்ந்த தலைவர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்று இருக்கின்றனர். இது சாதாரண விசயம் அல்ல. நாட்டின் மீது உள்ள அக்கறையில் தான் இன்று நாட்டில் இருக்கக் கூடிய அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்திருக்கிறார்கள். இந்த கூட்டம் வெறும் தொடக்கம் தான். அடுத்து சிம்லாவில் நடக்கக் கூடிய ஆலோசனைக் கூட்டத்தில் வராமல் போன ஜெகன் மோகன் ரெட்டி போன்றோர்கள் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
இந்த கூட்டம் நிறைவடைந்து செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, ‘ஒரு வேளை அடுத்து நடக்க இருக்கும் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் அதுதான் நாடு சந்திக்கும் கடைசி தேர்தலாக இருக்கும்’ என்று தனது அச்சத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோன்று தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ராஜா அறிக்கையில், ‘இந்திய ஜனநாயகத்துக்கு மோடியுடைய ஆட்சியால் பேரழிவு ஏற்பட்டிருக்கிறது’ என்று வெளியிட்டிருக்கிறார். இந்த நிலையில் எதிர்க்கட்சிகளுடைய ஆலோசனைக் கூட்டம் நீடிக்குமா என்றெல்லாம் கேள்வி கேட்போருக்கு, இந்த சந்திப்பு ஆக்கப்பூர்வமானதாக அமையும் என்று நிதிஷ் குமார் உள்பட அனைத்து எதிர்க்கட்சியினரும் தெரிவித்திருக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் அடுத்து சிம்லாவில் நடைபெறவிருக்கக் கூடிய கூட்டத்தில் காங்கிரஸ் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெறும் என்பதை நிதிஷ் குமார் கூறியிருக்கிறார். இதன் மூலம் அங்கிருக்கக் கூடிய தலைவர்கள் அனைவரும் ஒருமித்தமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அரசியல் அமைப்பு சட்டத்திற்கு ஆபத்து வந்திருக்கிறது என்று மெகபூபா முப்தி தனது கவலையைத் தெரிவித்திருக்கிறார். அதே வேளையில், அந்த கூட்டத்தில் பங்கேற்ற டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் காஷ்மீர் முதல்வருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறித்தும் அங்கு பேசப்பட்டிருக்கிறது. அந்த கருத்து வேறுபாடுகள் கூட விரிசலாக அமையாமல் ஆக்கப்பூர்வமாக அமைந்திருக்கிறது.
அதைத்தான் ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ‘எங்களுக்கும் கருத்து வேறுபாடுகள் உள்ளன எனினும் நாங்கள் ஒன்றிணைந்து இந்த தேர்தலை சந்திக்க இருக்கிறோம்’ என்று கூறியிருக்கிறார். எனவே, இந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் நீடிக்குமா என்ற கேள்விகளுக்கு அந்த தலைவர்களே பதில் தந்திருக்கிறார்கள்.
இந்த எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் தாங்கள் பிரதமராக வர வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருக்கிறார்கள் என்று பாஜகவினுடைய ரவிசங்கர் பிரசாத் கூறியிருக்கிறாரே?
இந்தக் கூட்டத்தினால் பாஜகவினுடைய தலைமை மிகப் பெரிய ஆட்டத்தில் இருக்கிறது. குறிப்பாக தங்களோடு பயணித்த நிதிஷ் குமார் இத்தகைய முடிவை துணிந்து எடுப்பார். அதற்கு எதிர்க்கட்சிகள் அனைவரும் ஆதரவு தருவார்கள் என்று அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை. அந்த அதிர்ச்சியில் தான் எதை எதையோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யாரும் கல்யாண வீட்டிற்கு கூடவில்லை. நாட்டை பாதுகாப்பதற்கே இத்தகைய முன்னெடுப்பு. நாங்கள் யார் பிரதமராக வேண்டுமென்று என்பது முக்கியமில்லை யார் வரக் கூடாது என்பதுதான் முக்கியம் என்ற கருத்தில் இணைந்திருப்பதாக கூறியிருக்கிறார்கள்.
பாஜகவிற்கு பிரதமர் வேட்பாளராக மோடி தான் இருக்கிறார். ஆனால் இந்த எதிர்க்கட்சிகளில் எத்தனை தலைவர்கள் உள்ளனர். அதுவே நாட்டினுடைய ஜனநாயகத்தின் வெளிப்பாடாகத் தான் இருக்கிறது. இதில் நிதிஷ் குமாருக்கும் காங்கிரஸ் தலைவர் ஒருவருக்கும் தான் பிரதமர் வேட்பாளராக இருக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அந்த பட்டியலில் நான் இல்லை என்று நிதிஷ் குமார் விலகி இருக்கிறார். இதில் இருந்து இந்த நாடு பாதுகாக்கப்பட வேண்டும் என்றுதான் முன்னெடுப்பு நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரிகிறது.
இது போன்று வி.பி. சிங், தேவகவுடா, இந்திர குமார் குஜ்ரால் இவர்களெல்லாம் எப்படி வந்தார்கள். ஆனால், அதில் இருந்த குறைகளெல்லாம் கலைந்துவிட்டு சிறப்பாக பயணிக்க வேண்டும். ஆனால், வி.பி. சிங்கின் எழுச்சியை தோழமை கட்சிகள் சரியாக புரிந்து கொள்ளாமல் இருந்ததால் தான் அவருடைய ஆட்சி கவிழ்ந்தது. இந்த குறைகளெல்லாம் தங்களுடைய ஆய்வுகளில் எடுத்துக் கொண்டு மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்றதை போல அணுக வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமும். அதனால் பாஜக பதற்ற நிலையில் எதையோ பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னும் பல கட்சிகள் ஒன்றிணைந்தாலும் பாஜகவை வீழ்த்த முடியாது. தேர்தலில் 300 இடங்களை கைப்பற்றுவோம் என்று அமித்ஷா கூறியிருக்கிறாரே?
இதையே தான் கர்நாடகா சட்டமன்ற தேர்தலிலும் கூறினார்கள். கட்சி தலைவர்கள் நம்பிக்கையாக இருந்தால் தான் தொண்டர்களும் உற்சாகமாக இருப்பார்கள். தங்களுடைய தொண்டர்களை தக்க வைப்பதற்காகவும் தங்களது அச்சத்தை போக்குவதற்காகவும் தான் அமித்ஷா பேசியிருக்கிறார்.
கர்நாடகா வெற்றி காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கான கருத்துக் கணிப்புகள் வெளியாகி இருக்கிறது. இந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தால் பாஜக அச்சப்பட்டிருக்கிறார்கள்.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் வெற்றி பெற்றாலே இந்தியாவில் உள்ள அதிகமான தொகுதிகளில் எதிர்க்கட்சிகள் வெல்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. கர்நாடகா தேர்தலுக்கு பிறகு மதச்சார்பற்ற கட்சியுடன் பாஜக மறைமுக பேச்சுவார்த்தையில் இருக்கிறது. ஏனென்றால் வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் சிறிய இடத்தையாவது பிடிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார்கள். அதனால், அமித்ஷா அவர்களுடைய தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்கு தான் பேசி வருகிறார்.
மணிப்பூர் கலவரத்தை அடக்க அமித்ஷா இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருக்கிறாரே?
நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் எல்லாம் கண்டனம் தெரிவித்த பிறகு, மணிப்பூரில் உள்ள பாஜக உறுப்பினர் கதறி கேட்டதற்கு பிறகு அமித்ஷா அங்கு செல்கிறார். அங்கு செல்வது முக்கியமில்லை அவர்களுடைய நியாயமான கருத்தை ஏற்று அமைதியை நிலைநாட்டுவது தான் முக்கியம்.
பிரதமர் மணிப்பூருக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என்று மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் சொல்கிறாரே?
மன் கி பாத் என்ற நிகழ்ச்சியில் வானொலி மூலம் பேசும் மோடி அவர்களுக்காக பேசலாமே. அந்த பேச்சு அங்கு இருக்கும் மக்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய காயங்களை ஆற்றக் கூடியதாக இருக்கும் . அதை ஏன் செய்யவில்லை.