Skip to main content

திருக்குறள் பற்றி வாஜ்பாய்! பகுதி - 4

Published on 17/08/2018 | Edited on 17/08/2018
vajpayee


இந்தியப் பிரதமரை தமிழ் பத்திரிகைக்காக தனி பேட்டி காண்பது பகீரத பிரயத்தனம் என்பது தெரிந்த்தும், நக்கீரன் தனது முயற்சியை உறுதியுடன் தொடங்கியது. தேசிய ஏடுகள் தவிர, வேறு எந்த மாநில மொழி ஏட்டிற்கும் பிரதமர் வாஜ்பாய் இதுவரை சிறப்பு பேட்டி அளித்ததில்லை. 1998 செப்டம்பரில் முதல்முறையாக நக்கீரனுக்கு பேட்டியளித்திருக்கிறார் பிரதமர் வாஜ்பாய். 
 

நக்கீரன் : நாட்டின் மிகச்சிறந்த பேச்சாளர்களில் நீங்கள் முதல்வரிசையில் இருக்கிறீர்கள். உங்களைக் கவர்ந்த பேச்சாளர் யார் என்று சொல்ல முடியுமா?
 

வாஜ்பாய் : இளமைப் பருவத்தில் என்னை மிகவும் கவர்ந்த பேச்சளார் எனது தந்தைதான். அவர் கலந்துகொள்ளும் கவி அரங்க நிகழ்ச்சிகளில் கவிதை பாடுவதோடு அவர் சொற்பொழிவும் ஆற்றுவார். கவிதையையும் அவர் உணர்ச்சி பாவத்துடன், கலைநயம் ததும்ப படிப்பார். அவரிடமிருந்தே நான் உணர்ச்சிப் பிரளகத்துடன் சொற்பொழிவாற்ற கற்றுக்கொண்டேன்; பிற்காலத்தில் எனது அரசியல் மேடை பிரசங்கங்கள் மக்கள் விரும்பி கேட்கும் அளவிற்கு அமைந்ததற்கு அப்பாவின் முன்னுதாரணமே காரணம். பாராளமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ஏராளமானோர்களின் பேச்சுக்களை கேட்டு நான் வியந்திருக்கிறேன்.

கோவா விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்களில் ஒருவரான நாத்பை நாடாளுமன்றத்தில் அற்புதமாகப் பேசுவார். அதுபோலவே கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பூபேஷ்குப்தாவும் தலைச்சிறந்த பேச்சாளராக திகழ்ந்தவர்.
 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அது இந்திய அரசியலுக்கு மிகச்சிறந்த பேருரையாளர்கள் சிலரை அளித்திருகிறது.  அண்ணாவின் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் அவரது தமிழ் உரைகள் மிக இனிமையானதாகவும், மண்ணின் மணம் கமிழ்வதாகவும் இருக்கும்.
 

ஆங்கிலத்தில் பேசும்போதும் சரி; அவரது பேச்சு சக்திவாய்ந்ததாகவும் அதேசமயம் தெளிவு மிகுந்ததாகவும், திட்டவட்டமானதாகவும் அமைந்திருக்கும். அவர் பேசி முடித்ததும் நான் அவர் அருகில் சென்று அவரது உரையின் சிறப்புகளை கூறி பாராட்டுவேன். அதேபோலவே  அவரும் என்னுடைய பேச்சை பாராட்டி மகிழ்வர்.


1965ஆம் ஆண்டு மாநிலங்களவையில் அண்ணா இந்தி மொழி பற்றி பேசினார் அப்போது அவர் பேசியது நினைவுக்கு வருகிறது. "நாங்கள் இந்தியை ஏன் எதிர்க்கிறோம் ? அதுபற்றி வெளிப்படையாக ஒளிவு மறைவின்றி விளக்கிட விரும்புகிறேன். இந்தி மொழி மட்டுமில்லை; எந்த மொழி மீதும் எங்களுக்கு வெறுப்பு இல்லை. எல்லா மொழிகளையும் நாங்கள் விரும்பவே செயகிறோம் இந்திமொழியைப் பொறுத்தவரையில் எனது அருமை நண்பர்  வாஜ்பாய் பேசுவதை கேட்கும் ஒவ்வொரு சமயமும் அதுவொரு நல்லமொழி என்றே நான் எண்ணுவேன்" என்று அண்ணா குறிப்பிட்டுட்டார்.   
 

நக்கீரன் : நீங்கள் சினிமாக்கள் பார்த்ததுண்டா? படங்களில் உங்களுக்கு பிடித்த படங்கள் எவை என்பதையும், உங்களை கவர்ந்த நடிகர் நடிகையர்கள் யார் யார் என்பதையும் சொல்ல முடியுமா?
 

வாஜ்பாய்  : படங்களை அடிக்கடி பார்ப்பதற்கு எனக்கு நேரம் கிடைப்பது இல்லை. எப்போதாவது பார்ப்பதுண்டு.
 

நக்கீரன் : இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட திருக்குறள் பற்றி உங்கள் கருத்து என்ன?
 

வாஜ்பாய் : தமிழ் மொழி மீதும், தமிழ் கவிதைகள் பற்றியும் எப்போதுமே எனக்கு மிக உயர்ந்த மதிப்பு உண்டு. எனினும் தமிழ்கவிதைகளை தமிழிலேயே படிக்க எனக்கு தெரியாது. இந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ்கவிதைகளை பலவற்றை நான் படித்திருக்கிறேன். சமூக சீர்திருத்தம், ஆன்மிகம், தேசபக்தி, தமிழ் கலாச்சாரத்தின் பெருமை போன்றவைகளை விளக்கிடும் அந்த தமிழ் இலக்கியங்கள் அனைத்துமே தனித்தன்மை வாய்தவைகளாகா விளங்குகின்றன.
 

1996 மே மாதம் பா.ஜ.க. அரசு மீதான நம்பிக்கைத் தீர்மானத்தின் மீது நாடாளமன்றத்தில் நான் பேசியபோது மகாகவி பாரதியார் 'எங்கள் தாய்' என்ற தலைப்பில் பாடிய 'முப்பது கோடி முகமுடையாள்; உயிர் மொய்ம்புறவொன்றுடை யாள்’ என்ற கவிதையை நான் மேற்கோள் காட்டினேன். அதை இன்னமும் பலர் நினைவுபடுத்தி பாராட்டிருக்கிறார்கள்.
 

திருவள்ளுவரைப் பொறுத்தவரையில் அவர் ஒரு கவிஞர் மட்டுமல்ல; அவர் தலை சிறந்த தத்துவஞானி, அவரது கவிதை வரிகள் வாழ்க்கையின் அனைத்துத் துறைகளுக்கும் வெளிச்சம் தரக்கூடிய வழிகாட்டியாகும். நான் எனது நூலகத்தில் அடிக்கடி திருக்குறளை எடுத்து படிக்கும் பழக்கம் உள்ளவனாகவே இருக்கிறேன்.
 

நக்கீரன் : உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள் யார் யார்?
 

வாஜ்பாய் : இந்தியில் நிரவாவை எனக்கு ரொம்பவும் பிடிக்கவும். பெங்காலியில் குருதேவர், ரவிந்தரநாத் தாகூரையும் நான் விரும்பி படிப்பேன்; இந்தி ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் கே.எம்.முன்ஷியின் படைப்புகள் எனக்கு பிடித்தவை. எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் ராஜாஜியும் ஒருவர்.