பகத்சிங்கின் தோழர்கள், விடுதலைக்காக தூக்குக் கயிற்றை முத்தமிட்டு உயிர்த்தியாகம் செய்த ராஜகுரு, சுகதேவ் ஆகியோரை ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் ஒருவர் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இது வரலாற்று ஆசிரியர்கள் மத்தியில் சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.
ஆர்எஸ்எஸ் மற்றும் காவி அமைப்புகளுக்கும் விடுதலைப் போராட்டத்துக்கும் சம்பந்தமில்லை என்ற உண்மையை மறைக்க, காவிகள் பல தந்திரங்களை மேற்கொள்கிறார்கள்.
விடுதலைப் போராட்டத்தில் தங்களுக்கு தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்தும் ஒரு அடையாள அட்டைக்காக பாலகங்காதர திலகரை சொந்தம் கொண்டாடினார்கள். மதத்தீவிரவாதத்தை கடுமையாக எதிர்த்த, அனைத்து மதங்களையும் சகோதரர்களாக மதித்த விவேகானந்தரை கையில் எடுத்தார்கள். சமீபத்தில் இந்துமதத்தின் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புத்த மதத்திற்கு மாறி, பவுத்தராக உயிர்நீத்த அண்ணல் அம்பேத்கரை சொந்தம் கொண்டாடத் தொடங்கி இருக்கிறார்கள். ஏற்கெனவே, காங்கிரஸ் தலைவரான சர்தார் வல்லபபாய் படேலை இந்துமதவாதியாக முத்திரை குத்தி சொந்தம் கொண்டாடி வருக்கிறார்கள்.
காந்தியை கொலை செய்த கூட்டம் சமீபகாலமாக, பகத்சிங்கை சொந்தம் கொண்டாட முயற்சி செய்து, அது முடியாமல் போனதால், இப்போது அவருடைய தோழர்கள் ராஜகுருவையும், சுகதேவையும் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் என்று முத்திரை குத்தியிருக்கிறது.
1928 ஆம் ஆண்டு ஒன்றுபட்ட இந்தியாவில், தற்போது பாகிஸ்தானில் உள்ள லாகூரில், பிரிட்டிஷ் போலீஸ் அதிகாரியான சாண்டர்ஸை கொலை செய்ததற்காக பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.
மூவரும் தங்களை கம்யூனிஸ்ட்டுகளாக பிரகடனம் செய்தவர்கள். ஆனால், ராஜகுரு ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தவர் என்று, நரேந்திர சேகல் என்பவர், தான் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இவர், ஆர்எஸ்எஸ் பிரமுகராகவும் பத்திரிகையாளராகவும் இருக்கிறார்.
இந்தப் புத்தகத்திற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகாவத் முன்னுரை எழுதியிருக்கிறார். எனவே, அவரும் இந்த கருத்தை உண்மையென ஒப்புக்கொள்வதாகத்தான் கருதப்படுகிறது.
1928 ஆம் ஆண்டு சைமன் கமிஷனுக்கு எதிராக லாகூரில் லாலா லஜபத் ராய் தலைமையில் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தைக் கலைக்க போலீஸ் அதிகாரி சாண்டெர்ஸ் தடியடி நடத்தினார். அப்போது லாலா லஜபதி ராயை தாக்கினார். இதில் காயமடைந்த அவர் சில நாட்களில் உயிரிழந்தார். அவரை தங்கள் தலைவராக கொண்ட பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் போலீஸ் அதிகாரி சாண்டர்ஸை கொலை செய்தனர்.
இந்தக் கொலை நடந்தபிறகு ராஜகுரி நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு வந்தார் என்றும், ஆர்எஸ்எஸ் நிறுவனத் தலைவர் கே.பி.ஹெட்கேவரைச் சந்தித்தார் என்றும் அவர் ராஜகுருவுக்காக ஒரு வீட்டை ஏற்பாடு செய்தார் என்று கூறப்பட்டுள்ளது. புனேவில் உள்ள தனது வீட்டுக்கு ராஜகுரு செல்ல வேண்டாம் என்று ஹெட்கேவர் சொன்னதாகவும் சேகல் தனது புத்தகத்தில் கூறியிருக்கிறார்.
இதற்கான ஆதாரம் ஏதாவது இருக்கிறதா என்று சேகலிடம் கேட்டபோது, ஆர்எஸ்எஸ் பிரசுரங்கள் சிலவற்றில் குறிப்பிடப்பட்டிருப்பதாக மேலோட்டமாக கூறினார். அத்துடன் 1960ல் நாராயண் ஹரி என்பவர்தான் முதன்முதலில் இந்த தகவலை தனது புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் என்றும் தெரிவித்தார்.
ஆனால், இது ஆர்எஸ்எஸ்சின் கேலிக்குரிய முயற்சி என்று வரலாற்றாசிரியர் ஆதித்திய முகர்ஜி தெரிவித்தார். அம்பேத்கரையும், விவேகானந்தரையும், பால கங்காதர திலகரையும் கையில் எடுத்ததைப் போல இதுவும் ஒரு தில்லுமுல்லு என்றார்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் சமன் லால் பகத்சிங்கும் அவருடைய தோழர்களும் என்ற புத்தகத்தை தொகுத்திருக்கிறார். அவரும் இந்த கூற்றை மறுத்திருக்கிறார்.
“தொடக்கத்தில் பகத்சிங் தங்களோடு தொடர்பு வைத்திருந்தார் என்று கூறினார்கள். ஆனால், பகத்சிங்கோ ராஜகுருவோ ஆர்எஸ்எஸ்சுடன் தொடர்பு வைத்திருந்ததற்கு ஆதாரம் எதுவுமே இல்லை. அவர்களுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் எழுதிய வாழ்க்கை வரலாறுகளிலும் எதுவும் குறிப்பிடவில்லை” என்றார் லால்.
ஆனால், நடந்தவற்றுக்கு ஆதாரங்கள் இல்லை என்றாலும், ஆர்எஸ்எஸ் தனது பங்களிப்புக்கான பலன்களை அப்போது எதிர்பார்க்கவில்லை. விடுதலைப் போராட்டத்திலேயே காந்தியுடன் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் ஏராளமானோர் பணியாற்றி இருக்கிறார்கள். ஆனால், ஆர்எஸ்எஸ் என்ற அடையாளத்தை வெளிக்காட்டாமல் வேலை செய்திருக்கிறோம். நெருக்கடி நிலைக் காலத்திலும் ஜெயப்பிரகாஷ் நாராயணனுடன் இணைந்து போராடி இருக்கிறோம். அப்போதும் ஆர்எஸ்எஸ் என்ற அடையாளத்தை பயன்படுத்தவில்லை என்கிறார் சேகல்.
1857 ல் நடைபெற்ற முதல் விடுதலைப் போராட்டத்திலேயே இந்துத்துவா இயக்கத்தின் பங்களிப்பை பிரிட்டிஷ் அரசு உணர்ந்திருந்தது. அதனால்தான், இந்துத்துவா அமைப்பு முக்கியத்துவம் பெறுவதை தடுக்க 1885ல் ஹியூமை வைத்து காங்கிரஸ் கட்சியை தொடங்க அனுமதி கொடுத்தது என்கிறார் சேகல்.
காந்தியை கொலை செய்தது ஆர்எஸ்எஸ் அமைப்பினர்தான் என்ற தோற்றத்தை மறைக்க அவர்களும் பல முயற்சிகளை செய்து பார்க்கிறார்கள். ஆனால், காவிகளின் ரத்தக்கறை படிந்த வரலாற்றை திருத்தி எழுதவே முடியாது என்பதுதான் உண்மை.