Skip to main content

“செந்தில் பாலாஜி ஊழல்வாதி தான்” - பியூஷ் மானுஷ்

Published on 14/06/2023 | Edited on 14/06/2023

 

“Senthil Balaji is corrupt” - Piyush Manush

 

அமலாக்கத்துறை சோதனையை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நள்ளிரவு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு அவருக்கு நீதிமன்றக் காவலில் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை குறித்து சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். அவர் அளித்த பேட்டியின் ஒரு பகுதி.

 

செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையில் என்ன வழக்கு என எந்த விவரமும் தெரிவிக்கவில்லை என திமுக வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனரே?


இதுவரை திமுக பாஜகவை மிகவும் மென்மையாகக் கையாண்டது. அதனால் இன்று திமுகவை திருப்பி அடிக்கின்றனர். செந்தில் பாலாஜி ஊழல்வாதி தான் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால், அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கும் பாஜக ஊழலின் உச்சத்தை தொட்டவர்கள். வெளிப்படையாகவே நாட்டை விற்றவர்கள். திமுகவை விட மிக பெரிய ஊழலே பாஜகவில் நடக்கிறது. அப்படிப்பட்ட பெரிய ஊழல் செய்யக்கூடிய பாஜக குறைந்த அளவில் ஊழல் செய்த திமுகவை தாக்குவதன் காரணம் என்ன? கண்டிப்பாக இதற்கு பின்னால் அரசியல் தான் இருக்கிறது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியுடைய 8 அமைச்சர்கள் மற்றும்  ஆம் ஆத்மி கட்சியை சார்ந்த சத்தியேந்திர குமார் ஜெயின், மணீஷ் சிசோடியா போன்றவர்களை எப்படி கைது செய்து உள்ளே வைத்துள்ளார்களோ அதே போல் தான் இங்கேயும் செய்வார்கள். அதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

 

இப்போது தான் திமுக பலமான தனது கொள்கைகளில் இருந்து பின்வாங்கமாட்டோம்; தலைகுனிந்து நடக்கமாட்டோம் என்று சொல்ல வேண்டும். அப்போது தான் உண்மையான பலப்பரீட்சை ஆரம்பிக்கப் போகிறது. ஒருவேளை பின்வாங்கினால் மேலே ஏறி அடிப்பார்கள். முஸ்லிம், கிறிஸ்டியன் எல்லாரும் மோசமானவர்கள், மாட்டு அரசியல் போன்ற பாஜகவின் கொள்கையான வன்மமான அரசியலை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று திமுக உறுதியாக இருக்க வேண்டும். அப்படி உறுதியாக இருந்தால் மக்கள் மனதில் நல்ல பெயரை வாங்கி தேர்தலில் வெல்ல வாய்ப்பு இருக்கிறது.

 

முதல்வர் அறிக்கையில், எங்களுடைய அரசியல் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்போம். பாஜகவின் இது போன்ற மிரட்டல்களுக்கு திமுக அஞ்சாது. 2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று கூறுகிறாரே?


திமுக உண்மையாகவே பாஜவை எதிர்ப்பதில் உறுதியாக இருந்தால் பல விசயம் செய்து காட்டியிருக்க வேண்டும். வெறும் வாயில் மட்டும் பேசக் கூடாது. அப்படி இருந்திருந்தால் அண்ணாமலை, ஹெச்.ராஜா, மாரிதாஸ், கிஷோர் கே. சாமி உள்ளிட்ட எத்தனையோ பேரின் மீது புகார் இருக்கிறது. ஆனால் ஒருவர் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லையே. லாவண்யா வழக்கில் அண்ணாமலை பொய் பிரச்சாரம் செய்து வந்தார். கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு வழக்கில் எவ்வளவோ கொச்சைப்படுத்திப் பேசினார். திமுக பாஜகவை உறுதியாக எதிர்ப்பதாக இருந்தால் தமிழ்நாட்டை கொச்சைப்படுத்திய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமே.

 

சமீபத்தில் கூட ஒரு ராணுவ வீரர் தன் சொந்த பிரச்சனையை தமிழ்நாட்டில் உள்ள பிரிவினைவாதிகள் சதி செய்துவிட்டனர் என பொய் புகார் அளித்தார். இப்படி தமிழ்நாட்டை கொச்சைப்படுத்திப் பேசுகிறார்கள். இந்து முன்னணி கட்சியினர் மாட்டுக்கறிக் கடையை திறக்கக் கூடாது என்று சொன்னவுடன் அதைக் கேட்டு திமுகவும் அந்தக் கடையை திறக்காமல் போனது. அதனால் திமுக பாஜகவை எதிர்க்கிறோம் என்று வார்த்தையாக என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் செயலில் என்ன இருக்கிறது என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.

 

மல்லிகார்ஜுன கார்கே மற்றும்  ஆம் ஆத்மி கட்சியினர் உள்ளிட்ட அகில இந்திய அளவில் செந்தில் பாலாஜியின் கைது பழிவாங்கும் நோக்கம் தான் என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனரே?


சத்தியேந்திர குமார் ஜெயின் ஒரு வருடமாகவும், மணீஷ் சிசோடியா மூன்று மாதங்களாகவும் சிறையில் இருக்கின்றனர். ஆனால், அதற்கு இடைப்பட்ட காலத்தில் இவர்கள் என்ன போராட்டம் நடத்தினார்கள்? மக்கள் மத்தியில் இந்த பிரச்சனை வெளிவர இல்லையே. எத்தனை நாள் இந்த பிரச்சனையை பற்றி பேசி இருப்பார்கள்?

 

முழு பேட்டி வீடியோ: