இன்று நாம் சாதிவிட்டு சாதி, மதம் விட்டு மதம் என மாறி திருமணம் செய்துகொள்ளலாம். அது அரசியலமைப்பு சட்டப்படி செல்லும். ஆனால் சரியாக இன்றிலிருந்து 51 வருடங்கள் மற்றும் ஒருநாளுக்கு முன்னால் (27.11.1967) அப்படியிருக்கவில்லை... ஜாதி விட்டு ஜாதி மாறி திருமணம் செய்துகொண்டால் அது சட்டப்படி செல்லாது. இப்படி ஒரு அவலநிலை ஒழிந்தது, 51 வருடங்களுக்கு முன்னால் இதே நாளில்தான்... இன்றுதான் சுயமரியாதை திருமண சட்டம் கொண்டுவரப்பட்டது. அண்ணா இருந்த குறுகிய காலத்தில் பல ஒப்பற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். அதில் ஒன்றுதான் இந்த சுயமரியாதை திருமண சட்டம். ஆனால் இதற்கான விதை 1928லேயே போடப்பட்டது, தந்தை பெரியாரால்...
சுயமரியாதை திருமண சட்டம் வருவதற்கு 40 ஆண்டுகளுக்கு முன்பே அருப்புக்கோட்டை, சுக்கிலாநத்தத்தைச் சேர்ந்த சண்முகம் மற்றும் மஞ்சுளாவிற்கு சாதி மறுப்பு, சுயமரியாதை திருமணத்தை நடத்திவைத்தார், தந்தை பெரியார். அதேநேரம் அந்த மணமகள் கைம்பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுயமரியாதை இயக்கத்தை தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் அப்படியொரு புரட்சி திருமணத்தை நடத்திவைத்தார் பெரியார். இது தெய்வகுத்தம், கலப்பு திருமணத்தை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும் என எதிர்த்தவர்களுக்கு தனது சொற்கள் மூலம் பதிலடியை பலத்த அடியாக கொடுத்தார். அவர் அப்போது கூறியது இதுதான். ‘நான் மனித ஜாதியில் பிறந்த ஆணுக்கும், மனித ஜாதியில் பிறந்த பெண்ணுக்கும்தான் திருமணம் செய்துவைத்தேன். அது எப்படி கலப்பு திருமணமாகும். நான் என்ன மனிதனுக்கும், மாட்டிற்குமா திருமணம் செய்து வைத்தேன்.’ அதன்பின் தொடர்ந்து சுயமரியாதை திருமணங்கள் நடந்தன. சுயமரியாதை திருமணம் சட்டப்பூர்வம் ஆகாததால் அந்த தம்பதிகள் அனுபவித்த ஏச்சுகளும், பேச்சுகளும், கொடுமைகளும் ஏராளம். ஒரு உதாரணத்திற்கு சொல்லவேண்டுமென்றால் இன்று இந்த நவீன உலகத்திலேயே! பல ஆணவக்கொலைகள் நடக்கின்றன. அப்படியென்றால் 90 ஆண்டுகளுக்கு முன் என்னென்ன கொடுமைகள் நடந்திருக்கும்...
அதன்பின் 1954ல் சிறப்பு திருமண சட்டம் ஏற்கப்பட்டு, 1955ல் கொண்டுவரப்பட்டது. இதில் இந்து மதத்திற்குள் எந்த சாதியாக இருந்தாலும், சாதி விட்டு சாதி மாறி திருமணம் செய்யலாம் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இது அந்தளவிற்கு கொண்டாடும் வகையில் இல்லை. ஏனென்றால் அதில் ஒரு குறை இருந்தது. சாதி விட்டு சாதி மாறி திருமணம் செய்தாலும் அது சாஸ்திர, சம்பிரதாயங்களுடன்தான் நடக்கவேண்டும் என்று இருந்தது. சுயமரியாதை திருமணத்தின் நோக்கம் இதுவாக இல்லை. எந்த விதமான சடங்குகளும் இல்லாமல் நடக்க வேண்டும் என்பதே சுயமரியாதை திருமணத்தின் நோக்கம், ஆகவே அது அப்போது நிறைவேறவில்லை.
1967ம் ஆண்டு நவம்பர் 28ம்தேதி சட்டமன்றத்தில் அண்ணாவால் சுயமரியாதை திருமண சட்டம் நிறைவேற்றப்பட்டது. சிறப்பு திருமண சட்டத்திலிருந்த குறைகள் அனைத்தும் அதன் வழியாக களையப்பட்டது. அப்போது ஒரு சுவாரசிய சம்பவம் நடந்தது. அந்த மசோதாவின் நகலை பெரியாருக்கு அனுப்பி வைத்தனர். அதைப்படித்த பெரியார், மாலை மற்றும் தாலி என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இதனால் தாலி கட்டாயம் என்ற பொருள்படுகிறது. அதனால் இதை ‘மாலை அல்லது மாலையும் தாலியும்’ என மாற்றுங்கள் என்று கூறினார். அதன்படியே அது மாற்றியமைக்கப்பட்டது.
இந்தியாவில் சமூகநீதி என்றாலே அங்குவந்து நிற்கும் முதல் மாநிலம் தமிழ்நாடுதான். தமிழ்நாடு சமூகநீதியில் இந்தியாவிற்கான முன்னோடி என்றாலும் அது மிகையாகாது. அதன்படியே சுயமரியாதை திருமண சட்டமும் இந்தியாவிற்கான முன்னோடியாக நின்றது. இன்று நடைபெறும் சுயமரியாதை, சாதிமறுப்பு, மதமறுப்பு திருமணங்களிலிருந்து, மணம்முறிவு வரை அனைத்து உரிமைகளையும் கொடுக்க வழிவகை செய்தது சுயமரியாதை திருமண சட்டம். அந்த சட்டத்தை மட்டுமல்ல, அதை கொண்டுவர பாடுபட்டவர்களையும் நாம் இந்த நாளில் நினைத்து பார்க்கவேண்டும்