சாத்தான்குளத்தில் தந்தை மகன் இருவரும் காவலர்களால் அடித்துச் சித்தரவதை செய்யப்பட்ட சம்பவத்துக்கு நாடு முழுவதிலும் இருந்து எதிர்ப்பு வந்துகொண்டிருக்கின்றது. அவர்கள் மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் ஒருவர்பின் ஒருவராகக் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துத் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, " இந்த மரணம் நமக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மனிதத் தன்மையே இல்லையா என்று எண்ணத் தோன்றுகிறது. காவல்துறையின்ர் இந்த வழக்குத் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை கொடுக்கிறார்கள். அதில் தலையில் அவர்களுக்கு எப்படிக் காயம் ஏற்பட்டது என்றால் கைது செய்யும் போது தரையில் படுத்து உருண்டார்கள் என்று தெரிவிக்கிறார்கள். அந்த முதல் தகவல் அறிக்கையைப் படிக்கும் போதே அவர்கள் பொய் சொல்வது மிகத் தெளிவாக அனைவருக்கும் தெரியும். காமெடியான ஒரு போலி அறிக்கையை முதல் தகவல் அறிக்கை என்று கொடுக்கிறார்கள். அதை எழுதும் போதே அது ஒரு வேடிக்கையாகத் தெரிந்திருக்க வேண்டும்.
தாங்கள் அதிக அதிகாரம் படைத்தவர்கள் என்று காவல்துறையினர் தங்களைத் தாங்களே நினைத்துக் கொள்கிறார்கள். ஜார்ஜ் பிளாய்டு இறந்து போனார், அவருக்கு உலகமே அழுதது என்றால் அவர் நம்முடைய சொந்தகாரர் என்று அழவில்லை. சக மனிதன் என்ற எண்ணத்தில் உலகமே அவருக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. அதே போல் சற்றும் குறைவில்லாத சம்பவம்தான் இந்தச் சாத்தான்குளம் சம்பவம். வன்ம வெறியாட்டத்தின் உச்சம் இந்தக் கொலை. மனிதத் தன்மை அறவே நீர்த்துப் போனவர்கள் செய்கின்ற வேலைதான் இது. இதனை யாரும் மன்னிக்கவும் முடியாது, மறக்கவும் முடியாது. கொலை செய்தால் கூட நம்மை யாரும் கேட்க முடியாது என்கிற அகம்பாவம் காவல்துறையில் சிலருக்கு அதிகம் இருக்கிறது. அதுதான் தற்போது கொலையில் முடிந்திருக்கின்றது.
சாத்தான் குளத்தில் கடையை அதிக நேரம் திறந்தார்கள் என்று அடித்துத் துவைத்துக் கொலை செய்துள்ள நீங்கள், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களைத் தவிர தமிழ்நாட்டின் மற்ற எல்லா மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகளுக்கு பாதுகாப்பாக நின்று மக்களைக் குடிக்க வைப்பதில் என்ன நியாயம் இருக்க போகின்றது. குடிப்பவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதுதான் காவல்துறையின் பணியா? 10 நிமிடம் கடையைத் திறந்து வைத்ததில் கரோனா தொற்று வந்துவிடும் என்று பயப்படும் காவல்துறை கூட்டம் கூட்டமாக நின்று மது வாங்குகிறார்களே அதன் மூலம் கரோனா தொற்று வராதா? அங்கெல்லாம் கைகட்டி வாய்ப்பொத்தி நிற்கிறீர்கள். நல்ல மனநிலையில் இருப்பவர்களே மதுபோதையில் சமூக விலகலைக் கடைப்பிடிக்கவில்லை. அப்படி இருக்கையில் மதுபோதையில் இருப்பவர்கள் எப்படி அனைத்து இடத்திலும் சமூக விலகலைக் கடைப்பிடிப்பார்கள். இந்த லட்சணத்தில் டாஸ்மாக் கடைகளுக்குக் காவல்துறை பாதுகாப்பு தரப்பட்டுள்ளது" என்றார்.