மனிதன் பேசத் தொடங்கிய காலத்திலேயே, தமிழ் என்ற மொழி உருவாகி இருந்தது என்கிறார்கள் தமிழறிஞர்கள். கல்வி மறுக்கப்படுகிற கொடுமையைப் பற்றிப் பேசும் இதே காலத்தில்தான், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எளிய தமிழ் மக்களும் எழுத்தறிவைப் பெற்றிருந்தார்கள் என்ற உண்மையை உலகுக்கு உரைக்கின்றன கீழடி ஆதாரங்கள்.
இத்தனை ஆண்டுகள் ஆனபின்னும் தனக்கான இடத்தை விட்டுக் கொடுக்காமல் இருக்கிறதென்றால், தலைமுறை வித்தியாசமின்றி இங்கு தமிழ்மொழி மூச்சாகக் கலந்திருப்பதுதான் அதற்குக் காரணம். அந்தவகையில், சென்னையைச் சேர்ந்த மூன்றரை வயது குழந்தை பிரணவி, பேசத் தொடங்கியது முதலே தமிழ் மொழி மீதான தனது பற்றினை வெளிப்படுத்தி வருகிறார்.
சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த தங்கதுரை – ராஜஅபிராமி தம்பதிக்குப் பிறந்தவர்தான் பிரணவி. குடும்பத்தில் அனைவருமே இலக்கியத்தில் அதிக ஆர்வம் கொண்டிருந்ததாலோ ஏனோ, பிரணவிக்கும் இயல்பிலேயே தமிழ் ஆர்வம் தொற்றிக் கொண்டது. பல சமயங்களில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் இவருக்கு தாலாட்டு. கொஞ்சம் பல் முளைத்து நடக்கத் தொடங்கியதுமே, பாரதியார் புத்தகங்களை எடுத்துப் புரட்டத் தொடங்கினார். அவரது ஆர்வம் போலவே, பெற்றோரும், தாத்தா பாட்டியும் தமிழ் இலக்கியக் கூட்டங்களுக்கும் அழைத்துச் செல்கின்றனர்.
தற்போது தமிழ்த்தாய் வாழ்த்து, தேசியகீதம், திருக்குறளில் சில அதிகாரங்களும், அதன் விளக்கங்களும், ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், பாரதியார் கவிதைகளில் சில என வெறும் மூன்றரை வயதில் எல்லாவற்றையும் பாடி அசத்துகிறார். அனைத்தையும் பிழையின்றியும், வார்த்தை பிறழாமலும் பாடுவதுதான் பிரணவியின் சிறப்பு. பலரும் திணறும் ‘ழ’கர உச்சரிப்பில் இப்போதே கறாராக இருக்கிறார் பிரணவி.
பிரணவியின் இந்தத் திறமைக்குக் கிடைத்த முதல் மேடையே மிக பிரம்மாண்டமானது. சென்ற ஆண்டு டிசம்பரில் அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற நூல்கள் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி அனைவரையும் கவனத்தையும் ஈர்த்தார். அதேபோல், கடந்த பிப்ரவரி 15ந்தேதி வெற்றித் தமிழர் பேரவையின் மகளிர் அணி நடத்திய திருக்குறள் திருவிழா நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி விழாவைத் தொடங்கி வைத்ததே பிரணவிதான்.
இத்தனை சிறிய வயதில் தமிழ் மொழியைப் பிழையில்லாமல் பாடுவதில் கவனத்துடன் இருந்த பிரணவியின் திறமையை, விழாவுக்குத் தலைமையேற்ற கவிப்பேரரசு வைரமுத்து வியந்து பாராட்டினார். அந்த விழாவின் அடையாளமாக இருந்த பிரணவியின் திறமையைப் பலரும் பாராட்டிச் சென்றனர்.
இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்றார் பாவேந்தர் பாரதிதாசன். அப்படி சின்னஞ்சிறு வயதிலும் தமிழை உயிராகக் கொண்டிருக்கும் பிரணவியின் திறமையை நாமும் பாராட்டலாமே!