5.3.1916 - பிஜு பட்நாயக் பிறந்தார்!
வடநாட்டில் பிறந்து வளர்ந்த பிஜு பட்நாயக் தமிழகத்தின் எலியும் – பூனையுமான திமுக – அதிமுக என்கிற இரண்டு கட்சிகளை இணைக்க பேச்சுவார்த்தை நடத்தி அது தோல்வியில் முடிந்தது.
பிஜு பட்நாயக் – ஒரிசா மாநிலம் பெல்லகுந்தா என்ற கிராமத்தில் லட்சுமிநாராயணன் என்பவரின் மகனாக 5.3.1916ந்தேதி பிறந்தார். ரவென்ஷா கல்லூரியில் படித்து முடித்தார். விளையாட்டில் ஆர்வமாக கலந்துக்கொண்ட இவர் பல்கலைகழக கால்பந்து மற்றும் ஹாக்கி அணிகளின் கேப்டனாக இருந்தார். ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் முடித்தார். படித்து முடித்துவிட்டு இந்தியாவில் ராயல் வான்படையில் பணியாற்றிக்கொண்டு இருந்தார்.
1940 – 1942 வரை பிரிட்டிஷ் அரசின் சார்பில் இரண்டாம் உலகப்போரில் கலந்துக்கொண்டு போர் புரிந்துள்ளார். பணியாற்றினாலும், இந்தியாவிற்கான சுதந்திர போராட்டங்களில் கலந்து கொள்ள துவங்கினார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்டு 3 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியில் இருந்த பிஜு பட்நாயக்கும் – நேருவும் நெருங்கிய நண்பர்கள். நேருவின் ஆலோசகராகவும் பிஜு இருந்தார்.
இந்தியாவைப்போல, இந்தோனேசியாவும் ஒரு காலத்தில் டச்சுக்காரர்களிடம் அடிமை தேசமாக தான் இருந்தது. இரண்டாம் உலகப்போருக்கு பின்பு இந்தோனேசியா சுதந்திரநாடாக செயல்பட துவங்கியது. இது டச்சுக்காரர்களை கோபம் கொள்ள வைத்தது. டச்சுக்காரர்களுக்கும் – இந்தோனேசிய ஆட்சியாளர்களுக்கும் இடையே மோதல் உருவானது. இந்தோனேசியாவின் கப்பல்படை – விமானப்படை முழுவதும் டச்சுக்காரர்கள் வசமிருந்தது. இதனால் பிறநாடுகளின் உதவிகளை கேட்க இந்தோனேசியா அதிபர் சுக்ரனோ, பிரதமர் ஜஹாங்கீரை அனுப்ப முயன்றார். ஆனால் அவர் செல்ல முடியாதபடி டச்சு அரசாங்கம் கப்பல்படை, விமானப்படை முழுவதும் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த விவகாரம் இந்தியாவின் இடைக்கால பிரதமராக இருந்த நேருவின் கவனத்துக்கு செல்ல அவர் இந்தோனேசியா பிரதமரை அந்த நாட்டில் இருந்து பாதுகாப்பாக அழைத்து வர அனுப்பப்பட்டவர் பிஜு பட்நாயக்.
சிறந்த விமான ஓட்டியான பிஜு பட்நாயக் இந்தோனேசியாவின் ஜாவா தீவுக்கு சென்று அந்நாட்டு பிரதமரை அங்கிருந்து அவரது சொந்த குட்டி விமானத்தில் அழைத்துக்கொண்டு சிங்கப்பூர் வந்தடைந்தார். அங்கிருந்து இந்தியாவுக்கு அழைத்து வந்திருந்தார். ஜேம்ஸ்பாண்ட் பட சாதனை போன்றது இந்த சாதனை. இதனால் தான் அவருக்கு பூமிபுத்ரா என்கிற விருதை வழங்கி இந்தோனேசியா இன்றுவரை கொண்டாடிவருகிறது. அதே போல் காஷ்மீர் இந்தியாவுடன் இணைப்பு விவகாரத்தில் இந்திய இராணுவ வீரர்களை காஷ்மீரில் இறக்கிவிட்ட நிகழ்வு மயிர் கூச்செரியும் நிகழ்வு.
இப்படி இந்தியாவை ஒட்டிய தேசங்களான நேபாளம், இந்தோனேசியா போன்ற நாடுகளின் சுதந்திர போராட்டத்துக்கு தீவிரமாக ஆதரவு அளித்து வந்தார் பிஜு பட்நாயக். இதனால் இந்தியாவின் கடற்கொள்ளையர் என அழைக்கப்பட்ட பிஜு பட்நாயக் இறந்தபோது, இந்தோனேசியா அரசு தன் நாட்டு கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டது.
1946 முதல் அவர் தேர்தலில் நின்று சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று வந்தார். 1961 ஜீலை 21ந்தேதி காங்கிரஸ் கட்சியின் ஒரிசா மாநில தலைவராக இருந்த பிஜு பட்நாயக், அம்மாநில முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போது அவரது வயது 45 தான். 2 ஆண்டுகள் தான் அந்த பதவியில் இருந்தார். நேரு மறைவுக்கு பின் இந்திராகாந்தியின் நண்பராக இருந்தாலும் இருவருக்குள்ளும் மோதல் வந்து இதனால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி 1989ல் உட்கல்காங்கிரஸ் என்கிற மாநில கட்சியை தொடங்கி தேர்தலை சந்தித்தார். அதோடு, அப்போது இந்திராகாந்தி, இந்தியாவில் கொண்டு வந்த அவசர நிலைப்பிரகடணத்தின்போது, பிஜு பட்நாயக்கும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவசர நிலை விலக்கிக்கொள்ளப்பட்ட பின் நடைபெற்ற நாடாளமன்ற பொதுத்தேர்தலில் எம்.பி பதவிக்கு போட்டியிட்டார். அதில் வெற்றிபெற்று ஜனதா ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்தார்.
1979 செப்டம்பர் மாதம் டெல்லியில் இருந்த முதலமைச்சராக இருந்த அதிமுக நிறுவனர் எம்.ஜி.இராமச்சந்திரனை சந்தித்து திமுகவும் – அதிமுகவும் இணைய வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்தினார். சென்னை வந்து கலைஞருடன் பேசினார், பின்னர் கலைஞரும் – எம்.ஜி.ராமச்சந்திரனும் சந்தித்து பேசினார்கள். வெற்றிகரமாக நடந்து முடிந்தது பேச்சுவார்த்தை. ஆனால் இணைப்பு சாத்தியமாகவில்லை இதுப்பற்றி திமுக தலைவர் கலைஞர் தனது சுயசரிதையான, நெஞ்சுக்கு நீதியின் மூன்றாம் பாகத்தில் விளக்கமாக எழுதியுள்ளார். பின்னர் ஒருமுறை, பன்ருட்டி இராமச்சந்திரன் தான் திமுக – அதிமுக இணைப்பை தடுத்தார் என பகிரங்கமாக பேசினார். பிராந்திய கட்சிகள் வலிமையாக இருந்தால் தான் தேசிய கட்சிகளை எதிர்க்க முடியும், மாநில நலனை காக்க முடியும் என்ற கருத்தை உடையவர். அதனாலே திமுக – அதிமுக இணைய முயற்சி செய்தார்.
ஒரிசாவின் முதலமைச்சராக முதல்முறையாக 1960ல் தேர்ந்தெடுக்கப்பட்டார் பிஜு பட்நாயக். அதன்பின் மத்திய பதவிகளில் இருந்த பிஜு பட்நாயக் மீண்டும் 1990 ல் முதல்வரானார். 1995 வரை முதல்வராக இருந்தார். இவரது மனைவி கியான். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். நவீன்பட்நாயக் என்கிற மகன் அப்பாவுக்கு பின் முதலமைச்சர் பதவிக்கு வந்தார். மகள் இந்தியாவின் சிறந்த பத்திரிக்கை எழுத்தாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1997 ஏப்ரல் 17ந்தேதி உடல்நலக்குறைவால் மறைந்தார் பிஜு பட்நாயக். அவர் மறைந்தாலும் அவரால் பலன் பெற்ற இந்தோனேசியா உட்பட எந்த நாடும் மறக்கவில்லை.