Skip to main content

"தமிழர்களின் பின்னால் நிற்க தைரியம் இருக்கா?" - சத்யராஜ் ரஜினியை தொடர்ந்து சீண்டக் காரணம்!

Published on 09/04/2018 | Edited on 09/04/2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடிகர் சங்கம் சார்பில் மௌனப் போராட்டம் நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம், சூர்யா, சத்யராஜ் உட்பட பிரபல நடிகர்கள் பலர் பங்கேற்றனர்.

 

sathyaraj speech


இதில் நடிகர் சத்யராஜ் பேசும்போது, "தம்பிகளின், தோழர்களின் உணர்வுகளை மதிக்கிறேன். யாரும் பேசாத போது நான் பேசுவது நாகரிகமாக இருக்காது. நான் எப்பொழுதும் தமிழர்களின் பக்கம், தமிழ் உணர்வுகளின் பக்கம். அதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இருக்காது. சபை நாகரிகம் கருதி, நடிகர் சங்கம் எடுத்த முடிவுக்குக் கட்டுப்பட்டு..." என்று அவர் பேசி முடிப்பதற்குள் கூட்டத்தில் இருந்த ஒருவர் சத்யராஜை பேசச் சொல்லி வற்புறுத்தினார். உடனே சத்யராஜ், "வேண்டும்... வேண்டும்... காவிரி மேலாண்மை அமைத்தே தீர வேண்டும்! மூடுங்கள்... மூடுங்கள்... ஸ்டெர்லைட் ஆலையை மூடுங்கள்!" என்று முழக்கமிட்டார். தொடர்ந்து, "தமிழர்களின் உணர்வுகளை மதியுங்கள். எந்த அரசாக இருந்தாலும் அஞ்சமாட்டோம், இராணுவமே வந்தாலும் அஞ்சமாட்டோம், எந்த கெடுபிடிக்கும் அஞ்சமாட்டோம். குரல் கொடுப்பவர்கள் தைரியமிருந்தால் தமிழர்களின் பின்னால் நில்லுங்கள். இல்லை ஓடி ஒளிந்துகொள்ளுங்கள்" என்று கூறி பேச்சை முடித்தார். 

 

rajini vs sathyaraj


சத்யராஜின் இந்தப் பேச்சு, காவிரி பிரச்சனையில் அழுத்தமாகக் குரல் கொடுக்காமல் இருக்கும் ரஜினிகாந்தை குறிப்பதே என்று பலரும் பேசினார்கள். ரஜினியைக் குறிப்பிட்டு பேசாத போதும் இந்த சந்தேகம் வருவதற்கு காரணம், சத்யராஜின் பழைய வரலாறு தான். ரஜினிகாந்த் நடித்த 'சிவாஜி' திரைப்படம் தொடங்கப்பட்ட பொழுது, சுமன் நடித்த 'ஆதிசேஷன்' வில்லன் பாத்திரத்துக்கு முதலில் அணுகப்பட்டவர் சத்யராஜ்தான். அப்பொழுது, "இந்தப் படத்துக்குப் பிறகு ரஜினி என் படத்தில் வில்லனாக நடிக்கத் தயாரென்றால் நான் இந்தப் படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்கிறேன்" என்று கூறி வாய்ப்பை மறுத்தார். பிறகு, அவர் ஷங்கர் இயக்கத்தில் 'நண்பன்' படத்தில் குணச்சித்திர பாத்திரத்தில் நடித்தார், 'சென்னை எக்ஸ்பிரஸ்' இந்திப் படத்தில் கிட்டத்தட்ட வில்லனாக நடித்தார், பல படங்களில் அது போன்ற பாத்திரங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொழில் ரீதியாக இப்படி என்றால், பொது மேடைகளிலும் பல முறை ரஜினியை விமர்சித்து பேசியிருக்கிறார், சத்யராஜ். 

கடந்த பிப்ரவரி மாதம் திராவிட இயக்கத் தமிழர் பேரவை, சுப.வீரபாண்டியன் நடத்திய மாநாட்டில் ரஜினி, கமல் இருவரின் அரசியல் வருகையை கிண்டல் செய்து, "எனக்கு எந்தக் குறையும் இல்லை. சினிமாவில் இருந்து இன்னும் மூன்று தலைமுறைக்கு தேவையான சொத்தை சேர்த்துவிட்டேன். நானே இப்படியென்றால் மத்தவங்களை யோசிச்சுக்கங்க. அப்படியிருக்கும்போது, நான் அரசியலுக்கு வந்து தோத்துட்டா எனக்கு எதுவுமே இழப்பில்லை. ஆனா ஜெயிச்சுட்டா நீங்க காமெடி ஆகிருவீங்க. நடிகனுக்கு எல்லாம் தெரியும்னு நினைச்சு ஓட்டு போட்றாதீங்க" என்று பேசினார்.    

 

rajini reaction

         

ஏற்கனவே 2008ஆம் ஆண்டு ஒகேனக்கல் பிரச்சனையில் தண்ணீருக்காகவும் கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் தாக்கப்பட்டதற்கு எதிராக திரையுலகம் நடத்திய கண்டன கூட்டத்தில், "ஒரு நடிகன் பேரைச் சொன்னா கைதட்டல் வரும். ஆனா, அப்படி நடிகன் பேரைச் சொல்லி கைதட்டல் வாங்குறதுக்கு பதிலா நான் நாக்கைப் புடுங்கிட்டு சாவேன். அதிகமா சம்பளம் வாங்குறவன் பேரச் சொன்னா நீ அதிகமா கைதட்டுவ. நான் அப்படி சொல்லி கைதட்டல் வாங்கமாட்டேன். இது கண்டன கூட்டம். கூத்தடிக்கிற இடமில்லை" என்று ஆவேசமாகக் கூறினார். தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்குபவர்களான ரஜினியும் கமலும் அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்தார்கள். மேலும், "எனக்குப் பிடிச்ச பேச்சாளர் வாட்டாள் நாகராஜ் என்று நமக்கு சம்மந்தப்பட்டவர்களே கூறுகிறார்கள். எனக்கு பிடிச்ச பேச்சாளர் அண்ணா என்று அவர்களிடம் நாம் எப்படி கூற முடியும்? வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்னு இனிமேலும் சொல்லாதீங்க" என்று கடுமையாக ரஜினியை சாடினார். அந்த மேடையில் பேசிய ரஜினிகாந்த், "நமக்கு உரிமையுள்ள தண்ணீரை தர மறுப்பவர்களை உதைக்க வேண்டாமா?" என்று ஆவேசமாக பேசினார். அதன் பின்னர் 'குசேலன்' படம் கர்நாடகாவில் வெளியாவதை எதிர்த்து வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட கன்னட அமைப்புகள் போராடிய போது, மன்னிப்பும் கேட்டார்.           

இப்படி ரஜினியை சத்யராஜ் விமர்சிப்பது அவ்வப்போது நடந்து வருகிறது. அதற்கு ரஜினிகாந்த் எப்பொழுதும் மறைமுகமாகக் கூட பதிலளித்ததில்லை. எப்பொழுதும் போல அமைதியாகவே கடக்கிறார். அவரது அமைதிதான் இப்படி விமர்சிக்கப்பட காரணம், அதை அறியாதவரும் இல்லை அவர். 

சார்ந்த செய்திகள்