Skip to main content

18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் போராட்டங்களில் கலந்துகொள்ளலாமா?

Published on 28/02/2020 | Edited on 28/02/2020
n

 

குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக சேலத்தில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் 18வயதுக்கு கீழுள்ள சிறுவர், சிறுமியர்கள் பங்கேற்க  தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில்  நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு, போராட்டங்களில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பங்கேற்க தடை விதிக்கும் வகையில் சட்ட விதிகள் உள்ளனவா? என கேள்வி எழுப்பினர். 

 


குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிரான போராட்டங்களில் குடும்பம் குடும்பமாக மக்கள் கலந்து கொண்டுவரும் நிலையில்,  சேலத்தைச் சேர்ந்த கண்ணன்,   “சிஏஏவுக்கு எதிராக சேலம் கோட்டை பகுதியில் பிப்ரவரி 14ஆம் தேதி முதல் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் பொது மக்களுக்கு இடையூறாகவும். இயல்பு வாழ்க்கை பாதிக்கும் வகையிலும் உள்ளது. குறிப்பாகப் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. காவல்துறை அனுமதியின்றி நடைபெறும் இந்த போராட்டத்துக்குத் தடைவிதிக்கச் சேலம் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும். சேலத்தில் நடைபெறும் சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் 18 வயது பூர்த்தியடையாத சிறுவர் சிறுமியர் பங்கேற்க தடை விதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த மனு மீதான விசாரணையில், போராட்டங்களில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பங்கேற்க தடை விதிக்கும் வகையில் சட்ட விதிகள் உள்ளனவா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அவ்வாறு உத்தரவுகள் இருந்தால் அதனை தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டு வழக்கை மார்ச் 2ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.