நகைச்சுவை நடிகர் விவேக் இன்று (17.04.2021) காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய கவிஞர் வைரமுத்து, அவருடனான தன்னுடைய அனுபவங்களைப் பகிந்துகொண்டார். அதில், "என் நண்பர், சின்ன கலைவாணர் என்று பெருமையோடு அழைக்கப்பட்ட நடிகர் விவேக் மறைந்துவிட்டார் என்று சொல்வதா இல்லை, சிரிப்பு செத்துவிட்டது என்று சொல்வதா, தமிழ்த் திரையின் வழியே பகுத்தறிவைப் பரப்பிய ஒரு சீர்திருத்தக் கலைஞன் மறைந்துவிட்டார் என்று சொல்வதா? என்னை பொறுத்தவரையில் ஒரு சகோதரனை இழந்துவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். என் கவிதைகளின் கொள்கை பரப்பு செயலாளரை நான் இழந்துவிட்டேன். தமிழ்த் திரையுலகம் நீண்ட காலமாக சேமித்து வைத்திருந்த செல்வத்தை இழந்துவிட்டது. நகைச்சுவை நடிகர்கள் வருவார்கள், இருக்கிறார்கள். அவர்களில் நடிகர் விவேக் தனி தடம் பதித்தவர். நகைச்சுவையில் கொள்கை இருக்க வேண்டும், சீர்திருத்தம் இருக்க வேண்டும், பகுத்தறிவு இருக்க வேண்டும் என்று தன் கலையில் தன்னை செதுக்கிக்கொண்டவர். இன்று அவர் கொண்டாடப்படுவதற்கு காரணம் அவரின் கலை சேவை மட்டும் அல்ல, அதை தாண்டி அவரின் சமூக அக்கறை.
ஒரு கலைஞனுக்குத் தேவையான சமூக அக்கறையை கலைக்கு வெளியிலும் அவர் பின்பற்றினார் என்பதுதான் நடிகரின் விவேக்கின் தனிச்சிறப்பு. ரசிகர்கள் மட்டுமா துக்கம் கொண்டாடுகிறார்கள், கலையுலகம் மட்டுமா துக்கம் கொண்டாடுகிறது, மனிதர்கள் மட்டுமா இன்று துக்கப்படுகிறார்கள். இல்லை, விவேக் நட்ட மரங்களும், செடிகளும், கன்றுகளும் இன்றைக்கு அவரின் இழப்புக்காக கண்ணீர் சிந்துகின்றன. எனக்கும் அவருக்கும் நல்ல நட்பு உண்டு. என்னை, என்னுடைய எழுத்தை திரைக்குப் பின்னால் இருந்து கொண்டாடியவர்களில் பெரும் பங்குகொண்டவர் நடிகர் விவேக். அவரும் நானும் ஒரே வகுப்பில் யோகா பழகிக்கொண்டோம். ஓராண்டாக எனக்குப் பக்கத்தில் இருந்து அவர் யோகா கற்றுக்கொண்டார், பழகினார். இப்போது நான் தனியாக யோகா செய்கிறேன். என்னுடைய பக்கத்து இடம் காலியாகிவிட்டது. நண்பர் விவேக் இவ்வளவு விரைவில் நம்மை விட்டுப் போவார் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. 59 வயது என்பது இளமை தணிந்த வயது. இனிமேல்தான் ஒருவன் சேவை செய்ய வேண்டிய வயது. பக்குவப்பட்ட வயது. சமூகத்தை அறிகின்ற வயது. இந்த வயதில் மரணம் அவரை பறித்துக்கொண்டதில் எங்களுக்கு சம்மதம் இல்லை. மரணமே உனக்கு சிரிக்கத் தெரியாது, அதனால்தான் சிரிப்பைத் திருடிவிட்டாய்" என்றார்.
விவேக் தொடர்பாக நடிகர் யோகிபாபு பேசியதாவது, "விவேக் அவர்களின் மரணம் அதிர்ச்சியான ஒரு சம்பவம். அவருடன் நான் குறைந்த அளவிலான படங்களில் மட்டுமே நடித்தேன். ஆனால் நிறைய அறிவுரை வழங்குவார். அண்ணன் தம்பி மாதிரி பழகுவார். கடைசியாக ‘அரண்மனை’ மற்றும் ‘பிகில்’ படங்களில் அவருடன் இணைந்து நடித்தேன். நான் அவர்கிட்ட பலமுறை சொல்லியிருக்கிறேன், நாம் இணைந்து நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று. ஆனால் தற்போது அது முடியாமல் போய்விட்டது. நான் தமிழ் சினிமாவில் பார்த்த வரைக்கும் ஒரு காமெடி நடிகரை மற்றொரு காமெடி நடிகர் தூக்கிவிடுகிறார் என்றால், அவர் இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும். என்னிடம் கூட நிறைய மரம் நட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்" என்றார்.