இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை, முன்பைவிட வெகுதீவிரமாகப் பரவிவரும் சூழலில், கொரோ னாவுக்கு எதிரான யுத்தத்தில் முன்நின்று பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு, கடந்த 2020, மார்ச் மாதத்தில் அறிவிக்கப் பட்டிருந்த ரூ.50 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் திட்டம் முடிவுக்கு வந்ததாக வெளியான தகவல், மருத்துவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தடுப்புப் பணியில் முன்களப் பணியாளர்களாகச் செயல்படுவோர், உயிரிழக்க நேர்ந்தால், அவர்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் ரூபாய் காப்பீட்டுத்தொகை கிடைக்கும். இதுவரை 287 பேருக்கு காப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டுள்ள தாகக் குறிப்பிட்டுள்ள மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், இந்த காப்பீடு தற்போது முடிவுக்கு வருவதாகவும், இத்திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த வேறொரு காப்பீட்டு நிறுவனத்துடன் பேசிவருவதாகவும் கூறியிருக்கிறது. இதனை எதிர்க் கட்சித்தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர் சித்துள்ளார். கொரோனாவுக்கு எதிராகப் போரா டும் சுகாதாரப் பணியாளர்களிடம் நன்றியில்லாமல் நடந்துகொண்டுள்ளதாகவும், தற்போது அவர்கள், காப்பீடு இல்லாத சூழலில் பணியாற்றிவருகிறார்கள் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
சுகாதாரப்பணியாளர்களுக்கு இதுவரை மத்திய அரசு அறிவித்த காப்பீட்டுத் திட்டத்தின் மூலம், காப்பீட்டுத்தொகை உரியவர்களுக்குக் கிடைத்திருக்கிறதா, இத்திட்டம் நன்முறையில் செயல்படுத்தப்படுகிறதா என்பது குறித்து, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திர நாத்திடம் கேட்டபோது, ""மத்திய அரசு அறிவித்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்மூலம், கடந்த ஓராண்டு காலத்தில் உயிரிழந்த சுகாதாரப் பணியாளர்களுக்கு, காப்பீட்டுத்தொகை முறையாக வழங்கப்பட வில்லை. கொரோனாவுக்கு எதிரான போரில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்களுக்கு இன்சூரன்ஸ் தொகையை வழங்குவதற்கு, முதலில் அதுகுறித்த விவரங்கள் மத்திய அரசிடம் இருக்க வேண்டும்.
கொரோனா நோய்த்தொற்றுப்பரவல் தொடங்கியதிலிருந்து கடந்த மாதம் வரைக்குமே, 800க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால் இந்த டேட்டாவையே மத்திய அரசும், மாநில அரசும் சரியாகக் கணக்கெடுக்கவில்லை. வெறும் 120 பேர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே குறிப்பிட்டுள்ளார். மாநில அரசோ, தனியாரிடம் இதுகுறித்த விவரங்களைக் கேட்டுள்ளது. இப்படி மத்திய, மாநில அரசுகளே, கொரோனாவுக்கு எதிரான போரில் உயிரிழந்த மருத்துவர்களை மதிக்காமல், பொறுப்பில்லாமல் செயல்படும்போது, எப்படி உயிரிழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைத்திருக்கும்?
'மருத்துவர்களுக்கு நாங்கள் உதவுகிறோம்' என்று வெளியில் காட்டிக்கொள்ள மட்டுமே இந்த இன்சூரன்ஸ் அறிவிப்பு பயன்படும். இப்படி கொரோனாவுக்கு எதிரான போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் குறிப்பிட்டால், அந்த இன்சூரன்ஸ் நிறுவனத்துக்குத்தான் லாபமாக அமையுமேயொழிய, சுகாதாரப்பணி யாளர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் பேரிழப்பு தான். கொரோனாவால் உயிரிழந்தவர்களைக் கணக்கிடுவதில் இன்னொரு நடைமுறைக் குழப்பமும் இருந்தது. இதில், ஆர்.டி. பி.சி.ஆர். டெஸ்ட்டில் நெகடிவ் என்று வந்தவர்களைக் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களாகக் கணக்கில் கொள்வதில்லை. ஆனால், இதில் நெகடிவாக வந்தாலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உண்டு. எனவே இத்தகைய விதிமுறைகளால் உரியவர்களுக்கு இழப்பீடு கிடைக்காமல் போகிறது.
இதுபோன்ற குழப்பங்களைத் தவிர்க்க, அரசாங்கம் வழங்க நினைக்கும் இழப்பீட்டுத் தொகையை, இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலமாகச் செய்யாமல், நேரடியாகவே வழங்க வேண்டும். மத்திய அரசு 50 லட்சம் ரூபாயும், மாநில அரசு தனது பங்காக 50 லட்சம் ரூபாயும் வழங்கி, அவர்களின் குடும்பத்தின் எதிர்காலத்தைப் பாதுகாத்திட வேண்டும். இதுவே கொரோனா வுக்கு எதிரான போரில் உயிரையும் துச்சமாக மதித்து, 24 மணி நேரமும் போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்கள வீரர்களுக்குச் செய்யும் மரியாதையாக இருக்கும்'' என்றார்.
கொரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கியதுமே கொரோனா நோயாளிகளை, அவர்களைச் சார்ந்தவர்களே நெருங்குவதற்கு அச்சப்படும் சூழலில், அந்த நோயாளி களுக்கு உரிய சிகிச்சைகளை அளித்து குணப்படுத்துவது சவாலான விஷயமாகும். கொரோனா நோயாளிகளிடமிருந்து தங்களுக்கு நோய் பரவிவிடாமலிருக்க மருத்துவர்கள் நாள்முழுக்க அணியும் பாதுகாப்பு உடைகள், அவர்களுக்கு மிகுந்த சிரமத்தைத் தரக்கூடியவை. எனினும், நோயாளிகளைக் குணப்படுத்த வேண்டுமென்ற உயரிய நோக்கத்துக்காகத் தங்களுக்கு நேரும் சிரமத்தைப் பொறுத்துக் கொண்டு சேவையாற்றும் மருத்துவர்கள், தெய்வத்துக்கு நிகரானவர்கள்.
அவர்களைப் போற்றுவதாகக் கூறிக்கொண்டு, ஹெலிகாப்டரில் பறந்து, மருத்துவமனையின் மீது பூக்களைத் தூவிய மத்திய அரசின் ஸ்டன்ட்டை விட, அவர்களுக்கு உளப்பூர்வமான மரியாதையை வழங்குவதே அவசியமாகும். எனவே, நிறுத்தப் பட்டுள்ள இன்சூரன்ஸ் திட்டத்தை மீண்டும் தொடங்குவது அல்லது நேரடியாகக் இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசே வழங்குவது என ஏதேனுமொரு வழியில், மத்திய, மாநில அரசுகள் துரிதமாகச் செயல்பட்டால்தான், மருத்துவர்களும் எவ்விதத் தொய்வுமின்றி, முழு ஈடுபாட்டோடும், எதிர்கால நம்பிக்கையோடும் தங்களது சேவையைத் தொடர்வார்கள்.
-தெ.சு.கவுதமன்