Skip to main content

7 ஆண்டுகளுக்கு முன் இதே தினம், 'சச்சின் சச்சின்' என்ற சத்தத்தால் மும்பையே அதிர்ந்தது!!

Published on 16/11/2018 | Edited on 16/11/2020

வான்கடே மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம், வெற்றிக்கு அருகில் இருந்த இந்திய அணி அந்த ஆட்டத்தை விரைவாக வென்றுவிடக்கூடாது என்பதே பெரும்பாலான  இந்திய ரசிகர்களின் ஒருமித்த வேண்டுதலாக இருந்தது. காரணம், களத்தில் இருந்த சச்சினின் கடைசி ஆட்டம் அது. சச்சின் அவுட் ஆனாலே டீவியை ஆஃப் செய்துவிட்டு செல்லும் ரசிகர்கள்,  இனி அவர் விளையாடவே மாட்டார் என்றபோது அப்படித்தானே வேண்டிக்கொள்வார்கள்.

 

sac

 

இப்படிப்பட்ட தீவிர ரசிகர்களைக் கொண்ட சச்சின் தன் வாழ்வில் பல்வேறு ஏற்ற இறக்கங்களையும், சர்ச்சைகளையும் கடந்தே வந்துள்ளார். தனது 16 வது வயதிலேயேசர்வதேச போட்டிகளில் களமிறங்கிய சச்சின் பெரிய ஜாம்பவான்களுக்கு மத்தியில் ஒரு சிறுவனாக தன் ஆட்டத்தை தொடங்கினார். வாசிம் அக்ரம், வகார் யூனிஸ், பிரெட் லீ, ஷேன் வார்னே என பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் நிறைந்த காலம் அது. அப்படிப்பட்ட காலத்தில் பேட்டிங்கில் பல்வேறு சாதனைகள் புரிந்தவர் சச்சின். 1994 ல் சச்சின் முதன்முதலில் பேட்டிங்கிற்கான ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை பிடித்தார்.

 

இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் ஆண்டு சச்சினுக்கு சிறப்பான ஆண்டாக அமைந்தது. ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்த சச்சின் தொடர்ந்து ஒரு ஆண்டுக்கு மேல் அந்த இடத்தில் நீடித்தார். ஆனால் 2001 ல் மிக சிறப்பாக விளையாடிய சச்சின், 2002 ல் ஃபார்ம் அவுட்டாகி சற்று சொதப்பினார். அவர் மீது விமர்சனம் எழ ஆரம்பித்த நேரம், சரியாக 2003 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருதை வென்றாலும், இந்தியா அந்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுடன் போராடி தோற்றது.

 

sac

 

சிறு வயதில் கபில்தேவ் உலகக்கோப்பை வென்றதை பார்த்து, அது போல் நாமும் வெல்ல வேண்டும் என்ற கனவுடன் கிரிக்கெட்டுக்கு வந்த சச்சினுக்கு அந்த கனவு நிறைவேற 21 ஆண்டுகள் ஆனது. 2011 ல் அந்த வெற்றிக்கு பிறகு இந்திய அணியே அவரை தொளில் சுமந்து மைதானத்தை சுற்றி அவருக்கு மரியாதையளித்தது. அதிக ரன்கள், சதங்கள், அதிக நாட்கள் விளையாடியவர் என எண்ணிலடங்கா சாதனைகளை கொண்ட இந்த சாதனை மன்னன், சர்ச்சைகளுக்கும் விதிவிலக்கல்ல. பயிற்சியாளர் கிரெக் சேப்பல் மோதல், சைமண்ட்ஸ் மற்றும் ஹர்பஜன் சிங் சண்டையில் கருத்து கூறியது, ஃபெராரி காருக்கு வரி செலுத்தாதது, பந்தை சேதப்படுத்தியது, பெட்டிங் விவகாரம் என பல்வேறு சர்ச்சைகளையும் கடந்து வந்துள்ளார்.          

 

இப்படிபட்ட சச்சின் 2013 ல் இதே நாளில்தான் தழுதழுத்த குரலுடன் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ரசிகர்கள் முன்னிலையில் அறிவித்தார். சர்ச்சைகள் எவ்வளவு வந்தாலும் அதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவு சாதனைகளும் அவரை பின்பற்றிக்கொண்டேதான் இருந்தது. அதனால்தான் இன்றளவும் கிரிக்கெட்டின் கடவுளாகவே உள்ளார் சச்சின்.