உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயதான தலித் இளம்பெண், சமீபத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இளம் பெண்ணின் உடலையும் போலீசார் அவசர அவசரமாக தகனம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாதிப்புக்குள்ளான பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்க கடந்த வியாழக்கிமை காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் காங்கிரஸ் கட்சியினருடன் சென்றனர். அவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை.
இன்று மீண்டும் ஹத்ராஸ் செல்ல இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் குழுவுடன், தான் செல்ல இருப்பதாகவும், ஹத்ராஸ் பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றும் ராகுல் காந்தி கூறியிருந்தார். ராகுல் காந்தி வருவதாகக் கூறியதால், உத்தரபிரதேச நொய்டா எக்ஸ்பிரஸ் சாலையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
ராகுல்காந்தி காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சென்றார். காங்கிரஸ் எம்.பி.க்கள் தனி வேனில் வந்தனர். அப்போது பிரியங்கா காந்தி, இன்னோவா காரில் டிரைவர் சீட்டில் அமர்ந்து, தான் கார் ஓட்டுவதாகக் கூறி, ராகுலை பக்கத்தில் அமர சொன்னார். ராகுலும் உடனே இன்னோவா காரில் அமர்ந்தார். பிரியங்கா அசால்டாக இன்னோவா காரை இயக்கினார்.
இதனிடையே ராகுல், பிரியங்கா, காங்கிரஸ் எம்பிக்கள் வருவது அம்மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. எப்படியும் அவர்கள் சந்திக்காமல் திரும்பமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
இதனிடையே ராகுல், பிரியங்கா உள்பட 5 பேர் மட்டுமே பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சந்திக்க அனுமதி அளிப்பதாக உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், காங்கிரஸ் கட்சியினர் அனைவரையும் ஹத்ராஸ்க்கு அனுமதிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பதட்டம் அதிகரித்தது.