மோடிக்கு பக்கோடா வியாபாரிகள் பதில்!
2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் 1 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால், இதுவரை உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகளைப் பற்றிய புள்ளி விவரங்களை மோடி அரசு ஆதாரபூர்வமாக கொடுக்கவே இல்லை.
2011-2012 ஆம் ஆண்டில் 3.8 சதவீதமாக இருந்த வேலையில்லாத் திண்டாட்டம், 2015-2016ல் 5 சதவீதமாக அதிகரித்துதான் மிச்சம். 2018 ஆம் ஆண்டு வேலையில்லாதோரின் எண்ணிக்கை 1 கோடியே 80 லட்சமாக இருக்கிறது.
இதுகுறித்து ஜீ டி.வி. நேர்காணலில் கேட்டபோது, பிரதமர் கொடுத்த பதில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அது என்ன பதில்?
"பக்கோடா விற்பதன் மூலம் ஒரு நபர் 200 ரூபாய் சம்பாதிக்கிறார். அதுவும் வேலைவாய்ப்புதானே" இதுதான் ஜீ டி.வி. பேட்டியில் பிரதமர் கொடுத்த பதில்.
மோடியின் பேட்டிக்கு பதில் அளித்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், "பிச்சையெடுப்பவர்கூட நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் சம்பாதிக்கிறார். அதுவும் வேலைவாய்ப்புதான் என்று பிரதமர் கூறுவாரா?" என்று வினா எழுப்பினார்.
உடனே, பக்கோடா விற்பவர்களை நேரிலேயே கேட்டு அவர்களுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.

ஜெயப்பிரகாஷ் என்பவர் பக்கோடா போடுவதன் மூலம் 200 ரூபாய் சம்பாதிப்பதாக கூறினார். ஆனால், படிப்பறிவில்லாமல், வேலைக்கு சிரமப்படும் நிலைமை தனது மகனுக்கு வரக்கூடாது என்பதற்காகவே வேலை செய்வதாக கூறினார். பக்கோடா விற்று படிக்க வைத்த மகன், இப்போது வேலையில்லாமல் இருப்பதாகவும் அவர் வருத்தப்பட்டார்.
10 வருடமாக தனது உறவினர் இருவருடன் டெல்லியி்ல பக்கோடா வியாபாரம் பார்க்கும் ராஜேஷ்குமார், மொத்தமாக தங்களுக்கு நாள் ஒன்றுக்கு 600 ரூபாய் கிடைப்பதாகவும், படிப்பறிவு இல்லாததால் இந்த வேலையை செய்வதாகவும் கூறினார். வாழ்க்கையை ஓட்ட ஏதேனும் ஒரு வேலை செய்தாக வேண்டுமே என்பதற்காக இதைச் செய்வதாகவும் அவர் கூறுகிறார்.
குல்தீப் என்பவரும் இதே கருத்ததைத்தான் தெரிவித்தார். மாதம் 7 ஆயிரம் சம்பாதித்தாலும், வேலை கிடைக்காததால்தான் இதை செய்வதாக அவர் கூறினார்.
ஆனால், பொருளாதார வளர்ச்சி குறித்து மீண்டும் மீண்டும் ஆதாரமற்ற பொய்களையே பிரதமர் மோடியும், நிதியமைச்சர் ஜெட்லியும் கூறிவருவதாக நடுநிலையாளர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.
- ஆதனூர் சோழன்