Skip to main content

நீட் தேர்வுக்கு எதிரான அதிமுகவின் அழுத்தம் மசாஜ் சென்டரில் கொடுப்பதை போல் இருக்கிறது -ரவிசங்கர் அய்யாகண்ணு தடாலடி!

Published on 24/09/2020 | Edited on 24/09/2020
hj

 

 

கடந்த சில நாட்களுக்கு முன் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இருந்த ஒரு டேக் "இந்தி தெரியாது போடா" என்ற வாக்கியம். மத்திய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக இளைஞர்களால் இந்த கருத்து ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டது ஒருபுறம் என்றால், அதையே டீ சர்ட்டில் ப்ரிண்ட் செய்து பிரபலங்கள் அணிந்து வந்தது அந்த வாக்கியத்துக்கு மேலும் வலுசேர்த்தது.

 

இதுஒருபுறம் இந்திய அளவில் விவாதம் ஆன நிலையில் நீட் தொடர்பான அழுத்தத்தில் தமிழக மாணவர்கள் மூவர் கடந்த வாரம் தற்கொலை செய்துகொண்டனர். இது தமிழகத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரும்பாலான தமிழக அரசியல் கட்சிகள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்தன. இதுஒருபுறம் அனலாக எரிந்துகொண்டிருந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் சூர்யா அனல் கக்கும் வார்த்தைகளை கொண்ட இரண்டு பக்க அறிக்கையை வெளியிட்டார். அரசியல் கட்சிகளையும் தாண்டி நடிகர் சூர்யாவின் அறிக்கை இந்திய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியது. இதனால் அதிருப்தி அடைந்த பாஜக அவரை கண்டித்தது. முக்கிய தலைவர்கள் எல்லாம் சூர்யா சினிமாவில் வசனம் பேசுவதைபோல் பேசக்கூடாது என்று கடுமையான வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தி பேசினார்கள். இந்நிலையில் இதுதொடர்பாக பல்வேறு கேள்விகளை திராவிட இயக்க சிந்தனையாளர் ரவிசங்கர் அய்யாகண்ணு அவர்களிடம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

 

நீட் தேர்வு தொடர்பாக ஆதாரப்பூர்வமான பல்வேறு தகவல்களை முகநூல்களில் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறீர்கள். இதுதொடர்பான வாதப்பிரதிவாதங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கடந்த வாரம் நீட் தேர்வு நடைபெறுவதற்கு முன்பு மூன்று மாணவர்களை நாம் இழந்திருக்கிறோம். தமிழக சட்டப்பேரவையில் கூட இதுதொடர்பான காரசார விவாதங்கள் நடைபெற்றது. முதற்கட்டமாக இந்த சம்பவங்களை எப்படி பார்க்கிறீர்கள்? 

 

இந்த போராட்டமே எந்த பார்வையில் அணுகப்படுகின்றது என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து உண்டு. திமுக தொடர்ந்து 2010 முதல் நீட் தேர்வை எதிர்த்து வருகின்றது. மற்ற கட்சிகளும் நீட் தேர்வை எதிர்ப்பதில் ஆதரவாக இருந்து வருகிறார்கள். இது சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் தொடர்ந்து எதிரொலித்து வருகின்றது. கடந்த வாரம் தொடங்கிய பாராளுமன்ற கூட்டத்தொடரும் திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் பதாதைகளை வைத்து கொண்டு இந்த நீட் தேர்வு எதிராக போராடினார்கள். மாணவர்கள் தற்கொலைக்கு பிறகு திமுக தலைவர் வெளியிட்ட அந்த அறிக்கைகள் பரபரப்பாக பேசப்பட்டது. நீட் தேர்வை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒழிப்போம் என்று தெளிவாக கூறியிருந்தார். ஏற்கனவே தேர்வு எழுதியவர்களுக்கும் புதிதாக சீட் ஒதுக்கி கொடுப்போம் என்ற அளவில் அந்த உரையாடல் இருந்தது. திமுகவுக்கு இந்த பெருமை போகக்கூடாது என்பதற்காக பல்வேறு நாடகங்கள் தற்போது நிகழ்த்தப்பட்டு வருகின்றது.

 

ஆனால் சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் மற்றும் அமைச்சர் விஜய பாஸ்கர் ஆகிய இருவரும் திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருக்கும் போதுதான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது என்று பேசினார்களே?

 

தமிழ்நாட்டுக்கு நீட் எப்போது வந்தது? 2017ம் ஆண்டுதான் அனிதா இறந்தார். அப்போது யார் ஆட்சியில் இருந்தார்கள். இவர்கள் தானே ஆட்சியில் அப்போதும் இருந்து கொண்டிருந்தார்கள். திமுக ஆட்சியில் நீட் வரவில்லை, முதல்வராக ஜெயலலிதா இருக்கின்ற வரையிலும் கூட நீட் தேர்வு தமிழகத்தில் வரவில்லை. தானாக ஆட்சி நடத்த முடியாத துணிவில்லாத ஆட்சியாளர்கள் எப்போது தமிழகத்திற்கு வந்தார்களோ அப்போதுதான் தமிழகத்திற்கு நீட் தேர்வு வந்தது. அதிமுக அழுத்தம் கொடுக்கிறார்கள் என்று சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது.  நீட் தேர்வுக்கு அவர்கள் கொடுக்கும் அழுத்தம் மசாஜ் சென்டரில் கொடுக்கும் அழுத்தத்தை போலத்தான் இருக்கிறது. 

 

ஒட்டுமொத்த சட்டப்பேரவையும் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினார்கள். ஆனால் அந்த தீர்மானம் எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை என்று மத்திய அமைச்சர் கூறுகிறார். அதை பற்றி கேட்க மாநில அரசுக்கு தோணவில்லை. அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு கடந்து போனார்கள்.  கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் ஆளும் அதிமுக அரசு நீட் தேர்வு தொடர்பாக என்ன செய்தது என்று பாருங்கள். இந்தியாவில் எந்த அரசியல் கட்சியும் செய்யாத வேலைகளை திமுக தொடர்ந்து செய்து வருகின்றது. திமுக தொடர்ந்து நீட் தேர்வை எதிர்த்து வருகின்றது. ஆளும் அதிமுகவிடம் கேட்க வேண்டிய கேள்விகளை திமுகவிடம் தொலைக்காட்சிகள் தொடர்ந்து கேட்டு வருகின்றது. இது எப்படி சரியாக இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை. 

 

திமுக இதில் அரசியல் செய்கிறது, எதற்காக நீட் தேர்வுக்கு முதல் நாள் இனி நீட் தேர்வு இருக்காது என்று திமுக சொல்ல வேண்டும் என்று எதிர்தரப்பினர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்களே? சூரியாவின் அறிக்கையையும் விமர்சனம் செய்கிறார்களே?

 

கல்வி தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கு எதிராகவும் திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றது. மாணவர்களின் நலனில் அதிக அக்கறை காட்டி வருகின்றது. இந்த சம்பவங்கள் நடைபெற்ற நான்கு தினங்களுக்கு முன்பு கூட நீட் தேர்வுக்கு எதிராக திமுக இளைஞரணியினர் போராட்டங்களை முன் எடுத்தனர். தற்கொலையை வைத்து திமுக அரசியல் பண்ணவில்லை. நீட் தேவையில்லை என்று முதலில் குரல் கொடுத்த இயக்கமும் அதுதான், தற்போது குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்ற இயக்கமும் அதுதான். நீட் தேர்வு வேண்டாம் என்று இந்த கரோனா காலத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் கடிதம் எழுதியதாக கூறினார். கடிதம் எழுதி என்ன சாதித்தார்கள். நீட் தேர்வு நடக்கவில்லையா? எனவே தமிழக மக்களை ஏமாற்றும் வேலையை அவர்கள் தொடர்ந்து செய்கிறார்கள், அதனால்தான் சூர்யா போன்ற நீட் தேர்வை எதிர்க்கும்போது, அதற்கு பதில் சொல்லாமல் அவர் மீது தனிப்பட்ட தாக்குதலை தொடுக்கிறார்கள்.