அ.தி.மு.க. தலைமையுடன் பா.ஜ.க.விற்கான தொகுதிகள் குறித்து விவாதித்துவிட்டு டெல்லி திரும்பிய அமித்ஷா, பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசித்தார். அந்த ஆலோசனையில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா, பொது செயலாளர் சந்தோஷ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். ஆலோசனைக்குப் பிறகு பா.ஜ.க.வின் இறுதிக்கட்ட விருப்பத்தை எடப்பாடிக்கு தெரிவித்திருக்கிறார் அமித்ஷா.
இதுகுறித்து பா.ஜ.க.வின் மேலிடத்தோடு தொடர்புடைய தரப்பில் நாம் விசாரித்தபோது, பீகார் பாணி தொகுதி உடன்பாட்டை அ.தி.மு.க. தலைமையிடம் தான் விவரித்ததையும், அதில் எடப்பாடி ஷாக் ஆகி, ஏற்க மறுத்ததை மோடியிடம் அமித்சா விவரித்திருக்கிறார். அதிக இடங்களில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒதுக்கப்படவிருப்பதாக எடப்பாடி சொன்ன எண்ணிக்கையையும் சொல்லியிருக்கிறார்.
பிரதமர் மோடி, "சி.எம். (எடப்பாடி) ஸ்ட்ராங்காத்தான் இருக்கிறார்'' என கமெண்ட் அடித்துவிட்டு, தமிழக பா.ஜ.க.வோடு நடந்த ஆலோசனைகளும் விவரிக்கப்பட, "தமிழக பா.ஜ.க.வின் வலிமை நமக்குத் தெரியும். அவர்களை நம்பி அதிக சீட்டுகளை பெறுவதும் ஆபத்தானது தான்'' என தெரிவித்திருக்கிறார் மோடி. 45 தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவெடுத்து அதுபற்றி எடப்பாடிக்கு ஆர்டர் தொனியில் தெரிவித்துள்ளது பாஜக மேலிடம்.
"தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களை வடக்கு, மத்தி, தெற்கு, மேற்கு என 4 மண்டலமாக பிரித்து அதில் பரவலாக போட்டியிடுவதற்கேற்ப தொகுதிகளை தேர்வு செய்திருக்கிறார்கள். கட்சியின் கட்டமைப்பே இல்லாத, மிக பலகீனமாக இருக்கிற 10 மாவட்டங்களை கழித்துவிட்டு 28 மாவட்டங்களை கணக்கில் எடுத்து கொண்டிருக்கிறார்கள். அந்த 28 மாவட்டங்களில் மாவட்டத்திற்கு 1 வீதம் 28 தொகுதிகளும், மீதமுள்ள 17 தொகுதிகளில் சென்னை அடங்கியுள்ள வடக்கு மண்டலத்தில் 3 தொகுதிகளும், கோவை அடங்கியுள்ள மேற்கு மண்டலத்தில் 9 தொகுதிகளும், கன்னியாகுமரி அடங்கியுள்ள தெற்கு மண்டலத்தில் 3 தொகுதிகளும், திருச்சி அடங்கியுள்ள மத்திய மண்டலத்தில் 2 தொகுதிகளும் என கூடுதலாக வகைப்படுத்தப்பட்டிருக்கிறது'' என்கிறார்கள்.
மேலும் அந்த ஆலோசனையில், ரஜினியின் அரசியல் வருகை பற்றி மோடியிடம் விவரித்த அமித்ஷா, "நேரடி அரசியலில் இறங்குவதில் ரஜினி இன்னமும் குழப்பத்தில் இருக்கிறார். அதற்கு காரணம் அவரது உடல்நிலைதான். அதனால் அரசியலுக்கு வருவது பற்றி அவரை நாம் வலியுறுத்துவது தேவையற்றது. ரஜினியின் அரசியல் வருகை குறித்து நமக்கு தவறான தகவலையே ஆடிட்டர் தந்திருக்கிறார்'' என சொல்லியுள்ளார். இதனையடுத்து, ரஜினியை தேர்தல் நேரத்தில் கையாள்வது- பயன் படுத்திக்கொள்வது என பிறகு விவாதிக்கலாம் என்று சொல்லி ஆலோசனையை முடித் துக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி.
இந்த நிலையில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை நவம்பர் 30-ந்தேதி சென்னைக்கு வரச்சொல்லி மாவட்ட நிர்வாகிகளுக்கு ரஜினி தரப்பிலிருந்து தகவல் தரப்பட்டதால் வழக்கம் போல பரபரப்பானது. இது குறித்து நாம் விசாரித்தபோது, "சிஸ்டம் கெட்டுப் போச்சுன்னு சொல்லி அரசியலுக்கு வருவதை கடந்த 2017 நவம்பர் 30-ந்தேதி அறிவித்தவர் ரஜினி. அன்று முதல் சமீபத்தில் அவரது உடல் நிலை குறித்து வெளிவந்த அறிக்கைவரை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அரசியலுக்கு வர மாட்டேன் என அவர் சொன்னதில்லை.
ஆனால், எதிர்பாராத வகையில் உலகத்தையே தாக்கிய கரோனா இந்தியா வையும் தாக்கிய நிலையில் இப்போது வரை கரோனா அச்சத்தில்தான் அரசாங்கமும் இருக்கிறது; மக்களும் இருக்கிறார்கள். அதில் ரஜினியும் விதிவிலக்கல்ல!
அந்த வகையில், கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கும் ரஜினி, கரோனா விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார். கரோனாதான் அவரை பயமுறுத்துகிறது. அதேசமயம், அரசியலுக்கு வருவது குறித்து தமிழக மக்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்து விட்டோமே என்கிற ஆதங்கமும் அவரிடம் இருக்கிறது. இந்த குழப்பத்தில்தான் மன்ற நிர்வாகிகளை சந்திக்க நினைத்தார் ரஜினி. அதாவது, தனது உடல்நிலை சூழலை விவரித்து, இப்படிப்பட்ட நிலையில் நான் என்ன முடிவு எடுக்கட்டும் என மன்ற நிர்வாகிகளிடமே கேட்பதற்கேற்ப, இந்தக் கூட்டத்தை கூட்டியிருக்க வேண்டும் என நினைக்கிறோம். அப்படி அவர் எங்களிடம் கேட்டால், தலைவா, உங்களின் உடல்நிலைதான் எங்களுக்கு முக்கியம்; உங்களின் அரசியல் வருகை அல்ல என்பதே பெரும்பாலான நிர்வாகிகளின், கூட்டத்திற்கு முந்தைய மனநிலை'' ‘என்றனர் சென்னை மாவட்ட நிர்வாகிகள்.
அதேசமயம், ஏதேனும் அதிசயம் நடந்து விடாதா என்கிற ஏக்கமும் எதிர்பார்ப்பும் மன்ற நிர்வாகிகளிடம் இருந்தது.
இந்த நிலையில் திடீரென ''ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு'' என டிசம்பர் 3ஆம் தேதி தனது டுவிட்டரில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார் ரஜினி. இதனை உடனடியாக டெல்லிக்கு தெரிவித்திருக்கிறார் குருமூர்த்தி. மேலும் இனி ரஜினிதான் என்று பேட்டியும் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.
ரஜினி பரபரப்பு இப்படி இருக்க, பா.ஜ.க. அனுப்பி வைத்த தொகுதி பட்டியலை வைத்து அ.தி.மு.க.வின் சீனியர்களிடம் ஓ.பி.எஸ்.சும் இ.பி.எஸ்.சும் விவாதித்தபடி இருக்கிறார்கள். 45 சீட் என்பது மிகவும் அதிகம் என்றும், இறுதியாக 28 மாவட்டங்களை உள்ளடக்கி 25 சீட் தரலாம் என்றும் எடப்பாடியிடம் சீனியர்கள் வலியுறுத்தியிருக்கும் நிலையில் அந்த தொகுதிகளை அடையாளப்படுத்தி டெல்லிக்கு தெரிவிக்கும் முடிவில் இருக்கிறார் எடப்பாடி என்கிறது அ.தி.மு.க. தலைமைக்கழக வட்டாரம்.