அதிமுக அரசின் மிக மோசமான யோசனைகளில் ஒன்று. மழை வரவேண்டும் என்பதற்காக யாகங்கள் செய்ய சொன்னது. இத்தனை வருட தமிழ்நாட்டின் ஆட்சியில் இப்படியொரு திட்டத்தை யாரும் செய்ததில்லை.
மழை வருவதற்கான எந்த வழியையும் செய்யாத அதிமுக அரசு யாகம் நடத்திவிட்டால் மழை வந்துவிடும் என நம்புவது எவ்வளவு முட்டாள்தனம். அதற்கு நீங்களும் ஆதரவு தெரிவித்துள்ளீர்கள். ஏன் அவர்கள் உங்கள் வழிக்கு வந்துவிட்டார்கள் என்பதற்காகவா?
யாகங்கள் குறித்து தமிழிசை சவுந்தரராஜன், இந்து அறநிலையத்துறை மழை வேண்டி யாகம் செய்யுங்கள் என்று சொன்னவுடனே சுபவீ, கி.வீரமணி ஆகியோருக்கு கடும் கோபம் வருகிறது. யாகம் செய்வதில் மக்களுக்கு நம்பிக்கை இருந்து மழை பெய்தால் நல்லதுதானே எனவே யாகத்தில் இருந்து ஒதுங்கிக்கொள்ளுங்கள் என்பது எனது கருத்து. மழை பெய்தால் நல்லதுதானே என கூறும் நீங்கள், தொடர் இயற்கை பேரிடர்களால் மழைக்கு ஆதரமான மரங்கள் அழிந்தன, அப்போது எங்கு சென்றீர்கள். 8 வழிச்சாலையின்போது, வயல்களையும், மரங்களையும் அழித்தார்களே அப்போது எங்கு போனீர்கள்?
செழிப்பாக இருந்த டெல்டா பகுதிகளை அழித்து ஹைட்ரோ கார்பன் கொண்டுவர வேண்டும் என்ற ஆசையும், தண்ணீரை விடாமல் அரசியல் செய்யும் கட்சியில் இருப்பவர் எப்படி பேசுவார். உடனே திமுகதான் இதையெல்லாம் செய்தார்கள் என்பார்கள். திமுக செய்தது தவறு, தவறு எனக்கூறும் நீங்களும் சரி, கடந்த 8 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அதிமுகவும் சரி, கடந்த ஐந்து வருடங்களாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் நீங்களும் சரி, இப்போது கூட்டணி வைத்துள்ளீர்களே, அதாவது கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் எடப்பாடி அரசாங்கமும் சரி அதை நிறுத்த ஏதேனும் முயற்சி எடுத்தீர்களா? அனைத்து தீமையான திட்டங்களும் மக்களின் போராட்டத்தினாலேயே நின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஹெச். ராஜாவின் கருத்து, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மழை வேண்டி இந்து கோவில்களில் யாகம் நடத்த உத்தரவிட்டுள்ளது சட்டப்படி செல்லும். அனைத்து கோவில்களிலும் இது நிறைவேற்றப்பட வேண்டும். இதை கண்டித்து இந்து விரோத தற்குறி வீரமணி அறிக்கை விட்டதற்கு அனைத்து இந்துக்களும் கண்டனத்தை எல்லாவிதத்திலும் தெரிவிக்கவும். யாரை, யார் தற்குறி என்று சொல்வது, அதற்கான என்ன தகுதி இருக்கிறது உங்களுக்கு. அவ்வப்போது சர்ச்சை கருத்துகளை அள்ளிவீசும் நாயகன், தான் பதிவிட்ட கருத்துக்கே பொறுப்பேற்க முடியாத வீரன் இதை சொல்லாமா. இந்து சமய அறநிலையத்துறை என்பது கோவில்களை நிர்வகிக்க இருக்கும் அமைப்பு. அதைவைத்துக்கொண்டு பூஜை செய்ய சொல்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.
இந்தியா முழுவதும் குறிப்பிட்ட அளவில் காலூன்ற முடிந்த உங்களால் தமிழ்நாட்டில் மட்டும் காலுன்ற முடியவில்லையே என்ற ஏக்கம், அதற்கு சரியான வாய்ப்பாக அமைந்த தற்போதைய அரசு. கடந்த சில மாதங்களாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் மீதான நேரடி தாக்குதல்கள் இப்படியாக காலூன்ற நினைக்கிறீர்கள். பெரியாரின் கருத்துகள் மட்டுமல்ல, பெரியாரின் சிலையும் உங்களை உறுத்திக்கொண்டிருக்கும் வரையில் அது ஒருபோதும் நடக்காது. இது பெரியார் மண்...