காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில், அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த சி.ஆர்.பி.எஃப்., வீரர் செல்வசந்திரன் வீரமரணம் அடைந்தார். இதனால், இவரது சொந்த ஊரான கார்குடி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது, வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை மோத செய்து, பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில், 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இவர்களில், அரியலுார் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகா, கார்குடி கிராமம் காலனி தெருவை சேர்ந்த சிவச்சந்திரன் (33), என்ற சி.ஆர்.பி.எஃப்., வீரரும் வீரமரணம் அடைந்தார். எம்.ஏ.பி.எட்., பட்டதாரியான இவர், கடந்த 2007ம் ஆண்டு சி.ஆர்.பி.எப்., படைவீரராக சேர்ந்தார். 2014ல் திருமணம் செய்து கொண்ட இவருக்கு, டிப்ளமோ நர்சிங் படித்த காந்திமதி(27) என்ற மனைவியும், சிவமுனியன்(2) என்ற மகனும் உள்ளனர். இவரது மனைவி காந்திமதி தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவரது பெற்றோர் சின்னையன்(60), சிங்காவள்ளி(55) ஆவர்.
சிவசந்திரன் வீரமரணம் அடைந்த தகவலறிந்தும், இவரது மனைவி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர். கார்குடி கிராமத்தில் பொதுமக்கள் சிவசந்திரன் வீடு முன்பு கதறி அழுது கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சிவசந்திரனின் வீரமரணம் கார்குடி கிராமத்தையே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
இது குறித்து, சிவசந்திரனின் அப்பா சின்னையன் கூறுகையில், சிறு வயது முதலே நாட்டுப்பற்று மிக்கவனாக இருந்து வந்தான். எப்போதும் நாடு, நாடு என கூறுவான். நாட்டை காப்பாற்ற சென்றவன் வீட்டில் உள்ளவர்களை தனியாக தவிக்கவிட்டு சென்றுவிட்டான்.
விடுமுறையில் வந்திருந்தவன் கடந்த நான்கு நாட்களுக்கு முன்புதான் பணிக்கு சென்றான். நேற்று மதியம் இரண்டு மணியளவில் சிவசந்திரன் அவன் மனைவிக்கு போன் பேசினான். அரசு என்னதான் சலுகைகள் கொடுத்தாலும் இனி என் மகனின் உயிர் வராது. நாட்டுக்காக அவனை அர்ப்பணித்துக்கொண்டான். இப்படி ஒரு பிள்ளையை பெற்றதற்காக பெருமைப்படுகிறேன் எனக்கூறி கதறி அழுதார்.