'உங்களுக்குத் தெரிந்த ஆங்கில நடிகர், கருப்பு வெள்ளை சினிமா காலத்து நடிகர் யார்?' என்று கேட்டால் கண்டிப்பாக கிராமத்திலிருந்து நகரம் வரை சார்லி சாப்ளின் என்று சொல்லிவிடுவார்கள். அவர் உருவத்தில், வாழ்ந்ததில் மட்டும் தான் ஆங்கிலேய நடிகர், மற்றபடி அவர் நடித்த படங்கள் எல்லாம் ஆங்கில மொழி சார்ந்தவை அல்ல, எந்த ஒரு தனி மொழிக்குமானது அல்ல. சினிமாவின் கலைநயத்தை காட்சிகளின் மூலம் மக்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்த பலரில் இந்த சார்லியும் ஒருவர். அவர் பிறந்தது லண்டனாக இருக்கலாம், வளர்ந்தது அமெரிக்காவாக இருக்கலாம், இறந்தது சுவிட்சர் லேண்டாக இருக்கலாம். ஆனால் அவரின் படங்கள் உலக மக்கள் அனைவருக்குமே சொந்தமானது. இந்த எளிமையான மனிதரை பற்றி இன்னும் எளிமையாக சொல்லவேண்டும் என்றால் இருபதாம் நூற்றாண்டின் குழந்தைகளின் நாயகன்.
நாயகன் தான், அதுவும் காமெடி நாயகன். ரசிகர்கள் எண்ணிக்கையில் தற்போதிருக்கும் அதிரடி நாயகர்களையெல்லாம் மிஞ்சக் கூடியவர். 'விழுந்து விழுந்து சிரிப்பது' என்பது இவரது படங்களைப் பார்த்துதான் தொடங்கியிருக்க வேண்டும். அந்த அளவுக்கு இவரது படங்களைப் பார்க்கும்போது கஷ்டங்கள் யாவும் பறந்து போகும். நம்மையெல்லாம் இவ்வளவு சிரிக்க வைத்திருக்கிறாரே? அப்போது இவரது வாழ்வில் எத்தனை நகைச்சுவை சம்பவங்கள் இருந்திருக்கும், இவரது வாழ்க்கையே சிரிப்பும் களிப்புமாக இருந்திருக்குமென்று நமக்கெல்லாம் தோன்றும். உண்மையில் சார்லியின் ஆரம்பகட்ட வாழ்க்கை சோகம் மட்டுமே கொண்டது. அவரது அப்பா குடித்துக் குடித்து மடிந்தவர். அவரது அம்மா வாழ்க்கையை இழந்த துயரத்தில் மன அழுத்தத்தால் மெண்டல் அஸைலம் என்று சொல்லப்படும் மனநல காப்பகத்துக்கு அனுப்பப்பட்டவர். இதன் காரணமாக 18 மாதங்கள் வரை அனாதை ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டு வளர்க்கப்பட்டிருக்கிறார் சார்லி. தனது எட்டாவது வயதிலேயே இயற்கையாக தனக்குள் இருக்கும் நடிப்புத் திறமையை உணர்ந்தாரோ என்னவோ ஒரு சின்ன நாடகக் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். படிப் படியாக உயர்ந்து நாயகன், இயக்குனர், தயாரிப்பாளர் என்ற அந்தஸ்துகளை சம்பாரித்தார்.
மேலே சொல்லப்பட்ட எந்த விஷயத்தினாலும், அவருக்கு இந்த காமெடி (நகைச்சுவை) என்ற ஒன்று அறிமுகம் ஆகியிருக்குமா என்று தெரியவில்லை. ஆனால், ஒன்றே ஒன்று மக்களுக்கு எந்த ஒரு சோகத்தையும், கருத்தையும் நகைச்சுவையுடன் சொன்னால் தான் பொறுத்திருந்து பார்ப்பார்கள், கவனிப்பார்கள் என்று அறிந்திருந்தார். சார்லி சாப்ளினின் பேட்டி ஒன்றில் தன்னை பாதித்த சம்பவம் என்று அவர் சொல்வது இதுதான்... "நான் வீட்டில் இருக்கும் ஜன்னல்கள் வழியாக இந்த உலகத்தை நிறைய முறை பார்த்திருக்கிறேன். அதில் ஒரு நிகழ்வுதான் என்னை மிகவும் பாதிக்கச் செய்தது. கசாப்புக் கடைக்காரன் ஒருவன், ஒரு ஆட்டுக் குட்டியை கொன்று அதை இறைச்சியாக்க, நல்ல சானை தீட்டப்பட்ட கத்தியுடன் சென்றுகொண்டிருக்கிறான். எனக்கு அதைப் பார்க்கவே பாவமாக இருந்தது. சோகத்தின் விளிம்பிற்கே சென்றுவிட்டேன். திடீரென அந்தக் ஆட்டுக்குட்டி அவன் பிடியில் இருந்து தப்பித்தது. கசாப்புக் கடைக்காரன் அதை பிடிக்க மேலும் கீழும் விழுகிறான். ஆனால், அது அவனிடம் சிக்காமல் தாவுகிறது. கசாப்புகாரன் அதைப் பிடிக்க விழுகும் போது, அதை தவறவிடும்போது எல்லாம் எனக்கு சிரிப்பு வந்துகொண்டே இருந்தது. விழுந்து விழுந்து சிரித்தேன். ஆட்டுக்குட்டி அவனிடம் மாட்டாமல் அது ஒரு திருடன் போலீஸ் விளையாட்டாக இருந்தது. கடைசியில் கசாப்புக் கடைக்காரனிடம் சிக்கிக்கொண்டு, பலியாக இருந்தது. அப்பொழுது மீண்டும் என்னை சோகம் தொற்றிக்கொண்டுவிட்டது. இந்த சம்பவம்தான் எனக்குள் நகைச்சுவை மீதான ஒரு பார்வையை உண்டாக்கியது" என்று கூறியிருக்கிறார்.
சார்லி சாப்ளினை பாதித்ததாக சொல்லப்பட்ட இந்த சம்பவத்தை அவரின் எல்லா படங்களிலும் பார்க்கலாம். அவர் மக்களிடம் கருத்துகளை தெரிவிக்க நகைச்சுவையை ஆயுதமாகக் கையாண்டவர். மக்களுக்கு அவரை ஒரு கதாநாயகனாக தெரியும், காமெடியனாக தெரியும். தன் ஒவ்வொரு படங்களிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்தவர், சர்வாதிகாரி ஹிட்லரை எதிர்த்த ஒரு கம்யூனிஸ்ட் என்பது பலருக்கும் தெரியாது. அவரது 'தி கிரேட் டிக்டேட்டர்' படம் இன்றும் கொண்டாடப்படும் வியக்கப்படும் மிக தைரியமான அரசியல் படம். சர்வாதிகாரத்தை கேலி செய்து கிழித்து எறிந்த படம். "இந்த உலகம் அனைவருக்குமாக படைக்கப்பட்டது. அன்பால் நிரப்பப்பட வேண்டியது. நாம் இயந்திரங்கள் இல்லை, கால்நடைகள் இல்லை, மனிதர்கள். நமக்கு அன்புதான் தேவை, அடிமைத்தனமில்லை. நாம் பாதை மாறிவிட்டோம், வெறுப்பை நிரப்புகிறோம். ரத்தம் சிந்த வைக்கிறோம்" என்று சர்வாதிகாரி பேசவேண்டிய இடத்தில் நின்று அவர் பேசும் இறுதி உரை உலகின் முக்கியமான உரைகளில் ஒன்று. சிரியாவையும் ஆசிஃபாவையும் பார்க்கும்பொழுது உண்மை தெரிகிறது. ஆம், நாம் பாதை மாறிவிட்டோம், இயந்திரமாகிவிட்டோம்.
தன் படங்களில் அரசியலை வைத்து, அதன் மூலம் தான் அரசியல் செய்யாமல், மக்களுக்கு அரசியலை புரியவைத்தவர் சார்லி சாப்ளின். நீண்டு வாழ்க சார்லி சாப்ளின், ரசிகர்களின் மனதில்.