தமிழ்நாட்டில் உள்ள ஆலயங்கள், வழிபாட்டு தளங்களில் இன்று கடவுளாக வழிபடக் கூடிய அனைவருமே நம் முன்னோர்கள். அதாவது நம்மை ஆண்டவர்கள். சிறப்பான ஆட்சி கொடுத்ததால் “ஆண்டவர்“ களை தமிழர்கள் அவர்களை மறக்காமல் காலங்காலமாக வழிபட்டு வருகின்றனர்.
அதே போல தான் “அய்யனார்“ ஒரு மன்னராக இருந்து மக்களை காத்தவர். அதனால் தான் தமிழர்கள் கிராம காவல் தெய்வமாக வைத்து வழிபட்டு வருகின்றனர். இப்படித் தான் ஒவ்வொரு கிராத்திலும் குலதெய்வம், கிராம தெய்வம் என்று வழிபட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் கிராமத்தில் வில்லுனி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில். கோயிலின் சிறப்பு கோயில் முன்பு உள்ள 33 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆசியாவிலேயே உயரமான பிரமாண்ட வானில் தாவிச் செல்லும் குதிரை சிலை தான். அதன் எதிரே பிரமாண்ட யானை சிலை அமைக்கப்பட்டிருந்து ஒரு காலத்தில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
அதில் குதிரை சிலை எஞ்சியுள்ளது. நம் மண்ணையும் குலத்தையும் காத்த அய்யனாரின் வாகனம் குதிரை என்பதால் சுற்றுவட்டார கிராம மக்கள் மாசி மகத்திருவிழாவில் பிரமாண்ட குதிரை சிலைக்கு காகிதப் பூ வில் மாலை செய்து குதிரை சிலைக்கு அணிவித்து சிறப்பு செய்து வருகின்றனர். காலங்காலமாக நடக்கும் இந்த நிகழ்வில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. லட்சம் பேர் ஒரே நேரத்தில் கூடும் பெரிய திருவிழா இது. அதிலும் குதிரை சிலைக்கு மாலை அணிவிக்கும் அழகை காணவே அதிகமான மக்கள் கூடுகிறார்கள். தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வருகிறார்கள்.
இந்த ஆண்டு மாசி மகத் திருவிழா மாரச் 8ந் தேதி நடக்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை நிர்வாகக்குழுவினர் செய்து வருகின்றனர். புதன்கிழமை பந்தல் கால் நடும் விழாவும் நடந்ததைத் தொடர்ந்து பந்தல் அமைக்கும் பணிகள், சாரம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் தான் பிரமாண்ட குதிரை சிலைக்கு பக்தர்களால் நேர்த்திக்கடனாக அணிவிக்கப்படும் 35 அடி உயர காகிதப் பூ மாலைகள் கட்டும் பணிகள் கீரமங்கலம், கொத்தமங்கலம், குளமங்கலம், பனங்குளம், ஆவணத்தான்கோட்டை, வடகாடு உள்ளிட்ட பல கிராமங்களிலும் தொடங்கி உள்ளது. சுமார் 3 ஆயிரம் மாலைகள் வரை கட்டப்ப வாய்ப்புகள் உள்ளது. கடந்த காலங்களில் தகதகக்கும் பிளாஸ்டிக் காகிதங்களைக் கொண்டு மாலைகள் கட்டப்பட்டது.
ஆனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை பிளாஸ்டிக் மாலைகளை தவிர்த்துவிட வேண்டும் என்று விழாக்குழுவின் கோரிக்கையை ஏற்ற கடந்த சில ஆண்டுகளாக முழுமையாக காகிதங்களை மட்டுமே கொண்டு மாலைகள் கட்டப்பட்டு வருகிறது. கடைசி 2 நாட்கள் மட்டும் செண்டி, கோழிக் கொண்டை, வாடாமல்லி, சம்பங்கி மலர்களைக் கொண்டு மாலைகள் கட்டப்படுகிறது.
இது குறித்து மாலை கட்டும் தொழிலாளிகள் கூறும் போது, "பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் மாசிமகத் திருவிழாவில் குதிரை சிலைக்கு மாலை அணிவிப்பது தான் சிறப்பு. அந்த மாலைகளை நாங்கள் கட்டுவதை பெருமையாக நினைக்கிறோம். தலைமுறை தலைமுறையாக மாலை கட்டி வருகிறோம். இதனால் எங்களுக்கு வருமானம் என்பதைவிட சில நாட்கள் கூலி கிடைக்கும். ஒரு நபர் ஒரு நாளைக்கு ஒரு மாலை தான் கட்ட முடியும். அப்பறம் காகிதம், சணல் மற்ற செலவுகள் எல்லாம் இருக்கு. கடைசியில் ரூ. 2500, 3 ஆயிரத்திற்கு மாலை விற்பனை செய்கிறோம்.
பலர் இப்போதே முன் தொகை கொடுத்துள்ளனர். பிளாஸ்டிக் மாலை என்றால் வேலை வேகமாக நடக்கும். அதை தடை செய்துவிட்டால் முழுமையாக காகிதத்திலேயே மாலைகள் செய்கிறோம். கடைசி இரு நாட்கள் மட்டும் மலர் மாலைகள் செய்வோம். மாசிமகம், பங்குனி உத்திரம், சித்திரை முதல் நாள் ஆகிய நாட்களில் மட்டும் மாலைகள் அணிவிக்கப்படும். மற்ற நாட்களில் மாலை அணிவிக்க அனுமதி இல்லை. இந்த மாலை அணிவிக்கும் அழகை காண வெளிநாடுகளில் உள்ளவர்களும் குளமங்கலம் வந்துவிடுவார்கள் என்றனர்.