இஸ்லாமியர்கள் குறித்த சமீபத்திய அரசியல் பற்றிய பல்வேறு கருத்துகளை நம்மோடு மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் புதுமடம் ஹலீம் பகிர்ந்துகொள்கிறார்...
புர்கா அணிவதற்கு எதிர்ப்பாக எந்த இஸ்லாமியப் பெண்ணும் பேசியதில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் இஸ்லாமியச் சட்டங்கள் இவை. இவை அனைத்துமே சிவில் சட்டங்கள். உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள் இந்த சட்டங்களைக் கடைப்பிடித்து வருகின்றனர். இதனால் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. இறைவனால் கொடுக்கப்பட்ட சட்டங்கள் இவை என்று இஸ்லாமியர்களால் நம்பப்படுகிறது. புர்காவுக்கு எதிராகப் பேசுவது எல்லாம் இஸ்லாமிய வெறுப்பரசியலின் வெளிப்பாடு.
இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் என்பது போன்ற கற்பிதங்கள் ஐரோப்பிய நாடுகளில் பல காலமாக இருந்து வருகின்றன. விஜயகாந்த் படங்களில் தீவிரவாதி என்றாலே தொப்பி போட்டவராகத் தான் இருப்பார். மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தில் தான் இஸ்லாமியர்கள் மீதான நுணுக்கமான வெறுப்பு விதைக்கப்பட்டது. சமீபத்தில் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான மாமனிதன் படம் தான் இஸ்லாமியர்களின் உண்மையான வாழ்க்கையை வெளிப்படுத்தியது. கணவன் இறந்த பிறகு சிறிது காலத்துக்கு பெண் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று கூறும் சட்டம் பெண்ணின் கண்ணியத்தைக் காப்பதற்காக உருவாக்கப்பட்டது.
ஹிஜாப் அணிவது என்பது ஒரு பெண்ணுடைய தனிப்பட்ட விருப்பம், உரிமை சார்ந்தது. யாரையும் கட்டாயப்படுத்துவது கிடையாது. இஸ்லாமியப் பெண்கள் வெளியே வர பயப்படுகின்றனர் என்பது உண்மையல்ல. குடியுரிமை திருத்தச் சட்டத்தின்போது பெண்கள் தான் பெருமளவில் வெளியே வந்து போராடினார்கள். ஹிஜாப் குறித்த தவறான புரிதல் சமூகத்தில் உள்ளது. ஹிஜாப் அணிந்ததால் கல்வி கற்கக் கூடாது என்று பாஜகவினரால் தடுக்கப்பட்ட பெண் இப்போது வெற்றிகரமாகப் படித்து முடித்து அவர்களின் முகத்தில் கரி பூசியுள்ளார்.
இஸ்லாமியர்களின் எந்த அடையாளமும் இருக்கக்கூடாது என்று பாஜக நினைக்கிறது. இன்று பாடப்புத்தகங்களில் ஔரங்கசீப் குறித்த பாடத்தை நீக்குகின்றனர். அடுத்தது இஸ்லாமியர்களை தாடியையும் தொப்பியையும் எடுக்கச் சொல்வார்கள். வட இந்தியாவில் இந்த வெறுப்பு அரசியல் பெரிய அளவில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இப்போது அந்த வெறுப்பு அரசியலை தென்னிந்தியாவுக்குள் புகுத்துகின்றனர். புர்கா, ஃபர்ஹானா போன்ற படங்கள் இதற்காகவே எடுக்கப்படுகின்றன.