அ.தி.மு.க. - பாஜக கூட்டணி முறிவு குறித்து தன்னுடைய கருத்துக்களை மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் புதுமடம் ஹலீம் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
அ.தி.மு.க.வின் கூட்டணி முறிவை இன்றளவும் சில கட்சித் தலைவர்கள் ஏற்கவில்லை. காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியும் இது தொடர்பாக கருத்து தெரிவித்தார். இதற்கு காரணம் பாஜக இதுவரை அண்ணா, ஜெயலலிதா மீது வைத்த விமர்சனங்களுக்கு அதிமுக பணிந்து தான் சென்றுள்ளது என்பது தான். ஏன், இவர்களின் தலைவி ஜெயலலிதா இறப்பதற்கு முன் பாஜகவுடன் என்றைக்கும் கூட்டணி இல்லை என்றார். அந்தக் காணொளியை அதிமுகவினர் அப்போது மறந்துவிட்டு இப்போது ஏன் பரப்புகிறீர்கள். மூங்கிலைக் கூட ஓரளவுக்குத் தான் வளைக்க முடியும், அதுபோல் தான் கூட்டணியும். இன்றைக்கு, அனைத்திற்குமே அண்ணாமலை தான் காரணம் எனும் அளவிற்கு நிலை மாறிவிட்டது. அண்ணாமலை தோற்றுப் போவதை பாஜகவினரே விரும்புகின்றனர்.
மேலும், கூட்டணி உடைய அண்ணாமலை மட்டும் காரணம் எனவும் நான் பார்க்கவில்லை. ஏனென்றால், எடப்பாடி விரும்பாத சில நபர்களை கட்சியில் இணைக்கும் வேலையை அண்ணாமலை செய்தார். பாஜக செய்ய முயற்சித்தது. இதனால், கட்சியை கட்டுக்குள் வைத்து 2026 தேர்தலை சந்திப்பது தான் எடப்பாடியின் திட்டம். ஆனால், அதிமுகவிலே ஜெயக்குமார், சி.வி. சண்முகம் போன்றோர் கூட்டணியை விரும்பாமலும், செல்லூர் ராஜு போன்றோர் கூட்டணியை விரும்புகின்றனர்.
சில அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டு இருப்பதாலும் பயந்துள்ளனர். அண்ணாமலை கூட எங்களிடம் விசாரணை குழுக்கள் இருக்கிறது என்றாரே. அதேபோல், எச்.ராஜாவும் நாங்கள் தான் அ.தி.மு.க.வை காப்பாற்றினோம். இல்லை என்றால் உடைந்திருக்கும் என்றார். அதிமுகவில் சசிகலா, தினகரன் ஆகியோரை இணைத்து விடுவார்கள் என்றதால் தான் இந்த கூட்டணி முடிவை எடப்பாடி எடுத்துள்ளார். மாறாக, கொள்கை முரண் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
தொடர்ந்து, என்.டி.ஏ. கூட்டணியில் இடம்பெற்ற இரண்டாவது பெரிய கட்சியான அ.தி.மு.க. பிரிந்துவிடும் என பாஜகவும், இடதுசாரி அமைப்புகள் கூட நினைக்கவில்லை. மோடி அவர்களுக்கே இது களங்கம் விளைவிக்கும் அளவிற்கு சென்றுள்ளது. ஒருவேளை, எடப்பாடி தனித்து நின்று 8 இடங்கள் வரை வென்றாலும், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கப் போவதில்லை. இதனால், சின்ன மாநிலத் தலைவர் பிரச்சனைக்காக கூட்டணியை இழக்க வேண்டுமா என்று பாஜக யோசிக்கலாம். எனவே, அதிமுக கூட்டணி உடைய அண்ணாமலை தான் முக்கிய காரணம் என சொல்வேன். காரணம், இவர்களுக்கு தேசிய தலைமை மோடி, அமித்ஷா விடம் எந்த பிரச்சனையும் இல்லை . எனவே, எடப்பாடி வென்றாலும் யாரை ஆதரிப்பார் என்பதே சந்தேகம்.
பாஜகவின் கூட்டணியால் கடந்த காலங்களில் அதிமுகவை சார்ந்தவர்களே அவர்களுக்கு வாக்களிக்காமல் இருந்துள்ளனர். அதனை, ஈரோடு இடைத் தேர்தலிலே நாம் பார்த்தோம். எடப்பாடியும், இந்த கூட்டணி முறிவு குறித்து சிறுபான்மையின மக்களிடம் சென்று சேருங்கள் என்றுள்ளார். இதனால், ஓரளவு அவர்களின் வாக்கு வருவதற்கு வாய்ப்புள்ளது. மேலும், திமுகவை விரும்பாதவர்கள் சேர்ந்து சிறிது சதவீதம் வாக்கு உயரலாம் இதனை மறுக்க முடியாது. ஆனால், இதன் மூலம் முழுமையான நம்பிக்கையை எடப்பாடி பெற்றுவிட்டாரா?
கூட்டணியிலிருந்து இவர்கள் வெளியே வந்ததால் பரிசுத்தமாகிவிட்டதா அ.தி.மு.க.? திமுக கூட்டணி கட்சிகள் பாஜகவை விமர்சிப்பது போல, அதிமுக விமர்சிக்குமா? பிரதமர் மோடியை நாங்கள் ஆதரிக்கவில்லை என சொல்வார்களா? பாஜக பாசிச கட்சி என விமர்சிக்க முடியுமா? எனவே, கொள்கை, சித்தாந்த ரீதியாக அல்லது நட்பு ரீதியாக கூட இந்த கூட்டணி பிரியவில்லை. ஊழலின் அடிப்படையில் பிரிந்திருக்கலாம். இதனால், மீண்டும் இருவரும் சேரவும் வாய்ப்புள்ளது. இன்றைக்கும் வானதி போன்றவர்கள் எம்.எல்.ஏ.வாக இருப்பதற்கு அ.தி.மு.க. தான் காரணம். தொடர்ந்து, பாஜக தனிக் கூட்டணி அமைத்தாலும் கிருஷ்ணசாமியை தவிர எவரும் செல்லமாட்டர்கள். இதேசமயம் சிலர் தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகள் பிரிந்துவிடும் எனவும் சொல்கின்றனர். ஆனால், என்னை பொறுத்தவரை அகில அளவில் இ.ந்.தி.யா. கூட்டணியில் இவர்கள் இருப்பதால், சிறு சேதாரம் கூட ஏற்பட வாய்ப்பில்லை. இருந்தும், அ.தி.மு.க.வின் வாக்கு சதவீதம் சற்று உயரும் என்பதில் ஐயமில்லை. இதனுடன், உண்மையான அ.திமு.க தொண்டர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அண்ணாமலையை நீக்கிவிட்டு வேறொருவரை நியமித்தால் கூட்டணியில் மாற்றம் ஏற்படலாம். எனவே, சில வலதுசாரி அமைப்புகள் கூட அண்ணாமலை பேசியதை ஏற்கவில்லை. தமிழ்நாட்டில் பாஜக சவாரி செய்ய அதிமுக என்ற குதிரை தேவை என்பதே இதன் அர்த்தம். குதிரையை விரட்டிவிட்டு எப்படி சவாரி செய்யப் போகிறீர்கள். அண்ணாமலையும் இந்த விவகாரம் கூட்டணி முறிவு அளவு செல்லும் என எதிர்பார்த்திருக்க மாட்டார். அதேபோல், ஒரு அடிமைக்கும் சில எல்லைகள் உண்டு. அதற்கு மேல் அவர்கள் விலங்கை உடைத்துக் கொண்டு வரத்தான் செய்வார்கள்.
தொடர்ந்து, அதிமுக வென்றாலும் மத்தியில் மோடியை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் இருப்பதால் சிறுபான்மையினரின் வாக்குகள் விழுவதில் சந்தேகம் தான். இவர்களும், கொள்கை முரணாக வெளியே வரவில்லை. பாஜகவின் கொடுமை தாளாமல் வெளிவந்தனர். எனவே, இந்த பிளவு 2024 தேர்தலில் அ.தி.மு.க.விற்கு உதவும் என சொல்ல முடியவில்லை. பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...