டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் வி.வி. மினரல்ஸின் உரிமையாளரான வைகுண்டராஜன், அந்நிறுவனத்துக்காக தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றிய சுப்புலட்சுமி ஆகியோருக்கு மூன்று வருட சிறைத் தண்டனையும் காடுகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு இணை இயக்குநராகப் பணியாற்றிய நீரஜ் கத்ரிக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனையும் வழங்கியுள்ளது.
மேலும் வைகுண்டராஜன், கத்ரிக்கு தலா ஐந்து லட்சம் அபராதமும், சுப்புலட்சுமிக்கு ரூ 2 லட்சம் அபராதமும், வைகுண்டராஜனின் வி.வி. மினரல்ஸுக்கு ரூ 10 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.
2016, மார்ச் 1-ல் பதியப்பட்ட இந்த வழக்கின் பின்னணி என்ன?
நீரஜ் கத்ரியின் மகன் சித்தார்த் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் பி.டெக் படிப்பதற்கு ஜூலை 3, 2012 தேதியிட்ட டிராஃப்ட் பல்கலைக்கழகத்தில் செலுத்தப்பட்டுள்ளது. செலுத்தியது வைகுண்டராஜனின் தொடர்பு அலுவலரான சுப்புலட்சுமி.
வைகுண்டராஜன் ஏன் நீரஜ் கத்ரியின் மகன் கல்லூரிப் படிப்புக்கான தொகையைச் செலுத்த வேண்டும்?
வைகுண்டராஜனின் வி.வி.மினரல்ஸ் ஆலையில், சுற்றுவட்டாரத்தில் வெட்டியெடுக்கப் படும் தாதுமணல் தரம் பிரிக்கப்படுகிறது. அப்போது கருப்பு மணல், சிகப்பு, மஞ்சள் கலர் என மூன்று பிரிவாகப் பிரிக்கப்படுகிறது. இதில் மஞ்சள் நிறம்கொண்ட தாதுமணல்தான் மோனோ சைட். இதில் அணு ஆயுத மற்றும் அணுசக்தி தயாரிப்பிற்கான யுரேனியம், தோரியம் அடங்கியுள்ளது. நாட்டின் பாதுகாப்பின் பொருட்டு இந்தப் பொருளைப் பயன்படுத்தக் கூடாது. அதனை இந்தியத் துறையான IREL எனப்படுகிற (INDIAN RARE EARTH LIMITED) இந்திய அரிய வகை மணல் ஆலை வசம் ஒப்படைத்துவிட வேண்டுமென்பது இந்திய அணுசக்தித் துறையின் ஆரம்ப கால உத்தரவு. சட்டமும்கூட.
வைகுண்டராஜன் அதனை சட்டப்படி ஒப்படைக்காமல் பயன்படுத்துகிற வகையில் 2000-ஆம் ஆண்டிலிருந்தே சேமித்து வைக்கிறார். திசையின்விளையிலிருந்து ராதாபுரம் செல்கிற சாலையிலிருக்கும் திருவம்பலநாதபுரம் கிராமத்தில் ஏழு ஏக்கர் மத்தியில் பூமிக்கடியில் 500 அடி ஆழம், 500 அடி அகலம் கொண்ட பெரிய கான்கிரீட் தொட்டியமைத்து அதில் மோனோசைட்டை சேமித்துவந்திருக்கிறார்.
இந்தப் பகுதியை SPECIAL ECONOMIC ZONE எனப்படுகிற சிறப்புப் பொருளாதார மண்டலமாக்க முயற்சிசெய்கிற வி.வி. ஆரம்பக்கட்ட அனுமதி ஆணையை திசையன்விளை நிர்வாக அதிகாரிகளிடம் தனது வழக்கப்படி வாங்கி விடுகிறார். சிறப்புப் பொருளாதார மண்டலமாக்கி விட்டால் அந்த மோனோசைட்டைத், தானே கையாளலாம் என்பதே நோக்கம். இப்படி 82 ஆயிரம் டன் மோனோசைட் சேமித்து வைக்கப்பட்டிருப்பதாக நீதிமன்றத்திற்குத் தகவலும் தரப்பட்டிருக்கிறது.
அத்துடன், 2015-ஆம் ஆண்டின்போது மோனோசைட் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று உயர்நீதிமன்றத்திற்குத் தகவலும் வர, தானாகவே முன்வந்து இந்த வழக்கை எடுத்துக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் மோனோசைட்டைத் தவிர்த்து மற்ற மினரல்களைப் பற்றி விசாரிக்கிறது.
இதனிடையே சட்டவிரோதமான பொருளை சட்டப்பூர்வமாக்கி அதனைத் தரம் பிரித்து அனுப்புவதற்கான அனுமதியையும், மோனோ சைட் பாதுகாப்பானது. தீங்கற்றது சிறப்பு பொருளாதார மண்டலமாக்கலாம் என்கிற தடையில்லாச் சான்றைப் பெற மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் முயற்சிக்கிறது வி.வி. நிறுவனம். அதற்காக மத்திய சுற்றுச்சூழல் அதிகாரியான நீரஜ் கத்ரிக்கு லஞ்சமாக 4 லட்சத்து 13 ஆயிரம் தரப்பட்டிருக்கிறது. அதாவது வி.ஐ.டி. கல்லூரியில் டிமாண்ட் டிராஃப்டாகச் செலுத்தப்பட்டிருக்கிறது.
இந்தத் தொகை முறையான டிராஃப்ட்டாக வி.வி. நிறுவனத்தின் உதவியாளரான சென்னையைச் சேர்ந்த சுப்புலட்சுமி மூலம் தரப்பட்டுள்ளது. உதவியாளர் சுப்புலட்சுமிக்கு வங்கிக் கணக்கு கிடையாது. இதற்காகவே அவர், தன் பெயரில் வங்கியில் அக்கவுண்ட் தொடங்கியிருக்கிறார். வி.வி. நிறுவனத்திடமிருந்து 5 லட்சம் சுப்புலட்சுமியின் கணக்கிற்கு மாற்றப்பட்டு, பின் அவர் டிராஃப்ட் எடுத்து லஞ்சமாக நீரஜ் கத்ரிக்கு கொடுத்திருக்கிறார்.
காடுகள் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டின் மூன்றாவது பிரிவில் சிறப்பு பொருளாதார மண்டல அனுமதி வேண்டி வி.வி. மினரல்ஸ் நிறுவனத்தால் விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்டதாகத் தரப்பட்ட ரசீதின் நகல் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின் இரண்டாவது பிரிவில் அந்நிறுவனத்தால் தரப்பட்டிருக்கிறது. ஏனெனில் இங்குதான் நீரஜ் கத்ரி இருக்கிறார். அதாவது இன்னொரு பிரிவு கொடுக்கவேண்டிய ஒப்புதலை அத்துமீறி நீரஜ் கத்ரி கொடுத்திருக்கிறார்.
மேலும் டெல்லியி லிருந்து சென்னைக்கும், மீண்டும் சென்னையி லிருந்து டெல்லிக்கும் நீரஜ் மற்றும் அவரது மகன் சித்தார்த்துக்கு சுப்புலட்சுமியால் டிக்கெட் வாங்கித் தரப்பட்டிருக்கிறது. தவிரவும் இதே நீரஜ் கத்ரி மீது ரூ 7 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கு இருப்பதையும் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் குறிப்பிட்டிருக்கிறது. அனைத்துமாகச் சேர்ந்து வைகுண்ட ராஜனும் அதிகாரியும் சிக்கக் காரணமாகிவிட்டது.
டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி நிர்ஜாபாட்டியாவின் தீர்ப்பு, வைகுண்டராஜனின் கோட்டைக்குள் ஓட்டை போட்டுள்ள நிலையில்,… "இதனைச் சட்டரீதியாக எதிர்கொள்வோம்'' என நம்பிக்கையுடன் தெரிவிக்கிறது வைகுண்டராஜன் தரப்பு.