Skip to main content

ஆற்று மணலில் சங்க கால தாய் தெய்வ சுடுமண் சிற்பம் கண்டெடுப்பு!

Published on 03/07/2020 | Edited on 03/07/2020

 

 

 Thanjavur District Katayankadu

 

பண்டைய தமிழர்களின் வாழ்க்கை கலாச்சாரத்தை, ஆய்வாளர்களோடு ஆர்வமுள்ள இளைஞர்களும் தேடிக் கொண்டே போகிறார்கள். கீழடி ஆய்வில் தமிழர்களின் வரலாறு வெளிப்பட்ட பிறகு இளைஞர்கள் மேலும் உற்சாகத்தோடு களமிறங்கியுள்ளனர். எங்கே ஒரு பானை ஓடு கிடந்தாலும் எடுத்துப் பார்த்த பிறகே கடந்து செல்கிறார்கள்.

இப்படி இளைஞர்களின் தேடலில் தஞ்சை மாவட்டம் கட்டயன்காடு, ஒட்டங்காடு, கிராமங்களில் சுமார் 2500 ஆண்டுகள் பழமையான தாழிகள், பல்வேறு குறியீடுகளுடன் பானைகள் புதையுண்டிருப்பதை கண்டறிந்து சார் ஆட்சியர் சிவகுருபிரபாகரன் மூலம் தொல்லியல் துறைக்கும் தகவல் கொடுத்துவிட்டு அகழாய்வுக்காக காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான் தஞ்சாவூர் மாவட்டம், கட்டயன்காட்டில் இருந்து 2 கி மீ தூரத்தில் உள்ள பூவானம் கிராமத்தின் பூவனேசுவரர் சிவன் ஆலயத்தின் அருகே அக்னியாற்றின் மணல் அரிக்கப்பட்ட இடத்தில் சுடுமண் தாய் தெய்வ வழிபாட்டு உருவம் ஒன்று கிராமத்தினரால் கண்டெடுக்கப்பட்டு ஆலய வளாகத்தில் வைத்து பூஜைகள் செய்து வருவதை அறிந்த கட்டையன்காட்டைச் சேர்ந்த (ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் கிராம வளர்ச்சிக்குழுவை சேர்ந்த) இளைஞர் வீரமணி பார்த்து நம் பார்வைக்கும் கொண்டு வந்தார். 

புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர், தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழக தொல்லறிவியல் துறை முனைவர் பட்ட ஆய்வாளர் ஆ.மணிகண்டனுக்கு தகவல் தெரிவித்தோம். இதனைத்தொடர்ந்து கண்டெடுக்கப்பட்ட சுடுமண் சிற்பம்  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என தெரிய வந்துள்ளது. 

 

 Thanjavur District Katayankadu

 

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, அக்னி ஆறானது மிகப்பழமையான பண்பாட்டு தொடர்ச்சி கொண்டது என்பதற்கு சான்றாக இதன் கரையோரப்பகுதிகளில் பல இடங்களில் கருப்பு சிவப்பு பானை ஓடுகள், பெருங்கற்கால சின்னங்கள், தாழி அமைப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த ஆற்றின் மணலின் அடிப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த சுடுமண் உருவம், ஏற்கனவே பல அகழ்வாய்வுகளிலும் கண்டெடுக்கப்பட்ட சுடுமண் சிற்பங்களோடு ஒத்துப்போவதன் மூலம் இதனை சங்ககால பண்பாட்டு அடையாளமாக கருதலாம்.

சுடுமண் சிற்பம் :

சுடுமண் உருவம் 16 சென்டிமீட்டர் உயரமும் 8 சென்டிமீட்டர் அகலமும் கொண்டுள்ள கையடக்க சிற்பமாக உள்ளது. இதன் முழு உடற்பகுதி ஆங்காங்கே சிதைவுற்றிருந்தாலும் முகவுறுப்புகளான கண், மூக்கு, வாய் பிரித்தறியும் வகையிலும், சிகையமைப்பு நேர்த்தியாக தெளிவான, மூன்று அடுக்குகளுடன் விசிறி போன்றும், இரு நீண்ட காதுகளும் அதன் துளையுடைய மடல்கள் தோள்பட்டைவரை காதணியுடன் தொங்குவதாகவும், கழுத்தில் இரண்டு கழுத்தணிகளும் தெளிவற்ற நிலையில் காட்டப்பட்டுள்ளது. 

மார்பு பகுதி உடையின்றியும், இரண்டு கைகளும் வெளிநோக்கி மடக்கியவாறு உள்ளங்கைகளை மூடியநிலையில் அமைக்கப்பட்டுள்ளது. வயிற்றுப்பகுதியில் தொப்புள் தெளிவாக காட்டப்பட்டுள்ளது. அதன் கீழ்ப்பகுதியில் வளைய வடிவில் இடுப்பணி காட்டப்பட்டுள்ளது. தொடைப் பகுதிகள் இரண்டும் அகன்ற நிலையில் காலை மடக்கியவாறு அமர்ந்த நிலையில் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது. கை கால் இரண்டும் உடமைப்புக்கு ஏற்றவாறு இல்லாமல் குள்ளத்தன்மையுடன் காட்டப்பட்டுள்ளது. 

 

 Thanjavur District Katayankadu

 

பெண்ணுருவம் போன்ற தோற்றம் காணப்பட்டாலும் மார்புப்பகுதியில் மாறுபாடு காட்டப்படவில்லை. எனவே இது பெண் சிறுமியின் உருவமாக கொள்ளலாம், எனினும் நீண்ட தொங்கிய காதமைப்பு மூத்தவர்களுக்கே அமையும் என்பதால் இதனை சாதாரண பெண்மணி சிற்பமாக கருதவியலாது. எனவே பேரூர், போளுவாம்பட்டி, திருக்காம்புலியூர், தொப்பூர் (கல் உருவம்) உள்ளிட்ட ஊர்களில் கிடைத்த தரவுகளின் அடிப்படையிலும் பூம்புகார் பெருங்கற்கால முதுமக்கள் தாழிகளில் பதிக்கப்பட்ட தாய் தெய்வ சுடுமண் உருவங்கள் அடிப்படையிலும், இச்சுடுமண் சிற்பத்தையும் தாய் தெய்வ வழிபாட்டிற்கான வழிபாட்டு குறியீடாகவே பார்க்க வேண்டியுள்ளது.

பழமையான சுடுமண் சிற்பங்களுடன் ஒப்பீடு:

பாகிஸ்தான் மொகஞ்சாதரோ, சிந்து சமவெளி, பாண்டிசேரி மாநிலம் அரிக்கமேடு, கீழடி, நாகப்பட்டிணம் மாவட்டம் நாங்கூர் உள்ளிட்ட அகழ்வாய்வுகளில் கிடைத்த சுடுமண் சிற்பங்களுடன் ஓரளவு உருவ ஒற்றுமையுடனும், ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம், ஸ்வர்ண முக்தி ஆற்றுபடுகையில் அமைத்துள்ள கோட்டிப்ரொலு அகழ்வாய்வில் கிடைத்த சுடுமண் சிற்பத்தின் அனைத்து தோற்ற அமைப்புகளும், சுமார் 490 கிலோ மீட்டர் தொலைவிற்கு அப்பாலுள்ள அக்னி ஆற்று படுகையில் கண்டெடுக்கப்பட்ட சுடுமண் சிற்பத்துடன் ஒத்து காணப்படுவது வியப்பாக உள்ளது. ஒப்பீடுகளின் அடிப்படையில் இந்த சிற்பம் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்காலத்தைச் சேர்ந்தது என கருத முடிகிறது என்றார். 

இதே போலதான் புதுக்கோட்டை - தஞ்சை மாவட்ட எல்லையில் அம்பலத்திடலில் கிடைத்த பானைக் குறியீடுகளும் இலங்கை, கிரேக்கம் உள்பட பல நாடுகளில் கிடைத்த குறியீடுகளோடு ஒத்துப் போனது. இதனால் பறந்து விரிந்த சமூகம் தமிழ் சமூகம் என்பதை காண முடிந்தது அதற்கு வலு சேர்க்கும் வகையில் தற்போதைய சுடுமண் சிற்பம் கிடைத்துள்ளது.