தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, மாணவர்கள் நடுவே பேசும்போதெல்லாம் பிரதமரின் பெருமை பேசி வருகிறார். அதன் தொடர்ச்சியாக, “உங்களுக்கென தனி சட்டமன்றத் தொகுதி, தனி பாராளுமன்றத் தொகுதி, தனி ஊராட்சி என முன்னெடுப்போம். பிரதமர் இதற்கு ஆவன செய்வார்” என மீனவர்களிடம் உசுப்பிவிட்டிருப்பது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
தூத்துக்குடி பனிமய மாதா பேராலாயத்திற்குட்பட்ட ஸ்நோ ஹாலில் மீனவர் தின வெள்ளி விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி. “மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகிய முக்கியஸ்தர்களையும், குறிப்பாக உள்ளூர் எம்.எல்.ஏ.க்களையும் அழைக்கக்கூடாது என்கின்ற நிபந்தனையுடன்தான் நிகழ்ச்சிக்கு வரவே ஒப்புக்கொண்டார் ஆளுநர்” என்றார் குமரி மாவட்டத்தினைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவர்.
விழா அரங்கிற்கு வந்த வேகத்திலேயே, விழா ஏற்பாட்டாளர்களால் முன்னரே தேர்வு செய்யப்பட்ட மீனவ சுதந்திர போராட்ட தியாகிகளின் பிள்ளைகளுக்கு விருதுகள், மீனவ ஆளுமைகள் விருது மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் விருதுகளை வழங்கி கௌரவித்தார். பின்னர் உரையாற்றத் துவங்கிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி., “உலக மீனவர் தினத்தில் உங்களுடன் கலந்துகொண்டதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இரண்டு மாதத்திற்கு முன்னால் செப்டம்பர் 21-ம் தேதி உங்களிடம் குறைகளைக் கேட்டறிந்தேன். நீங்கள் வைத்த கோரிக்கையை நான் நிறைவேற்றித் தருவேன். நாட்டினை பாதுகாக்க எவ்வளவு படைகள் இருந்தாலும் கடலைப் பாதுகாக்க நீங்கள் இருக்கிறீர்கள். மரைன் போலீசில் மீனவ இளைஞர்கள் பங்குபெற வேண்டும். உங்களை கடலோர காவல்படையில் சேர்க்க மத்திய அரசிடம் வலியுறுத்துவேன். மீனவ சமுதாயத்தில் சரியான பிரதிநிதித்துவம் இல்லாததால் சட்டமன்றம், பாராளுமன்றம், பஞ்சாயத்தில் பின்னடைந்து வருகிறது. உங்களுக்கென தனித் தொகுதிகளை வாங்கித்தருவேன். பாரத பிரதமர் உங்களுக்கு செய்யவேண்டிய அனைத்தையும் செய்ய வேண்டும் என உத்தரவு போட்டுள்ளார்” எனப் பேசி மீனவ மக்களை உசுப்பிவிட்டார்.
தொடர்ச்சியாக அங்கிருந்து புறப்பட்ட தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, பனிமய மாதா கோவிலிற்குள் செல்ல, அவரை வரவேற்று பனிமய மாதா திருவுருவ படத்தை அளித்தது கோவில் நிர்வாகம். அங்கிருந்து புறப்பட்டு எஸ்.ஆர்.எம். தனியார் ஹாலில் விசைப்படகு மீனவர்கள் ஏற்பாடு செய்திருந்த இன்டோர் மீட்டிங்கில் கலந்துகொண்டார். செய்தியாளர்கள் அனுமதிக்கப்படாத அந்த இன்டோர் மீட்டிங்கில், “நீங்கள் எனக்கு சப்போர்ட் செய்யுங்கள். உங்களுடைய கோரிக்கைகளை நானும், பிரதமரும் நிறைவேற்றித் தருகின்றோம்” என வாக்குறுதி கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆற்றவேண்டிய கட்சிக் கடமைகளை, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி. செய்துவருவது மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.