Skip to main content

காற்றின் மொழிவழியாக என்றும் பிரபஞ்சன் ஒலித்துக்கொண்டே இருப்பார்...

Published on 21/12/2018 | Edited on 21/12/2018

"மனிதனை மனிதனுக்கு உணர்த்துவதைத் தவிர இலக்கியத்திற்கு வேறு ஒரு வேலையும் இல்லை” என்று சொல்லியவர் எழுத்தாளர் பிரபஞ்சன். அதை மட்டும்தான், தன் வாழ் நாள் முழுக்க செய்தும் வந்தார். 1945-ம் ஆண்டு ஏப்ரல், 27-ம் தேதி புதுவையில் பிறந்த பிரபஞ்சன் எனும் சாரங்கபாணி வைத்தியலிங்கம், புதுவையிலே பள்ளிப் படிப்பை முடித்தவர். அதன் பின் கரந்தை கல்லூரியில் தமிழ் வித்வான் பட்டம் பெற்றார். அதன் பின் தஞ்சாவூரில் ஆசிரியராக பணியை தொடங்கினார்.

 

 

pp

 


1961-ம் ஆண்டு முதல், தமிழ் எழுத்து உலகில் தன் எழுத்துகளை இயங்க வைத்துக்கொண்டு வந்தவர். 1995-ம் ஆண்டு இவரின் ’வானம் வசப்படும்’ எனும் நாவலுக்கு தமிழுக்கான சாகத்ய அகாடமி விருது பெற்றார். மேலும் தன் வாழ்நாளில் எத்தனையோ விருதுகள் வாங்கியிருக்கிறார். தென்றல் பத்திரிகையில் கவிஞர் கண்ணதாசன் நடத்திய வெண்பா போட்டியில் பங்கேற்று, தனது 13 வயதில் வாங்கிய பரிசுதான் அவரின் முதல் பரிசு. இதைப் பற்றி ஒரு மேடையில் பகிர்ந்துகொண்ட பிரபஞ்சன் “நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது, தென்றல் பத்திரிகையில் கவிஞர் கண்ணதாசன் வெண்பா போட்டி வைப்பார். அதில் வெண்பாவின் கடைசி வரியை மட்டும் கொடுத்துவிட்டு மீதி மூன்று வரிகளை நிரப்ப சொல்லுவார். அதில் நான் எழுதி முதல் பரிசு வாங்கினேன்” என்றார்.

 

 

எந்தத் துறையிலும் ஒருவர் சாதிக்க எத்தனையோ பேர் உதவி செய்திருப்பார்கள். ஆனால், யாரும் ஆசிரியர் இன்றி எந்தவொரு துறையிலும் சாதிக்க முடியாது. ஒரு கட்டமைப்புக்குள் இருந்துகொண்டு நம்மை வழி நடத்துபவர்கள்தான் ஆசிரியர்கள் என்று இல்லை. நாம் தினமும் சந்திக்கக்கூடிய ஒவ்வொருவரும் நம் ஆசிரியர்கள்தான். அவர்கள் நாம் சார்ந்த துறையிலேயே இருந்தால் அவர்களிடம் இருந்து நிறைய பாடம் கற்று நம் துறையில் சாதிக்க முடியும். இல்லையென்றால் அவர்களின் துறையைப் பற்றிய அறிவைப் பெற்றுக்கொள்ள முடியும் அவ்வளவுதான் வித்தியாசமே தவிர, ஆசிரியர்கள் இல்லாமல் யாராலும் சாதிக்க முடியாது. “எந்த மேடைகளிலும் என் தமிழ் ஆசிரியரை மறக்கமுடியாது” என்று தான் பேசும் அனேக மேடைகளில் குறிப்பிடுவார் எழுத்தாளர் பிரபஞ்சன். எங்கிருந்தபோதும் அவர் என்றும் தன் ஆசிரியர்களை மறந்ததேயில்லை. 

 

 

“கலைஞன் ஒருவன்தான் தன்னைப் பற்றி சிந்திக்காமல் சமூகத்தைப் பற்றி சிந்திப்பவன்” என்பதில் அவர் எப்போதும் சமரசம் செய்துகொண்டேதே இல்லை. ஒரு படைப்பாளனின் பொருளாதார வாழ்வு எப்போதுமே முற்களால் மட்டுமே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ‘தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லையெனில், இந்த ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று பாடிய பாரதியே வறுமையில்தான் இருந்தார். அப்படியிருக்கையில் பிரபஞ்சன் மட்டும் எப்படி விதிவிலக்காகியிருப்பார். “இரண்டு வேளை உணவு, இந்த சமூகம் எனக்கு உத்திரவாதமாக அளித்திருந்தால், இன்னும் சிறப்பான பல கதைகளை நான் எழுதியிருப்பேன்” என்று அவரே ஒரு மேடையில் சொல்லியிருக்கிறார். மனித உறவுகள் நட்பால் பிணைக்கப்பட வேண்டும் என்பது அவரின் ஆழமான கருத்து. மேடைகளில் பேசும்போதும்கூட ஒரு வாக்கியத்திற்கும், இன்னொரு வாக்கியத்திற்கும் இடையே ‘நண்பர்களே’ எனும் சொல்லை சேர்த்து எதிரிலிருக்கும் அனைவரையும் தன்னுள் இழுத்துக்கொள்பவர். இன்று (21.12.2018) அவர் இயற்கை எய்திவிட்டார். ஆனால் அவரின் நண்பர்கள் (வாசகர்கள்) மூலமாக என்றும் இந்த உலகத்தில் காற்றின் மொழிவழியாக ஒலித்துக்கொண்டேதான் இருப்பார்.

 

 

 

 

Next Story

"நான் மட்டும்தானே பேசிக் கொண்டிருக்கிறேன்; ஏன் வசந்திகள் பேசுவதில்லை?" - பிரபஞ்சனின் பார்வையில் காதல்!

Published on 13/02/2021 | Edited on 13/02/2021

 

 

valentines day writter Prapanchan


ரோஜா பழுத்தால் அந்தப் பழம் எவ்வாறு இருக்கும், சரக்கொன்றை, ஒவ்வொரு கொத்தும் ஒவ்வொரு வண்ணமாயிருந்தால் எப்படி இருக்கும், பாலத்து அரச மரத்து மோகினிப் பிசாசு வீடு வரைக்கும் உடன் வருவாளாமே, ஏன் ஒருநாள் கூடப் பேசுவதில்லை போன்ற கேள்விகளால் நான் நிரம்பி இருந்த பருவம் அது. மதியம் உணவுக்கடுத்த வகுப்பு. பேராசிரியர் இன்னும் வந்து சேரவில்லை. எங்களுக்கடுத்த, இடைவெளி விட்டுப் போடப்பட்டிருந்த மேசை மேல் சாய்ந்து, கனகமணி தீவிரமாகப் படித்துக் கொண்டிருந்தாள். அப்படியான பாவனையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள். அந்த பாவனை, சண்முகத் துக்குக் கலக உணர்வைத் தோற்றுவித்துவிட்டது.

 

"கனகமணி, சைவ சித்தாந்தமா படிக்கிறாய்?'' என்றான்.

 

தலையில் பல்லி விழுந்தாற்போலத் திடுக்கிட்டுத் தன் ஆடையைச் சரி பண்ணிக்கொண்டு, புத்தகத்துக்குள் ஆழ்ந்தாள். அது அவனை மேலும் உசுப்பி விட்டது.

 

"சித்தாந்தம் படிக்கிற வயதா உனக்கு? எதை எதையோ படிக்கிறாய், என்னை ஏன் படிக்க மறுக்கிறாய்''

 

அவள் திரும்பி தன் மூன்றாம் விழியால் நோக்கினாள்.

 

"கலிங்கத்துப் பரணியை எடு, கண்ணே. அதில் கடை திறப்பு படி.''

 

இந்த நாடகத்துக்குள் நான் எந்தப் பாத்திரமும் வகிக்கவில்லை. துரதிருஷ்டவசமாக, நான் கலிங்கத்துப் பரணியில் பேய்கள் சமையல் செய்யும் பகுதியில் இருந்தேன். சடாரென என் புத்தகத்தைப் பிடுங்கி, அவள் முன் வைத்த சண்முகம், "சிதறிக் கிடக்கும் எழுத்துக்களைக் கூட்டி வெளியே எறியாதே. அவை எழுத்துக்கள் அல்ல, என் இதய நொறுங்கல்கள்'' என்றவன், அத்தோடு நிறுத்திக் கொண் டிருந்தால் பரவாயில்லை. எதுகை மோனை ரசாயனத் தில் கிளறப்பட்டு, "என் ரத்தினமே'' என்றும் சேர்த் துக் கொண்டான்.

 

கனகமணி, அந்த என் புத்தகத்தை எடுத்துக்கொண்டு முதல்வர் அறைக்கு, ஏறக் குறைய ஓடினாள். அதில் முதல் பக்கத்தில் என் பெயர் இருந்தது.

 

கிஷ்டன் கடையில் தேனீர் அருந்திக் கொண்டிருந்தேன். திடுமென பூமி பிளந்து வந்தவள் போல என் முன் நின்றாள் வசந்தி. "எத்தனை நாள் சஸ்பென்ட்?'' என் றாள். "ஒருவாரம் என்றேன்''. அவள் சிரித்தாள். அந்த மாதிரி ஓட்டை உடைசல் டீக்கடையில் டீ குடிப் பாளா என்று எண்ணியபடி, "டீ சாப்பிடறீங்களா?'' என்றேன். ஆச்சரியம். 'உம்' என்றாள். அவளுக்கு 'ஸ்பெஷல்' டீயாகப் போட்டுக் கொடுத்தான் கிஷ்டன். அதுபோல ரம்யமான டீயை அவன் கடையில் நான் சாப்பிட்டதில்லை.

 

யானை கட்டித் தெருவில் இருந்த அவள் விடுதிக்கு சேர்ந்து நடந்தோம். முதல் அனுபவம். என் கால்கள் தரையிலிருந்து ஒரு அடி உயர்ந்து நடந்தன.

 

"கனகமணி, இதை பிரின்ஸ்பல் வரைக்கும் கொண்டு சென்றிருக்க வேண்டியதில்லை. நான் அவளிடம் சொன்னேன். சம்பந்தமில்லாமல் நீங்கள் வேறு மாட்டிக் கொண்டீர்கள்''.

 

போதும். அது போதுமானதாக இருந்தது...

 

வசந்தியின் நாள் அலுவல் எனக்கு அத்துபடி. ஐந்து மணிக்கு அலாரம் இல்லாமல் எழல். ஆறு வரையும் அறைக்குள் பாட்டுப் பயிற்சி. ஆறு முதல் எட்டு வரைக்கும் மொட்டை மாடியில் நடந்து கொண்டு வாசித்தல். (சரியாக ஆறுக்கும் ஆறரைக்கும் இடையே நான் அந்தத் தெரு வழியாக ஆற்றுக்கு நடப்பேன்...) அப்புறம் குளியல், புறப்பாடு. ஒன்பது இருபதுக்கு ராமையர் கிளப்பைக் கடத்தல்... இத்யாதி. எனக்குப் பூரணி பிடித்திருந்தாள். அப்போது நான் அரவிந்தன். அப்புறம் யமுனா. நான்தான் பாபு. அவ்வப்போது கனவில் வந்து, படகோட்டிக் கொண்டே 'முல்லை மலர் மேலே' பாடும் பத்மினி. எல்லாரின் கூட்டுக் கலவையென வசந்தி. அப்போது நினைவில் என் பிம்பம் ராஜேந்திரசோழன். அப்பா ராஜராஜனைப் பகைத்துக் கொண்டு தனியாக வேறு ஊரையே நிறுவி, தனியாகப் பெரிய கோயிலைத் தோற்கடிக்கும் கங்கை கொண்ட சோழீச்சுரம் கோயில் கட்டும் கோபக்கார இளவரசன். என் அப்பாவின் மேல் அந்தக் காலத்தில் எனக்கிருந்த கோபத்துக்கு இந்த பிம்பமும், அப்பா அறியாத என் பட்டமகிஷித் தேர்வும் எனக்கு எல்லை இல்லாத மகிழ்ச்சியைத் தந்தது.
 

cnc

 

ஆண், பெண் என்பதெல்லாம் வெறும் தோற்றம் மாத்திரம்தான். இதை உணரும் ஞானமே, காதல். காதல், அவஸ்தை இல்லை. அவஸ்தையிலிருந்து விடுபடல் காதல். மனித வாழ்வின் தாத்பர்யம், சுதந்திரம் என்றால், காதல் சுதந்திரத்துக்கான பத்தாம்படி. மறைத்து வைக்கப்பட்ட ரகசியச் சிறகுகளை மனிதர்களுக்கு வழங்குகிறது காதல்.

 

கோடை விடுமுறைக்குப் பிறகு கல்லூரி தொடங்கியது. அடுத்த வாரம்தான் வசந்தி கல்லூரி திரும்பினாள். அவள் மிகவும் மாறுபட்டிருந்தாள். தோற்றம், முகம் எல்லாம். ஏதோ பெரிய அதிர்ஷ்டச் செய்தி இருக்க வேண்டும் என்று நான் அவதானித்தேன். விடுமுறையில் அவள் எழுதிய சில கடிதங்களில், இதற்கான முன் உரைகள் இருப்பதாக நான் உணர்ந்தேன். ஒரு மாலை, அவள் சொன்னாள். கிருஷ்ணமூர்த்தி என்னும் சினேகிதன் அவளுக்கு இருப்பதாகவும், அவனை அவள் விரும்புகிறாள் என்றும், அவர்கள் உறவு, அவர்கள் வீட்டுக்கு உடன்பாடு இல்லை என்றும் பலப்பல விஷயங்கள்.

 

அவள், தின்பதற்கு முடியாத வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருந்தாள். அச்சொற்களை என் காதுகளில் சேர்க்காது. எங்கிருந்தோ வந்த கடுங்காற்று, அவற்றைச் சரளைக் கற்களாகப் பாதை ஓரத்தில் விசிறிப் போட்டது. உலகம் நின்று போய்விட்டது. இது தவறு. உலகம் யாருக்காகவும் நின்று போவதில்லை. அன்று இரவு மட்டும், நிதானமாக நகர்ந்ததாக எனக்குத் தோன்றியது. இரவுகளுக்கு உரிய சத்தத்தையும், வாசனையையும் அன்றுதான் நான் பரிபூரணமாக உணர்ந்தேன். கருத்து, இருண்டிருந்த இரவு, கொஞ்சம் கொஞ்சமாக விடியத் தொடங்கியது. வெளிச்சம் வந்தது. எல்லா இரவுகளும் விடியத்தான் செய்கின்றன.

 

விடியும்போதே நான் தெளிவை அடைந்தேன்.

 

காதல், நட்பு, உறவு என்பது ஒற்றைப் பரிமாணம் உள்ள பொருள் அல்லவோ. அவளை நான் நேசிப்பதை ஏன் நிறுத்திக் கொள்ள வேண்டும். அடுத்த சில மாதங்களிலே கிருஷ்ணமூர்த்தியை எனக்கு அவள் அறிமுகம் செய்து வைத்தாள். எந்தச் சங்கடமும் எனக்கு இல்லை. மனப்பூர்வமாக அவரை நான் வரவேற்று வாழ்த்தினேன். மாலைகளில் சேர்ந்து நடந்தோம். ஊர் சுற்றினோம். பனி பெய்த இரவுகளில் நனைந்தோம். அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு நான் போனேன். அவரும் என்னுடன் பல இரவுகள் தங்கினார். அவள் பல இரவுகளில் எங்களுக்குப் பாடினாள்.

 

அடுத்த ஒன்றிரண்டு மாதங்களில் வசந்தியின் அப்பா வந்திருந்தார். வசந்தி எட்டாம் மாதம் என்று சொல்லிக் கொண்டார்கள். "தவிர்க்க முடியலை. எல்லாம் அவசரம் அவசரமாக நடந்து விட்டது. எழுதுகிறேன்'' என்று மட்டும், பெட்டி படுக்கையோடு பேருந்தில் ஏறும்போது வசந்தி சொன்னாள். அப்பா, யாருடனும் எதுவும் பேச முடியாத துயரத்தில் இருந்தது தெரிந்தது.

 

எனக்கு எதுவும் பிரச்னையாக இல்லை. வசந்தி படிப்பை முடிக்காமல் போகிறாளே என்பதுதான் என் கவலையாக இருந்தது. அதுவும் விரைவில் தீர்ந்து, படித்து, ஒரு தமிழாசிரியையாக, பட்டதாரியாக, விரிவுரையாளராக மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தாள். அவள் பணியாற்றும் கல்லூரியின் தமிழ் மன்றத்துக்குப் பேச அழைத்தாள். சென்று வந்தேன்.
 

nkn


வசந்தியின் வகுப்புகள், சுவைகள், பிடிக்கும் ராகங்கள், படிக்கும் எழுத்தாளர்கள், சங்க இலக்கியத்தில் அவள் புலமை, பிடித்த வர்ணங்கள் எல்லாம் எனக்குத் தெரியும். என்னைப் பற்றியும் அவள் அறிவாள். போன ஆண்டு, ஒரு மழை நாளின்போது, ராமநாதனின் சகானாவைக் கேட்க நேர்ந்தது. தவிர்க்க முடியாது, அவள் நினைவு அதிகம் என்னைக் கிளர்த்தியது. தொலைபேசியில் அவளை அழைத்தேன். "என்ன விஷயம்?'' என்றாள். சொன்னேன். சற்று மவுனமாக இருந்துவிட்டுச் சொன்னாள். "நம்பமாட்டே... இப்போ, அஞ்சு நிமிஷத்துக்கு முன்னால் உன்னை நினைச்சேன். நம்பியகப் பொருளைப் படிக்க வேண்டி இருந்தது. புத்தகத்தை எடுத்து இப்போதான் தேவைப்பட்ட பகுதியை முடித்தேன். அது, நீ கொடுத்த புத்தகம்'' என்றாள்.

 

மரம், காற்று, தெரு, வீடு, தென்றல், சென்னை வெயில் எல்லாம் எங்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கின்றன. ஒரு வருத்தம்.

 

எங்கள் அனுபவத்தை நான் மட்டும்தானே பேசிக் கொண்டிருக்கிறேன். ஏன் வசந்திகள் பேசுவதில்லை. யார் இன்னும் தடையாக இருப்பது? இன்னும் எத்தனை காலம்தான் நினைவுகள் ஆண்கள் மயமாக இருப்பது? சத்தியம். பெண்கள் பேசும்போது தான் முழுமையடையும் என்று நான் நம்புகிறேன்.

 

-மு. மாறன்

 

 

Next Story

கஜா புயலின் தாண்டவம், வாஜ்பாய் மரணம், எழுத்தாளர் பிரபஞ்சனின் மறைவு, ஆணவக்கொலைகள்... ஷாக்ஸ் 2018 பகுதி 2

Published on 31/12/2018 | Edited on 31/12/2018
vajpaayee


முன்னாள் பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாய் உடல்நிலை சரியில்லாமல் ஆகஸ்ட் 16ஆம் தேதி காலமானார். 
 

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரியோ நகரத்தின் 200 வருட பழமைவாய்ந்த ராயல் அருங்காட்சியம் செப்டம்பர் 2ஆம் தேதி தீக்கிரையானது.
 

கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி பிஹாரிலுள்ள ஒரு மருத்துவமனையில் 11 வயது சிறுவன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டார். அவரின் உடலை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் கொடுக்காததை அடுத்து இறந்த மகனின் உடலை தோளில் சுமந்தபடி வீட்டுக்கு கொண்டு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 

உலகின் மிகவும் வயதான மோபி டால்பின் தன்னுடைய 58வது வயதில் காலமானது.  
 

ranjan gogai

 

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி தந்ததையடுத்து, பம்பை நிலக்கல் போன்ற பகுதிகள் போராட்டக்களமாக மாறியது.​​​


கடந்த அக்டோபர் 9ஆம் தேதி ஆளுநர் மாளிகையின் புகாரின் பேரில் சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். 

பாரம்பரிய நெல் விதைகளை மீட்டு எடுத்த நெல் ஜெயராமன், கடந்த நவம்பர் மாதம் புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு மாத சிகிச்சையை அடுத்து டிசம்பர் 6ஆம் தேதி காலமானார்.

 

amal hussein



ஏமனில் மனிதாபிமானம் அழிந்துவிட்டது என்பதை அடையாளப்படுத்தும் விதமாக அமல் ஹுசைன் என்கிற 7 வயது சிறுமியின் புகைப்படம் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அச்சிறுமி நவம்பர் 1ஆம் தேதி காலமானார்.
 

பல சூப்பர் ஹீரோக்களின் வடிவங்களை உருவாக்கிய மார்வெல் காமிக்ஸ் நாயகன் ஸ்டான் லீ (95) உடல்நலக்குறைவால் கடந்த நவம்பர் 12ஆம் தேதி மறைந்தார். 
 

கடந்த நவம்பர் மாதத்தில் தமிழக டெல்டா பகுதிகளில் கஜா புயல் கோரத்தாண்டவம் ஆடியது. இந்த புயாலால் பல விவசாயிகள் வீடுகள் இன்றி முகாமுக்கு தள்ளப்பட்டனர். சில கிராமங்களில் இன்றுவரை மின் வசதி வரவில்லை.
 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள சூடைக் காந்த பள்ளி எனும் கிராமத்தைச்  சேர்ந்த சுவாதியும்,  இளைஞர் நந்தீஸ் என்பவரும் பல எதிர்ப்புகளை மீறி சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டனர். திருப்பூரில் தங்களது வாழ்க்கையை நடத்திவந்த இருவரும் 13.11.2018 அன்று கர்நாடகா, மாண்டியா பகுதியில் பிணமாக கண்டெடுக்கப்பட்டனர். உடற்கூராய்வில் இருவரும் அடித்துக் கொல்லப்பட்டிருப்பதும், சுவாதி மூன்றுமாதக் கர்ப்பிணி என்பதும் தெரியவந்தது. இதுபோல் இன்னும் சில ஆணவக்கொலைகள் நடந்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 

கடந்த நவம்பர் 26ஆம் தேதி எழுத்தியல் அறிஞர், தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் காலமானார்.
 

gaya cyclone



கஜா புயல் பாதிப்பை உணர்ந்து பல மக்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கை கொடுத்தார்கள். ஆனால், இக்கட்டான நிலையிலும் பாதிக்கப்பட்ட ஊர்களை சேர்ந்த சில வியாபாரிகள் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.200க்கும், 1 மெழுகுவர்த்தி ரூ.20க்கும் விற்ற அநியாயங்களும் நடந்தது.
 

தயாரிப்பாளர் சங்க தலைவராக இருக்கும் விஷால் 7கோடிக்கு முறைகேடு செய்துவிட்டார் என்று விஷாலின் எதிரணி தியாகராய நகரிலுள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்டனர். இதனை தொடர்ந்து அடுத்த நாள் அந்த பூட்டை உடைக்க வந்த விஷாலுக்கும் காவல் துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் விஷால் கைது செய்யப்பட்டார்.

 

prabanjan

 


வானம் வசப்படும், மானுடம் வெல்லும் போன்ற தமிழ் நாவல்களை எழுதிய எழுத்தாளர் பிரபஞ்சன் கடந்த டிசம்பர் 21ஆம் தேதி உடல்நல குறைவால் காலமானார். 
 

ராயபுரம் ஐந்து ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன், கடந்த டிசம்பர் 22ஆம் தேதி காலமானார். அவரது மறைவிற்கு பிரதமர் முதல் பலர் தங்களது அஞ்சலியை தெரிவித்தனர்.
 

எழுத்தாளரும் தமிழ் அறிஞருமான க.ப.அறவாணன் உடல்நலக்குறைவால் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி சென்னையில் காலமானார்.
 

தெலுங்கானாவை சேர்ந்த பெண் அனுராதா என்பவர் பெற்றோரை எதிர்த்து கலப்பு திருமணம் செய்துகொண்டார். அதனால் கோபமடைந்த அனுராதாவின் பெற்றோர், அவரை வீட்டிற்கு கடத்தி வந்து தீக்கிரையாக்கி அந்த சாம்பலை நதியில் கலந்தனர். பின்னர், அந்த பெற்றோர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இது மட்டும் இந்த வருடத்தில் நடந்த ஆணவக்கொலை அல்ல, தெலுங்கானாவிலேயே மூன்று பயங்கரமான ஆணவக்கொலைகள் இந்த வருடத்தில் நடந்திருக்கிறது.
 

மருத்துவ ஊழியர்களின் கவனக்குறைவினால் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஹெச்ஐவி வைரஸ் பாதித்த இரத்தத்தை ஏற்றினர். இதனால் அப்பெண்ணுக்கு ஹெச் ஐ வி தொற்று ஏற்பட்டது. இதை எதிர்த்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போதுதான் அதேபோல் எங்களுக்கும் நடந்துள்ளது என மெலும் சில பெண்கள் புகார் அளித்தனர். இது தமிழகத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

 

முந்தைய பகுதி:

காவிரி தண்ணீர் என்றால் கண்டிப்பாக கிடைக்காது... கண்ணத்தை தொட்ட கவர்னர்... - ஷாக்ஸ் 2018 பகுதி 1