Skip to main content

டாஸ்மாக் அருகே நிகழ்ந்த கொலை; இரண்டு தனிப்படைகள் அமைப்பு

Published on 05/04/2025 | Edited on 05/04/2025
inicdent near Tasmac; Two special forces formed

புதுக்கோட்டையில் டாஸ்மாக் கடை அருகே நடந்த பகீர் கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் மழையூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர் என்பவரின் மகன் முருகேசன் (20). இவர் மரம் வெட்டும் தொழிலாளி ஆவார். இவர் இன்று (04.04.2025) இரவு வேலை முடிந்து அதே ஊரில் தனது வீட்டில் இருந்து 200 மீ தூரத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று வெளியே வரும் போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு மர்ம கும்பல் முருகேசனை சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு இனி உயிர் பிழைக்க முடியாது என்பதை உறுதி செய்து கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கிடந்த முருகேசனை அக்கம்பக்கத்தினர் மீட்டு அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று பார்த்த போது முருகேசன் உயிர் பிரிந்திருந்தது. அங்கு வந்த போலீசார் உடனே முருகேசன் சடலத்தை புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இளைஞரான முருகேசனை வெட்டி படுகொலை செய்யப்பட்ட தகவல் காட்டுத்தீயாக பரவியதால் அவரது உறவினர்கள் கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் மழையூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து கொலை நடந்ததும் மூடப்பட்ட டாஸ்மாக் கடை கதவுகளை பெண்கள் அடித்து கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் பதற்றமான சூழ்நிலை உருவானதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டனர். புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முருகேசனின் உறவுக்காரப் பெண்ணை அதே ஊரைச் சேர்ந்த மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞர் காதலித்து அந்த பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார். பெண்ணை மீட்ட முருகேசன் உறவினர்களை மிரட்டிய காதலனுக்கு ஆதரவாக கருப்பட்டிப்படி கிராமத்தில் இருந்து சில இளைஞர்கள் அரிவாள்களுடன் வந்ததை அறிந்த முருகேசன் உறவினர்கள் திரண்டதால் அனைவரும் தப்பி ஓடி விட்ட நிலையில் ஐயப்பன் என்ற ஒரு இளைஞர் மட்டும் அரிவாளுடன் சிக்கிக் கொண்டதால் முருகேசன் உறவினர்கள் ஐயப்பனை கவனித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் ஐயப்பனுக்கு அவமானமும் காதலனுக்கு ஏமாற்றமும் ஏற்பட்ட பகைமை வளர்ந்துள்ளது.

இந்நிலையில் தான் முருகேசன் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. பகையை தீர்த்துக் கொள்ள கூலிப்படை உதவியுடன் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று  போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மற்றொரு பக்கம் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சிலரை விசாரணை வளையத்திற்குள்ளும் கொண்டு வந்துள்ளனர். கொலையாளிகளை பிடிக்கவில்லை என்றால் சடலத்தை வாங்கமாட்டோம் என்று முருகேசன் உறவினர்கள் கூறி போராட்டத்தில் உள்ளனர். விடியும் முன்பே கொலையாளிகளை கைது செய்யும் பணியில் போலீசார் துரிதமாக இறங்கினர்.

டாஸ்மாக் கடை அருகே நிகழ்ந்த இந்த பகீர் கொலை சம்பவத்தை கண்டித்து டாஸ்மாக் மதுக்கடையை அந்த பகுதியினர் சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. கொலை சம்பவம் நடைபெற்ற மலையூரில் இன்று முழு கடையடைப்பு அறிவிக்கப்படுவதாக வர்த்தக சங்கங்கள் தெரிவித்துள்ளன. இந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மற்ற குற்றவாளிகளை கைது செய்ய இரண்டு தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்