Skip to main content

எனக்கு முதல்வர் ஒரு பொருட்டே இல்லை.... தலைவர் என்றால் பிரதமர் மோடி மட்டும்தான் - அண்ணாமலை!

Published on 04/10/2021 | Edited on 04/10/2021

 

h

 

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, " இன்றைக்கு காமராஜருக்குத் தமிழக பாஜக சார்பில் நாம் மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளோம். ஆனால், அவருக்கு இந்தியாவிலேயே மரியாதை செய்யாத ஒரு கட்சி இருக்கிறது என்றால் அது, காங்கிரஸ் கட்சிதான். சோனியா காந்தி காங்கிரஸ் கட்சித் தலைவரான பிறகு ஒருமுறை கூட தமிழகம் வந்து அவரின் மணி மண்டபத்தில் அஞ்சலி செலுத்தவில்லை. ராகுல் காந்தி எத்தனையோ முறை தமிழகம் வந்துள்ளார். ஆனால் அவருக்கும் இங்கே வர வேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லை. ஆனால் பாஜக அவரை மதிக்கிறது, அவரின் ஆட்சியை நேசிக்கிறது. இப்படிப்பட்ட முதல்வரை நாம் பெற்றிருந்தோம் என்று நாம் பெருமைப்பட வேண்டிய விஷயங்களை அனைவருக்குத் தெரியுமாறு எடுத்துரைக்க வேண்டும். அதை நாங்கள் எப்போதும் செய்வோம்.

 

இன்றைக்கு முதல்வர் கூட விமானத்தில் மதுரை செல்வதாகத் தகவல் வந்துள்ளது. அவர் கூட இங்கே வந்துவிட்டுச் சென்றிருக்கலாம். இன்றைக்கு யார் யாருக்கோ செலவழித்துச் சிலை வைக்கிறார்கள். 39 கோடியில் மணி மண்டபம் அமைக்க இருப்பதாகக் கூறுகிறார்கள். அமைக்கட்டும், நாமும் அதை வரவேற்போம். ஆனால் கர்ம வீரரின் மணி மண்டபம் இங்கே சிதிலமடைந்து கிடக்கிறது.  அதைச் சரிசெய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படவில்லையே என்ற குற்றச்சாட்டைத்தான் நாம் முன்வைக்கிறோம். தமிழக அரசு அதை எடுத்துச் செய்தால் சந்தோஷம். இல்லை என்றால் தமிழக பாரதிய ஜனதா கட்சி எடுத்துச் செய்யும் தயாராக இருக்கிறோம் என்பதைக் கூறிக்கொள்கிறோம்.

 

மேலும் செய்தியாளர் கேள்விக்குப் பதிலளித்த அவர், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா முதல்வர் தொடர்பாகப் பேசிய கருத்துக்குப் பதிலளித்தார். அதில், " ராஜா அண்ணா முதல்வர் தொடர்பாகக் கூறிய கருத்து ஏதோ ரகசியமாகப் பேசிய கருத்து ஒன்றும் அல்ல. முதல்வர் சுயமாகச் சிந்திக்கவில்லை. அவரை யாரோ இயக்குகிறார்கள், அது மிகவும் ஆபத்து என்பதையே அவர் தெரிவித்துள்ளார். எனவே, ராஜா அண்ணா இதை மனதில் வைத்துக் கூறியதற்கு நீங்கள் வேறுபொருள் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. முதலமைச்சர் ஆய்வுக்குச் செல்லும் இடங்களில் எல்லாம் முன்னரே கேமரா செட் செய்யப்படுகிறது, அலங்கரிக்கப்படுகிறது.  இதை எல்லாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். எனவே இப்படி இவர்கள் செய்வதனால் முதல்வர் பலம் வாய்ந்தவர் என்று நாங்கள் நம்பவில்லை. அவரை பார்த்தெல்லாம் பயப்பட ஒன்றுமில்லை. இந்த மாதிரியான விஷயங்கள் பொதுமக்களுக்கு தொந்தரவாகத்தான் மாறும். பாரதப் பிரதமர் மோடி தொடர்பாக ஃபேக் போட்டோக்களை சிலர் பதிவேற்றி வருகிறார்கள். அவர்களுக்கெல்லாம் இது வெட்கக்கேடானது, கண்டிக்கத்தக்கது. ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மோடிஜி ஒரு உதாரணம்" என்றார்.