
நீட் தேர்வுமுறை தமிழகத்தில் உள்ள ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என ஆராய, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், ஒன்பது பேர் அடங்கிய குழுவை நியமித்து, கடந்த ஜூன் மாதம் 10-ம் தேதி அரசாணை பிறப்பித்தது தமிழக அரசு. இந்த குழு, கடந்த ஜூலை மாதம் தங்களின் அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பித்தது. நீட் தேர்வு காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சுட்டிக்காட்டும் இந்த அறிக்கை, நீட் தேர்வை நீக்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது. ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை வெளியாகி தமிழகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏ.கே.ராஜன் தலைமையிலான இந்தக் குழுவில், சுகாதாரத்துறை செயலர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத், முன்னாள் துணை வேந்தர் எல். ஜவஹர் நேசன், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் காகலா உஷா, மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் ஆர். நாராயண பாபு உள்ளிட்ட 9 பேர் உறுப்பினர்களாக இடம்பெற்றிருந்தனர்.

இந்தக் குழுவினர், நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்ந்தனர். அத்துடன், நீட் தேர்வின் தாக்கம் குறித்து மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் எனப் பலரின் கருத்துகளையும் கேட்டறிந்தனர். அந்த வகையில், சுமார் 86 ஆயிரம் பேர் கருத்துத் தெரிவித்திருந்தனர். இதில் 65,007 பேர் நீட் தேர்வை எதிர்த்தனர். 18,966 நீட் தேர்வை ஆதரித்தனர். 1,450 பேருக்கு கருத்து இல்லை எனக் கூறியிருந்தனர். இதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலினிடம் கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி ஆய்வறிக்கையை சமர்ப்பித்தனர். 165 பக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த அறிக்கை, நீட் ஏன் ரத்து செய்யப்படவேண்டும் என்பதற்கான காரணங்களை புள்ளிவிவரங்கள் அடிப்படையில் ஆதாரப்பூர்வமாக அடுக்கியுள்ளது. அதில் உள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு.
SAT, ACT, GMAT, BMAT உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் போட்டித் தேர்வும் இந்தியாவின் CEE எனப்படும் பொது நுழைவுத் தேர்வும் எப்படி அமலாக்கப்பட்டது என்பதை ஒப்பிட்டுப் பேசும் ஏகே ராஜன் கமிட்டி, அத்துடன், அந்த நாடுகள் தற்போது நுழைவுத்தேர்வு முறையை மறுபரிசீலனைக்கு உட்படுத்திக் கொண்டு இருப்பதாகவும் கூறுகிறது. மேலும், நீட் தேர்வு கொண்டுவருவதற்கு முன்பு நடைபெற்ற 2016-17 ம் ஆண்டுக்கான மருத்துவத் தேர்வில், 537 ஆக இருந்த தமிழ்வழி மாணவர்களின் எண்ணிக்கை, நீட் தேர்வு நடந்த 2017-18 கல்வியாண்டில் 56 ஆகக் குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கை, 2020-21 கல்வியாண்டில் 82 பேரும், 7.5% இட ஒதுக்கீட்டால் 217 பேரும் என உயர்ந்தாலும் நீட் தேர்வுக்கு முந்தைய 537-ஐ நெருங்க முடியவில்லை.

நீட் தேர்வுக்கு முன், மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த 65.66% மாணவர்கள், அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். ஆனால், நீட் தேர்வுக்கு பிறகு அது 43.13% ஆகக் குறைந்துள்ளது. அதேநேரத்தில், 0.39% ஆக இருந்த சிபிஎஸ்இ மாணவர்களின் எண்ணிக்கை 26.83% ஆக உயர்ந்து இருக்கிறது. நீட்டால் தமிழ் வழியில் படித்து மருத்துவராகும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அத்துடன், நீட் தேர்வு மொழி, கலாச்சாரம், பிராந்தியம் மற்றும் சமூக பொருளாதார ரீதியாக பாரபட்சமாக இருக்கிறது எனவும் இந்த அறிக்கை குற்றம் சாட்டுகிறது.
தரமான மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர்வதை நீட் தேர்வு உறுதிசெய்யவில்லை. அதற்கு மாறாகக் குறைவான திறனுள்ள மாணவர்கள் மருத்துவ இடங்களைப் பெறுவதையே இந்தத் தேர்வுமுறை உறுதிசெய்கிறது. பெரும்பாலும் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தான் நீட் பயனுள்ளதாக உள்ளது. மாறாக, முதல் முறை எழுதும் மாணவர்களுக்கு சாதகமாக இல்லை. இந்த நீட் தேர்வினால், மாநிலக் கல்வியில் படிக்கும் மாணவர்கள் நம்பிக்கை இழக்கிறார்கள். அதேபோல, தமிழ்நாட்டில் நீட் தேர்வு அறிமுகமான பிறகு, மருத்துவப் படிப்பில் சேரும் முதல் தலைமுறை பட்டதாரிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. 2016-17 கல்வி ஆண்டில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் 18.26 சதவீதமாக இருந்த முதல் தலைமுறை பட்டதாரிகளின் விகிதம், இந்த ஆண்டில் வெறும் 10.46 சதவீதம் ஆகக் குறைந்துள்ளது. இது சென்ற ஆண்டை விட 1.87% சதவீதம் குறைவு.

நீட் கோச்சிங் சென்டர்களுக்கு குறைந்த கால கட்டணமாக ரூ.35 ஆயிரம் முதல் ரூ.90 ஆயிரம் வரையும் நீண்ட கால கட்டணமாக ரூ.1 லட்சம் முதல் ரூ.4.5 லட்சம் வரையும் மாணவர்கள் செலவிடுவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், ரூபாய் 2.5 லட்சத்துக்கும் குறைவாக ஆண்டு வருமானம் ஈட்டக்கூடிய குடும்பப் பின்னணி கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை, நீட் தேர்வுக்கு முன் 47.42% ஆக இருந்தது. ஆனால், இந்த 2020-2021 கல்வியாண்டில், 41.05% ஆக குறைந்து உள்ளது எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐசிஎஸ்இ, சிபிஎஸ்இ என இந்தியா முழுவதும் வெவ்வேறு வகையான பாடத்திட்டங்கள் உள்ள நிலையில், தமிழகத்தில் மாநில பாடத்திட்டம், கற்பித்தல் மற்றும் தேர்வு மதிப்பீட்டு முறைகளை மேம்படுத்துவது அவசியம் என அரசுக்கு அறிவுறுத்தியுள்ள இந்த கமிட்டி, 2007-ல் கொண்டுவரப்பட்ட நுழைவுத்தேர்வு ரத்து சட்டம் போல, நீட் தேர்வை ரத்துசெய்யும் வகையிலும் சட்டம் இயற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறவும் பரிசீலனை செய்துள்ளது. அத்துடன், எம்பிபிஎஸ் படிப்பில் சேர்க்கைக்கு 12ஆம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்களையே அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்றும் நீட் தேர்வை அகற்றுவதற்கான சட்டரீதியான வழிகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

இந்த தேர்வு முறையால், நகர்ப்புறங்களில் மருத்துவராகப் பணிபுரிய விரும்பும் மருத்துவர்கள் அதிகரிக்கக் கூடுமே ஒழிய, கிராமங்களுக்கு மருத்துவர்கள் கிடைப்பதே திண்டாட்டமாகும் என்பதையும் குறிப்பிடுகிறது. நீட் தேர்வு இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்து நடந்தால், கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறத்தில் வசித்துவரும் ஏழை, எளிய மாணவர்களால் மருத்துவப் படிப்பில் சேரமுடியாத சூழல் ஏற்படும். அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற மருத்துவர்கள் போதிய அளவில் கிடைக்க மாட்டார்கள். தமிழ்நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பு மிக மோசமாகப் பாதிக்கப்படும். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கான பற்றாக்குறை ஏற்படும். நாடு சுதந்திரம் அடைவதற்கு முந்தைய நிலைக்குத் தமிழகம் திரும்பலாம். சுகாதார கட்டமைப்பு தரவரிசையில் பிற மாநிலங்களுக்கு கீழ் தமிழகம் செல்லும் அபாயம் ஏற்படலாம் என எச்சரித்துள்ளது ஏகே ராஜன் கமிட்டியின் அறிக்கை.
ஏகே ராஜன் சமர்ப்பித்துள்ள இந்த அறிக்கையில், நீட் தேர்வில் உள்ள சமமின்மையை விளக்கும் வகையில், கீழ்கண்ட புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
