Skip to main content

'ஏய் இங்க வா' இதென்ன பொள்ளாச்சி கேசுன்னு நினைச்சியா... தப்பிக்கும் குற்றவாளிகள்... அதிர்ச்சி தகவல்! 

Published on 07/11/2019 | Edited on 07/11/2019

"அண்ணா அடிக்காதீங்கண்ணா... கழட்டிடுறேன்'' என ஒரு பெண்ணின் கதறலைக் கேட்டு ஒட்டுமொத்த தமிழகமே உறைந்து போனது. பொள்ளாச்சியில் நடந்த காமக்கொடூரன்கள் தொடர்பான அந்த வீடியோவில் தொடர்புடைய குற்றவாளிகளில் இருவர் மீதான குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

"ஏய் இங்க வா... இதென்ன பொள்ளாச்சி கேசுன்னு நினைச்சியா. ஹெல்மெட் கேஸ். இதுல அவ்வளவு சீக்கிரம் தப்பிக்க முடியாது'' என சமூகவலைத்தளங்களில் வேதனைக் கேலிகள் பரவும் அளவுக்கு பொது மக்கள் மத்தியில் கோபமும் கொந்தளிப்பும் அதிகமாக நிலவுகிறது. இந்த காமக் கொடூரம் வெளிவந்ததே கடந்த பிப்ரவரி மாதம்... 19 வயது இளம்பெண் "என்னை கடத்திச் சென்று திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோர் மிரட்டினார்கள்' என்று புகார் செய்தபோதுதான். அதற்கு குற்றவாளியான திருநாவுக்கரசு ஒரு பதில் வீடியோவை வெளியிட்டான்.

 

incident



"உங்களிடம் ஒரு பெண்தான் புகார் அளித்திருக்கிறாள். அவளைப் போன்ற நூறு பெண்கள் என்னிடம் இருக்கிறார்கள். அவர்கள் என்னைப் புகழ்ந்து பேட்டி யளிக்கத் தயாராக இருக்கிறார்கள். பொள்ளாச்சியில் நடந்தது சாதாரண சம்பவமல்ல. இதில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த பலர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். சாதாரண போலீஸ் விசாரித்தால் உண்மை வெளியே வராது. சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுங்கள்'' என போலீசாருக்கே சவால் விடுகிறான். அவனை அவசர அவசரமாக போலீசார் கைது செய்தனர். அதற்குப் பிறகு அந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நூறு பெண்கள், ஆளுங்கட்சி வி.ஐ.பி.க்கள் என யாரைப் பற்றியும் திருநாவுக்கரசு பேசவில்லை.
 

lawyer



"அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சபரி, சதீஷ் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோர் மீது பெண்களைத் தாக்குதல், பெண்களை அவமானப்படுத்துதல், வீடியோக்கள் எடுத்தல் மற்றும் மிரட்டுதல் ஆகிய பிரிவுகளில் வழக்குத் தொடரப்பட்டது. மார்ச் 12-ஆம் தேதி கோவை மாவட்ட கலெக்டர் ராஜாராமனும் எஸ்.பி. பாண்டியராஜனும், குற்றவாளிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டனர். குற்றவாளிகள் சிறைக்குப் போகும்போது அவர்கள் மீதான பொதுமக்களின் கோபம் அதிகமாக இருந்தது.

 

incident



சிறைக் காவலுக்குச் செல்லும் பெண் போலீசார், அவர்களை சிறையிலேயே நையப்புடைத்தனர். சிறையிலிருந்த சாதாரண கைதிகளும் விடவில்லை. ஆனால் இவர்களுக்குப் பாதுகாப்பாக இருந்த ஆளுங்கட்சி தயவுடன் அவர்களுக்கு தனிச்சிறை அளிக்க வேண்டுமென தமிழக சிறைத்துறை தலைவரிடமிருந்தே கோவைக்கு உத்தரவு பறந்தது. அவர்களுக்கு தனிச்சிறை. மற்ற கைதிகள் போல கூழ், களி சாப்பிட வேண்டாம் என இட்லி, தோசை, மதிய சாப்பாடு, இரவுச் சாப்பாடு போன்றவை சிறைத்துறை அதிகாரிகளின் வீடுகளில் சமைத்து அனுப்பப்படுகிறது.

பீடி, சிகரெட், செல்போன், இன்டர்நெட் வசதிகளுடன் வசதியாகவே வாழ்ந்து வருகிறார்கள். அவர்களைத் தினமும் உறவினர்கள் சந்திக்கிறார்கள். விசாரணைக் கைதிகள் என்பதால் புத்தம் புதிய உடைகளை அணிந்துகொண்டு சிறையை தங்களது செல்வாக்கால் கலக்கிவருகின்றனர்'' என்கிறது சிறைத்துறை வட்டாரம்.


கோவை கலெக்டர் ராஜாராமனும் இந்த குற்றவாளிகள் தொடர்பான குண்டர் தடுப்புச் சட்ட ஆவணங்களை சென்னை கோட்டையிலிருந்து உள்துறை செயலாளருக்கு அனுப்பி வைக்கிறார். சாதாரணமாகவே இதுபோன்ற குண்டர் தடுப்புச் சட்டம் தொடர்பான வழக்குகளில் உள்துறை செயலாளர் கையெழுத்து போடுவது தாமதமாகும். ஆனால் பொள்ளாச்சி குற்றவாளிகள் விஷயத்தில் உள்துறை செயலாளர் ஆறுமாதம் கழித்து ஏப்ரல் முதல்வாரத்தில்தான் கையெழுத்துப் போட்டிருக்கிறார். உள்துறை செயலாளர் கையெழுத்து போட்ட- குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஆவணங்கள் குற்றவாளிகளின் உறவினர்களுக்கு அனுப்பப்பட வேண்டும். உள்துறை செயலாளர் கையெழுத்துப் போடுவதில் ஏற்பட்ட தாமதத்தைக் காரணமாக வைத்தே குற்றவாளிகளின் உறவினர்களுக்கு அவை வழங்கப்பட வில்லை. இந்த வேலையை திறம்படவே செய்து முடித்தார் பொள்ளாச்சி சரக டி.எஸ்.பி.யான ஜெயராமன்.

துணை சபாநாயகரான பொள்ளாச்சி ஜெயராமனின் நம்பிக்கைக்குரியவரும், குற்ற வாளிகளான திருநாவுக்கரசுக்கும் சபரிராஜனுக்கும் மிக நெருக்கமானவர் என குற்றஞ்சாட்டப்படுபவருமான ஜெயராமன், இந்த ஆவணங்களை உறவினர்களுக்கு கொடுப்பதில் அக்கறை காட்டவில்லை. இதை ஒரு வாய்ப்பாக குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ததற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த குற்றவாளிகளின் உறவினர்கள் எடுத்துக்கொண்டார்கள் என்கிறார்கள்.

"இந்த வழக்கில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்கள் முறையாக குற்றவாளிகளுக்கு வழங்கப்படவில்லை. எனவே அவர்கள் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யுங்கள்' என அவர்கள் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.சுந்தரேசன், ஆர்.எம்.சீத்தாராமன் முன்பு விசாரணைக்கு வந்தது. ஆட்கொணர்வு மனு என்ற அடிப்படையில் வாழும் உரிமையை பறித்து சட்டவிரோத காவலில் வைத்திருக்கிறார்கள் என்கிற கோரிக்கையுடன் வந்த வழக்கை, "குற்றவாளிகளின் உறவினர்களுக்கு குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப் பட்டவர்களின் வழக்கு ஆவணங்கள் வழங்கப் பட்டதா?' என நீதிபதிகள் கேட்க, "வழங்கப்படவில்லை' என அரசுத் தரப்பு ஒத்துக் கொண்டது.


இப்படி அரசே சேம்சைடு கோல் போட... வேறு வழியில்லாமல் பொள்ளாச்சி வழக்கு தொடர்பான குற்றவாளிகள் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது'' என்கிறது கோர்ட் வட்டாரம். "பொள்ளாச்சி காமக் கொடூர குற்றவாளிகளுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகக்கூடாது' என பொள்ளாச்சி, கோவை வழக்கறிஞர்கள் ஒட்டு மொத்தமாக முடிவெடுத்திருந்தனர். அத்துடன் இந்த கொங்கு மண்டல பகுதியிலிருந்து உயர்நீதிமன்றத்தில் ஆஜராகும் சீனியர் வழக்கறிஞர்களும் இந்த குற்றவாளிகளுக்காக ஆஜராகவில்லை. கடைசியில் பொள்ளாச்சி ஜெயராமன் வகையறாதான் குற்றவாளிகளுக்காக ஒரு வழக்கறிஞரை, வழக்கறிஞர் சங்கங்களின் எதிர்ப்பை மீறி வழக்கை தொடர வைத்ததோடு, குற்றவாளிகளின் கோரிக்கைக்கு அரசு தரப்பில் எதிர்ப்பில்லை என்றவுடன் நீதிமன்றம் வெறும் ஐந்து நிமிட விசாரணையில் குற்றவாளிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தில் இருந்து விடுவித்தது என்கிறது கோர்ட் வட்டாரம்.

"குண்டர் தடுப் புச் சட்ட வழக்கு என்பதே ஒருவித செட்-அப்தான். அதில் கைது செய் யப்படும் குற்றவாளிகள் வெளியே வருவது சாதாரணமான ஒன்றுதான். ஆனால் பொள்ளாச்சி காமக் கொடூர வழக்கு சி.பி. ஐ.யின் விசாரணையில் உள்ளது. அந்த வழக்கில் இருந்து குற்றவாளிகள் வெளியே வரவேண்டும் என்றால் சி.பி.ஐ. கோர்ட்டில்தான் வழக்குப் போடவேண்டும். தற்பொழுது உயர்நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் இந்த வழக்கு ஒரு உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் வந்துவிட்டது. அந்த நீதிமன்றத்தில் சி.பி.ஐ., பொள்ளாச்சி காமக்கொடூர வழக்கின் குற்றவாளிகள், வழக்கு முடியும்வரை சிறையில் இருக்கவேண்டும் என சொல்லியிருக்கிறது. எனவே சி.பி.ஐ., இவர்கள் ஜாமீனில் வெளிவருவதை கடுமையாக எதிர்க்கிறது. இதுதான் தற்போது இந்தக் காமக்கொடூரன்களை எதிர்ப்பவர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல்'' என்கிறார் உயர்நீதிமன்றத்தில் சீனியர் வழக்கறிஞரான புருஷோத்தமன்.

"பொள்ளாச்சி காமக்கொடூரன்களின் புகலிடமாக இருந்த ரிசார்ட்டுகளை மூட நேர்மையான அதிகாரிகள் முயன்றனர். ஆனால் அதை முதல்வர் தடுத்துவிட்டார். அதேபோல் பொள்ளாச்சி குற்றவாளிகளுக்கும் அரசு தரப்புக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தது. அதன்படி பொள்ளாச்சி குற்றவாளிகள் தற்பொழுது வெளியே வந்தால் பொதுமக்கள் அவர்களை அடித்தே கொன்றுவிடுவார்கள்; அதனால் அவர்கள் சட்ட மன்ற தேர்தல் முடிந்த பிறகு வெளியே வந்தால் போதும். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையும் போது அவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யும் என ஏற்பட்ட ஒப்பந்தத்தின் முதல் படியாக பொள்ளாச்சி குற்றவாளிகளை குண்டர் தடுப்புச் சட்டத்திலிருந்து அ.தி.மு.க. அரசு வெளியே கொண்டுவந்துள்ளது. நிலைமை இப்படியே போனால்... தமிழக அரசைக் காப்பாற்றி வரும் மத்திய அரசு வரை தன் செல்வாக்கைப் பயன்படுத்தி குற்றவாளிகள் எப்பொழுது வேண்டுமானாலும் வெளியே வருவார்கள்'' என்கிறது பொள்ளாச்சி அ.தி.மு.க. தரப்பே.