தமிழகத்தில் மதுவுக்கு எதிரான போராட்டங்கள் நடந்தபோதெல்லாம் அரசு கண்டுகொண்டதில்லை. ‘டார்கெட்’ வைத்து ‘டாஸ்மாக்’ மூலம் வருவாய் ஈட்டுவதிலேயே குறியாக இருந்தது. ஆனால், இந்தக் கரோனா பரவல், ஒரே நாளில், ஒட்டுமொத்த டாஸ்மாக் கடைகளையும் மூட வைத்தது. மது விற்பனையைத் தற்காலிகமாக நிறுத்தியது பலரது பார்வையிலும் நல்லதாகவே தெரிகிறது.‘நீயின்றி நானில்லை’ என, மதுபோதைக்கு உடலைப் பழக்கிக்கொண்ட குடிமகன்களுக்கோ, மனதளவிலும் உடலளவிலும் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி யிருக்கிறது. இவர்களின் இந்த பலவீனம்,கள்ளச் சந்தையில் டாஸ்மாக் சரக்குகள் விற்பனை செய்வது,கள்ளச்சாராயம் காய்ச்சுவது போன்ற சட்ட விரோத காரியங்கள் நடப்பதற்கும் வழி வகுத்திருக்கிறது.
அண்டை மாநிலமான கேரளாவில்,மது கிடைக்காத விரக்தியில் குடிப்பழக்கம் உள்ளவர்கள் தற்கொலை செய்துகொண்டதாலும்,தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாலும், விரக்தி மனநிலையில் உள்ளவர்களுக்கு சிறப்பு பாஸ் தருவதற்கான உத்தரவை அந்த அரசாங்கம் பிறப்பித்தது. அந்த உத்தரவுக்கு கேரள உயர் நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துவிட்டது.
டாஸ்மாக் மூடல், தமிழகத்தில் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளையும், நமக்கு கிடைத்த தகவல்களையும் பார்ப்போம்!
பாட்டில் பதுக்கல்!
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், மதுக்கடைகளை உடைத்து திருடும் சம்பவங்கள் தொடர்ந்ததால், சாத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார டாஸ்மாக் கடைகளில் இருந்த மதுபாட்டில்களை எடுத்துச் சென்று, தனியாருக்குச் சொந்தமான மிளகாய் வத்தல் வியாபாரிகள் மன்றத்தில் வைத்து பாதுகாக்கின்றனர்.
மதுபிரியர்களின் இந்த தீவிர மனநிலை, டாஸ்மாக் கடைகளை உடைத்து சூறையாடும் அளவுக்கு கொண்டுபோய்விடும் என்பதை அறிந்தே, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையினர், அவசர அவசரமாக கிராமப்புறங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளின் இருப்புகளைக் கணக்கிட்டு, அதனை மாவட்ட அலுவலகத்துக்கு கொண்டுபோய்ச் சேர்த்தனர். ஆனாலும், 144 தடை உத்தரவு அறிவித்ததுமே, ஆளும்கட்சியினரின் ஆசியோடு பார் நடத்துபவர்கள், பெட்டி பெட்டியாக அரசு விலைக்கே பாட்டில்களை வாங்கி பதுக்கிவிட்டனர்.
மாமூலான கைது நடவடிக்கை!
திருநெல்வேலி மாவட்டம், பேட்டை எம்.ஜி.ஆர். நகரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 மது பாட்டில்கள் பிடிபட்டு, குமார், சந்திரன், செல்லத்துரை ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சங்கரன்கோவிலில் மூன்று இடங்களில் பெட்டி பெட்டியாக மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. டி.எஸ்.பி. பாலசுந்தரம் நம்மிடம் “கரோனா தடுப்பு பணியில் முனைப்பாக இருந்தாலும், கள்ளத்தனமான மது விற்பனையை முடிந்த அளவுக்கு முடக்கியிருக்கிறோம்.” என்றார்.
குமரி மாவட்டம் கருங்கல்லில், நெருக்கடியான நேரங்களில், நடமாடும் டாஸ்மாக் ஆக வலம் வருபவன், குமார். ரூ.105–க்கு விற்கப்படும் குவார்ட்டரை, போலீசுக்கு மாமூல் தந்து ரூ.350-க்கு விற்றான். கொள்ளை விலை என்பதால் கொதித்துப்போன ஒரு குடிமகன், குளச்சல் ஏ.எஸ்.பி.யிடம் புகார் கூற, 300 பாட்டில்களோடு குமார் கைது செய்யப்பட்டான். தெருக்கடை கிருஷ்ணன் என்ற படையப்பன், அரிசிப்பைக்குள் வைத்திருந்த 75 பாட்டில்களோடு பிடிபட்டான். காவல்துறையால் இவர்களைக் கைது செய்ய மட்டுமே முடிந்தது. கரோனோ சூழ்நிலையால் இவர்கள் ரிமாண்ட் ஆகாமல், பெயிலில் வெளிவந்துவிட்டனர்.
மதுவுக்கு மாற்றாக சகலமும்..
தற்போது குமரி மாவட்டத்தில், வாழைத்தோட்டம், தென்னந்தோப்பு, குளக்கரையோரம் பாட்டில்களைப் பதுக்கி வைத்து மது விற்பனை ஜோராக நடக்கிறது. கைக்கு வரும் மாமூலை ஏன் விடவேண்டுமென போலீசாரும் அந்தப்பக்கம் போவதேயில்லை. இதுபோல், எதிர்க்கட்சியை சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவர், தக்கலை போலீஸ் லிமிட்டில் ‘டைட்’ ஆக ரூ.300-க்கு குவார்ட்டர் பாட்டில் சப்ளை செய்துவருகிறார். நாளொன்றுக்கு குறைந்தது 1000 பாட்டில்களாவது இவர் மூலம் விற்பனை ஆகிறதாம்.
ஆளும்கட்சி பிரமுகர்களோ, நாகர்கோவில், கருங்கல், குலசேகரம், ஆரல்வாய்மொழி, துவரங்காடு, தடிக்காரன்கோணம், கொல்லங்கோடு, நித்திரவிளை போன்ற இடங்களில் உள்ள மனமகிழ் மன்றங்களில், போலீசார் உடந்தையுடன் அதிகாலையிலேயே ‘பாட்டில்’ விற்கின்றனர். எந்த பிராண்ட் சரக்கு வேண்டுமென்றாலும் கிடைக்கும். ஆனால், அதே பாட்டிலில் கிடைக்காது. ஏனென்றால், சரிபாதி தண்ணீர் கலந்துதான் விற்கிறார்களாம். ஏதோ கிடைத்தது போதுமென்று, அந்தச் சரக்கையும் அதிக விலைக்கு வாங்கி குடிக்கிறார்கள். நாட்டுக்கே ஊரடங்கு என்றாலும் இங்கு மட்டும் இல்லவே இல்லை என்கிறார்கள், நேர்மையான அதிகாரிகள்.
ஆளும்கட்சியினர், எதிர்க்கட்சியினர் போட்டி போட்டு மது விற்கும்போது, ‘நாங்களும் இருக்கிறோம்’ என்று கோதாவில் இறங்கியிருக்கிறார்கள், காவலர்கள். இவர்கள் வசமும் ஏகப்பட்ட சரக்குகள் உள்ளன. பார்டரில் உள்ள காவல் நிலையங்களான களியக்காவிளை, கொல்லங்கோடு, நித்திரவிளை, புதுக்கடை, பளுகல், அருமனை காவல் நிலையங்களில், குமரி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்கும், கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்துக்கும் கடத்தி வரும்போது பறிமுதல் செய்யப்பட்ட இரு மாநில சரக்குகளும், பல நூறு லிட்டர்கள் ஸ்பிரிட்டும் காவலர்கள் வைத்துள்ளனர். இதைத்தான் தற்போது வெளியில் எடுத்து விடுகின்றனர்.
இந்தக் கள்ளச்சந்தை விற்பனைக்கு ஈடுகொடுக்கும் விதத்தில் பனை கள்ளு விற்பனையும் அமோகமாக நடக்கிறது. கோடை வெயில் தாக்கத்துக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் விரும்பி பருகும் பதநீர், போதை தரும் கள்ளாக தற்போது விற்கப்படுகிறது. சீதப்பால், தெள்ளாந்தி பகுதியிலுள்ள பனைமரங்களில் இருந்து இறக்கப்படும் கள்ளுவில் மாத்திரை கலந்து விற்பதும் நடக்கிறது. இதில் அதிக போதை கிடைப்பதால், குடிமகன்கள் மூக்குமுட்ட குடிக்கின்றனர்.
வாசுதேவநல்லூர் பக்கமுள்ள உள்ளார் பகுதியில் காய்ச்சப்படும் கள்ளச்சாராயம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் விற்கப்படும் கஞ்சா, சோதனைச்சாலைகளில் பரிசோதனைக்காகப் பயன்படுத்தப்படும் ஸ்பிரிட்டில் பெப்சி, செவன்-அப் கலந்து குடிப்பது போன்றவற்றை, மதுவுக்கு மாற்றாக குடிமகன்கள் பயன்படுத்துவது, உயிருக்கே ஆபத்து விளைவித்துவிடும்.
வேலூரில் கள்ளச்சாராய வியாபாரிகளுக்கும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கும் நடந்த மோதலில், 7 பேர் கொண்ட சாராய கும்பல் நாட்டு துப்பாக்கியால் சுட்டதில், படுகாயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
‘இந்தக் கரோனா நெருக்கடியிலாவது மது இல்லாத நல்வாழ்க்கைக்கு பழக்கப்படுத்திக் கொள்ளலாமே?’ என, மதுபிரியர்கள் சிலரிடம் கேட்டோம்.
“செத்துடலாம்னு தோணுது..” - உடல் நடுக்கத்தில் குடிமகன்கள்!
சாக்கடை அடைப்பு, பாத்ரூம் க்ளீனிங் செய்து வாழ்க்கையை நகர்த்திவரும் சேவுகப்பெருமாள், கடந்த 30 ஆண்டுகளாக மது அருந்திவருபவர்.
"பொண்டாட்டி புள்ளைங்க என்னை விட்டுட்டுப் போயி வருஷக்கணக்கா ஆச்சு... அன்னன்னைக்கு வேலை பார்க்கிறத வச்சு சரக்கு அடிச்சுட்டு இருந்தேன். இப்ப வேலையும் இல்லை. சரக்கும் இல்லை. இருந்தாலும்.. சரக்கு அடிக்காம இருக்க முடியாதுல்ல. இப்ப 105 ரூபாய் சரக்கை பிளாக்கில் 300 ரூபாய்க்கு விக்கிறான். ஒரு நாளைக்கு மூணு குவாட்டர் அடிச்சவனுக்கு, ஒண்ணு கிடைக்கிறதே இப்ப பெரிய விஷயம். இதுல 300 ரூபாய்க்கு நான் எங்கே போவேன்? கடையைத் திறந்தாகணும். இல்லைன்னா.. என்னுடைய சாவுக்கு எடப்பாடிதான் காரணம்னு எழுதி வச்சிட்டு தூக்குல தொங்கிருவேன்." என்று திகிலூட்டினார்.
சிங்கம்புணரியைச் சேர்ந்த சக்கரை "ஆரம்பத்துல டிரம்ஸ் அடிக்க கூட்டிட்டுப் போவாங்க. இப்ப டாஸ்மாக் பார்ல வேலை பார்க்கிறேன். மொதல்ல.. பாட்டிலை பொறுக்கி சாக்கில் கட்டி வச்சா 50 ரூபாய் கொடுப்பாங்க. அந்தப் பணம் சரக்குக்கே போதாது. அதனால, முதலாளிகிட்ட கெஞ்சி இப்ப சப்ளை பார்க்கிற வேலை பார்த்துட்டு வர்றேன். அதுக்கு சம்பளமெல்லாம் கிடையாது. சைட் டிஸ்ஸூக்காக கஸ்டமர்கிட்ட வாங்குற நூறு ரூபாய்க்கு எனக்கு 6 ரூபாய் கமிஷன். அப்புறம், கஸ்டமர் கொடுக்கிற டிப்ஸ், கமிசன் இதை வச்சே ஒரு நாளைக்கு 500 ரூபாய் வரை தேறும். அதை வச்சு நாள் முழுக்க குடிப்பேன். போதாக்குறைக்கு, காலையில் கட்டிங் கேட்டு வரும் ஆட்களுக்கு கட்டிங் ஊத்திக்கொடுத்து அதிலும் சம்பாதிப்பேன். எல்லா பணமும் குடிக்கிறதுக்குத்தான். இப்ப எல்லாமே வீணாப் போச்சு. எனக்கு கட்டிங் கூட கிடைக்கல. செத்துடலாம்னு தோணுது." என்று புலம்பினார்.
திண்டுக்கல்காரரான பெருமாள் “ஆஃப் இல்லைன்னா குவாட்டர் அடிச்சிட்டுத்தான் கூலி வேலைக்கே போவேன். இப்ப, மறைச்சு மறைச்சு குவாட்டர் 300 ரூபாய்க்கு விக்கிறாங்க. அதையும் வாங்கி குடிச்சேன். இப்ப அந்தச் சரக்கும் கிடைக்கல. கிராமத்துல கிடைக்கும்னு சொன்னாங்க. நானும் ஒண்ணு, ரெண்டு கிராமங்களுக்கு போனேன் எதுவும் கிடைக்கல. தண்ணியடிக்க வழியில்லாம போனதும், இப்ப கை, காலெல்லாம் நடுங்க ஆரம்பிச்சிருச்சு. எப்பத்தான்யா இந்த கரோனா போய்த் தொலையும்? டாஸ்மாக்க திறப்பாங்க?” என்று பரிதாபமாகக் கேட்டார்.
மதுரையில் ஆட்டோ ஓட்டும் சிவா “105 ரூபா சரக்கு 350, 115 ரூபா சரக்கு 400-ன்னு கள்ள மார்க்கெட்ல விற்குது. போக்குவரத்த நிறுத்தி ஆட்டோ ஓட்டக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. பொழப்பும் போச்சு. குடிக்கிறதுக்கும் வழியில்ல. நானாச்சும் பரவாயில்ல. என் பிரண்டு ஒருத்தர் இருக்காரு. குடிக்காம உடம்பு வீக்காகி, படுத்த படுக்கையா ஆயிட்டாரு. இப்படியே போய்க்கிட்டிருந்தா, கரோனா சாவைக் காட்டிலும் குடி நோயாளிங்க சாவு அதிகமாயிரும்.” என்றார்.
“முதுகுல டின்ன கட்டிருவாங்க..” என்று போட்டோவுக்கு முகம் காட்ட மறுத்த அந்த மதுரைவாசி “மூணு மடங்கு விலை கட்டுபடியாகாதுன்னு எல்லாரும் காந்தமலைக்கு படையெடுக்கிறாங்க. இவ்வளவு ஏன்? அமைச்சர் ஏரியாவான செல்லூர்லயே ஊரல் போடறதா சொல்லுறாங்க. மதுரையை பொறுத்தவரைக்கும் நாகமலை, செக்கானூரணி போன்ற இடங்கள்ல கள்ளச்சாராயம் களை கட்டுது. இங்கே மதுரையிலேயே சில வீடுகள்ல கள்ளச்சாராயம் கிடைக்குது. இதுவும் டிஜிடலுக்கு மாறிருச்சு. ஆமாங்க. கள்ளச்சாராயத்துக்கு வாட்ஸ்-ஆப் குருப்பே இருக்கு. அதுல எங்கெங்கே கள்ளச்சாராயம் கிடைக்கும்னு தகவல் பறிமாறிக்கிறாங்க.” என்று கூறி அதிரவைத்தார்.
சுரண்டலோ சுரண்டல்!
மதுவகைகளை உற்பத்தி செய்யும் பாண்டிச்சேரி நிறுவனங்களில், குவார்ட்டர் விலை ரூ.12 தான். அதற்காக செலுத்தப்படும் கலால் வரி ரூ.38-ஐ சேர்த்து, டாஸ்மாக்கிற்கு ரூ.50-க்கு சப்ளை ஆகிறது. இதைத்தான், ரூ.110-க்கு டாஸ்மாக் விற்கிறது.
ஊரடங்கால் டாஸ்மாக் மூடப்பட்டுள்ளதால், மது அடிமைகளின் தேவையை அறிந்து, பாண்டிச்சேரி நிறுவனங்களே, பாட்டில் மீது பதிக்கும் கலால் சீல் லேபிலை அகற்றிவிட்டு, குவார்ட்டர் பாட்டிலை ரூ.100 விலைக்கு கிரேடு கிரேடாக புரோக்கர்களிடம் தள்ளிவிடுகின்றன. இந்த வகையில், பாட்டில் ஒன்றுக்கு ரூ.80 லாபமாக கம்பெனிகளுக்கு கிடைக்கிறது.
இந்தச் சரக்குகள்தான், ஆன்லைன் ஆர்டர் சரக்குகளைக் கொண்டுவரும் வாகனங்களில் பதுக்கப்பட்டு, ஏரியா ஏஜண்டுகளுக்கு வந்துவிடுகின்றன. இப்படித்தான் புளியங்குடிக்கு வரும் லோடு, அந்த ஏரியா புரோக்கர் மூலம் தென்காசி, நெல்லை மாவட்டங்களுக்கு போய்ச் சேர்கிறது. அதுபோல், கயத்தார் புரோக்கர் மூலம் தூத்துக்குடி மாவட்ட விற்பனையாளர்ளுக்கும் போகிறது.
இந்த 100 ரூபாய் குவார்ட்டர் பாட்டில்தான், கரோனா நெருக்கடி நேரத்தில், கள்ளச் சந்தையில் ரூ.400 வரைக்கும் விற்கப்படுகிறது. கண்ணுக்குத் தெரிந்தே நடக்கின்ற மிகப்பெரிய சுரண்டல் இது!
‘மதுப்பழக்கம் உள்ளவர்கள் திடீரென்று நிறுத்தினால் என்னவாகும்?’ அரசு மருத்துவர் மதிவாணனிடம் கேட்டோம்.
சிகிச்சை பெற்றால் மீளலாம்!
"தினமும் மது குடித்து அதற்கு அடிமையாக இருப்பவர்கள், திடீரென நிறுத்தினால் ஏற்படும் விளைவுக்கு ஆல்கஹால் வித்டிராவல் சிண்ட்ரோம் என்று பெயர். யாரெல்லாம் அதிக அளவில் குடிக்கிறார்களோ, அவர்களுக்கு குடியை நிறுத்தியவுடன், கை, கால் நடுக்கம், வாந்தி வரும் உணர்வு, பதட்டம், தலைவலி, படபடப்பு, வியர்த்துக் கொட்டுதல், குழப்பமான மனநிலை, தூக்கமின்மை, அதிக இரத்த அழுத்தம், துர் கனவுகள், சில சமயங்களில் காய்ச்சல், வலிப்பு, நினைவுக் கோளாறு, உடம்பில் எறும்பு ஊர்வது மாதிரி, பின் குத்துவது மாதிரியான உணர்வுகள் ஏற்படுதல், காதில் யாரோ பேசிக் கொண்டிருப்பது மாதிரியான உணர்வு, கண்களுக்கு முன் விதவிதமான உருவங்கள் நெளிவது போன்ற உணர்வு தென்படும். இந்த மாற்றங்கள், மனதின் சம நிலையைப் பாதித்து நாளடைவில் severe depression ஆகி, தற்கொலை செய்யும் எண்ணங்களை உருவாக்கும் வலிமை உடையவை. சீக்கிரம் வைத்தியம் செய்துகொண்டால், இதிலிருந்து எளிதாக மீண்டு வரமுடியும். இதை அறிந்துதான், குடிமக்களுக்கு சிறப்பு பாஸ் திட்டத்தை கேரள அரசு கொண்டுவர முயற்சித்திருக்கும் என்று நினைக்கிறேன்.” என்றார்.
‘மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு’ என்பதை அறியாதவர் உண்டோ?
------------------------------------------------------------------------------------------------------------------------------
-அதிதேஜா, பரமசிவன், சக்தி, அண்ணல், மணிகண்டன், நாகேந்திரன், ராம்குமார்