Skip to main content

அப்பாவி டூ அடப்பாவி - பிள்ளையார் சுழி போட்ட போலீஸ்காரர்! ஆட்டோ சங்கர் #3   

Published on 11/05/2018 | Edited on 12/05/2018

 

autosankar title

 

 

 

பிறக்கிறப்ப யாரும் மகான்களா பிறக்கிறதில்ல. கேடிகளாகவும் பிறக்கிறதில்லை. எல்லாருமே ‘குழந்தைகளா’தான்  பிறக்கிறாங்க. சம்பவங்கள், சூழ்நிலை, படிப்பு, அறிவு, அனுபவம், அதிர்ஷ்டம் எல்லாம் மொத்தம் சேர்ந்துதான் ஒருத்தனை எப்படியெல்லாமோ திசை மாத்திடுது. நான்கூட அப்படித்தான் மாற்றப்பட்டேன்.

1975! என்னோட வாழ்க்கை திசை திரும்பிப் போனது இந்த வருஷம்தான். ஜெகதீஸ்வரி கூட எனக்கு இருந்த காதலுக்கு ரெண்டு பக்கத்திலிருந்தும் எதிர்ப்பு! இரண்டு பேர் வீட்டிலிருந்தும் துரத்திட்டாங்க; சரியா சொல்லணும்னா  முச்சந்தியிலே நின்றோம். பசி எனக்கு புதுசல்ல. கஷ்டங்களும் அப்படித்தான்! நான் கஷ்டத்தை விட்டாலும் அது என்னை விட்டது கிடையாது. என்னைக் கட்டிக்கிட்ட பாவத்துக்காக இந்த சின்னப் பொண்ணுமில்ல பட்டினி கிடக்க வேண்டியதா  இருக்குன்னு ஒவ்வொரு நிமிஷமும் வேதனை.

அவளைப் பட்டினியில்லாம பார்த்துக்க வேண்டிய பொறுப்பு ஒரு பக்கம். இன்னொரு பக்கம் அவளோட கற்பைப்  பாதுகாக்க வேண்டிய கடமை வேற...! கட்டியா சாப்பிடலைன்னா கஞ்சியாக்கூட சாப்பிடலாம். அதுவும் இல்லைன்னா  பட்டினியா கூட கிடக்கலாம்... நாலு சுவத்துக்குள்ளே...! ஆனா அண்டியிருக்க ஒரு குச்சிலோ குடிசையோ வேணுமே!  இல்லைன்னா பொண்டாட்டியோட பெண்மையே இல்ல பறிபோயிடும்?! பசியும் பயமும் வயிற்றைப் பிசைந்தது.

 

auto sankar painting



அனுபவமில்லாத கட்டட வேலை! சுவத்து கூட சண்டை போட்டுத்தான் அழுக்கையும் பாசியையும் பிடுங்க வேண்டியதா   இருந்துச்சு. பல தடவை பேலன்ஸ் தவறி உச்சியிலேருந்து கீழே விழுந்துருவேனோன்னு பயமாப் போச்சு. ஜெகதீ கீழே  நிழல்ல உட்கார்ந்துகிட்டே நான் தடுமாறி வேலை செய்யறதை அழுதபடி பார்த்துக்கிட்டிருந்தா.

வேலை முடிஞ்சதும் கூலி தரலை. "மொத்தமா சனிக்கிழமைதான் கிடைக்கும்"ன்னார் சண்முகம் அண்ணன். "இன்றைக்குக் கூலியை மட்டுமாவது கொடுங்க... சனிக்கிழமை வரை வச்சிக்கிறேன்! நாளையிலேருந்து வர்ற கூலியை மொத்தமா சனிக்கிழமை வாங்கிக்கிறேன்.'' -சொன்னேன். ரெண்டு ரூபா கூலி கொடுத்தார்.

முரட்டுத்தனமா பழக்கமில்லாத வேலையை செய்ததாலே கையெல்லாம் செவந்திருச்சு. விரல்களை மடக்க முடியலை.  ரணம்! ஜெகதீ பார்த்துட்டு கண் கலங்கினாள்.

"ஒரு நா அந்த சாமி நிச்சயமா கண்ணை திறக்கும்... ஜெகதீஸ்...''

"சாமி கண்ணை திறந்ததாலேதான் நீங்க எனக்குக் கிடைச்சிருக்கீங்க'' -மறுபடி அழுதா.

"நமக்கு ஒருநாள் விடியாமலா போயிடும்? குடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக்கிட்டு கொடுக்கத்தான் போகுது...   பாரேன்!''

"பிச்சுக்கிட்டு கொடுக்குதோ, இல்லையோ... முதல்ல கூரையைக் கொடுக்கட்டும்...''

கையிலேயிருந்த ரெண்டு ரூபாயை வச்சுக்கிட்டு சனிக்கிழமை வரை எப்படி சமாளிக்கிறதுன்னு பிரச்சினை.

இன்னும் நாலு நாள் இருந்தது. ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது சாப்பிட வேணாமா?

பெயிண்டர் வேலையைத் துப்புரவா தெரிஞ்சுகிட்டேன். ஆனாலும் என் வறுமை சாயத்தை மாற்றவே முடியலே.  குழந்தைகள் பெத்ததும் ஒரு காரணம்! பணக்காரங்க பொழுது போகலைன்னா டிராமா போவாங்க. சினிமா போவாங்க.  ஏழைங்க? ’கட்டில் சுகம்' கூட ஏழை பாழைங்களுக்கு ஒருவித பொழுதுபோக்குன்னுதான் சொல்லணும்!

அதிர்ஷ்டம்ன்றது பசுமாடு மாதிரிதான் போல! எல்லாருக்கும் அந்த பசு பாலை கொடுத்துச்சின்னா எனக்கு சாணியத்தான் கொடுத்துச்சு! அதுவும் பல சமயம் உதைதான் தந்தது. எந்த சந்தோஷத்தையும் விதி எனக்கு கிடைக்கவிட்டதில்லை... கிடைச்சாலும் நிலைக்க விட்டதில்லை... மேஸ்திரி வாங்கிக் கொடுத்த உத்தியோகம், அமைதியான வீடு, அற்புதமான மனைவின்னு எவ்வளவு நிம்மதியா குடும்பம் நடத்தியிருக்கணும். நடத்தலை! அதற்கப்புறம்தான் கஷ்டத்துக்கு மேலே கஷ்டம்!

டைஃபாய்டு ஜுரம் வந்து ரொம்ப சீரியஸாகி அவ்வளோதான், பிழைக்க மாட்டேனோன்னு நம்பிக்கை இழக்கிற அளவுக்கு ஆயிடுச்சு. கண் திறந்தா ஒரே இருட்டாயிருக்கு... பார்வை போயிருச்சுன்னு பதறிட்டேன். ரொம்ப பயமாப்போச்சு. ஒரு மட்டிலும் எழுந்து நடமாடத் தொடங்கினப்ப சென்னையில் பயங்கர புயல் வெள்ளம்! மழை காரணமா  பெயிண்டிங், வார்னீஷ், சுண்ணாம்பு வேலை எதுவும் கிடைக்கலை. வேற வேலையாவது செய்யலாம்ன்னு வயல்ல  அறுப்புக்குப் புறப்பட்டேன். அனுபவமில்லாததாலே விரல அறுத்துக் கிட்டதுதான் மிச்சம்.

ஜெகதி இட்லி சுட்டு எடுத்துகிட்டுப் போய் வீதி வீதியா, வீடு வீடா விற்றுப்பார்த்தா. உபயோகப்படல. மேஸ்திரியும்  வேலையில்லாம கஷ்டப்பட்டாரு! நாம வேற அவருக்கு பாரமா இருக்க வேணாம், அவருக்கு கிடைக்கிற இருவது ரூபா  வாடகைய கெடுக்கக் கூடாதுன்னு வீட்டைக்காலி பண்ணி கோட்டூர்புரம் போனோம். ஓலை குடிசை. சுத்தி வெள்ளக்காடு. கும்மிருட்டு! வயித்திலே ஒருவார பசி. திரும்ப ஆரம்ப நிலைமை

 

 


அப்பவாச்சும் புருஷன் பொஞ்சாதி ரெண்டு பேர் மட்டும் பட்டினி! இப்ப கையிலே ஒன்று வயித்துக்குள்ளே ஒன்று...! மொத்தகுடும்பமும் தொடர்ந்து ரெண்டு நாளா பட்டினி! குழந்தை கீதா பால்கேட்டு அழுதது. ஜெகதி சாப்பிட்டால்தானே  குழந்தைக்குப் பால் சுரக்கும். குழந்தையோட பசி தீர்க்க வகை தெரியாம ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துகிட்டு அழுதோம்! வெளியே போய் பிச்சையாவது எடுத்துட்டு வந்து குழந்தை குட்டிகளுக்கு சோறு  போடமாட்டோமான்னு எனக்கு வெறி வந்துருச்சு.
 

 

auto sankar house



"அப்படி எதுவும் செய்துடாதீங்க! அப்புறம் வீட்டைக் காலி பண்ண சொல்லிடுவாங்க! ஏற்கனவே ரெண்டு மாச வாடகை  பாக்கின்னு கத்றாங்க! இதைவேற செய்தோம்னா... "பிச்சைக்காரங்களுக்கெல்லாம்   வீடு கிடையாது'ன்னு  விரட்டிடுவாங்க'' -ஜெகதி பலவீனமா கெஞ்சினா. மூச்சு முட்டிச்சு அவளுக்கு. கிட்டத்தட்ட அரை மயக்கத்திலே இருந்தா!

"ஜெகதி... என்னாச்சும்மா?''ன்னு கலங்கினேன்.

குழந்தை வேற பால் கேட்டு பயங்கர கத்தல்.

"வயிறு ஒரு மாதிரியா பொரட்டுதுங்க. வயித்துக்குள்ளாற இருக்கிற குழந்தை என்னாகுமோ தெரியலை. மயக்கமா வருது... பசி தாங்க முடியலங்க'' -குழறினாள். அந்தக் காட்சி இப்பவும்  கூட என் கண்ணிலே நிழலாடுது.   "ஜெகதி! இரும்மா... இப்ப வாரேன்... கொஞ்சம் பொறுத்துக்க'ன்னுட்டு வெளியிலே ஓடறேன்...


இன்னமும் மழை கொட்டிக்கிட்டே இருக்கு. கிழிந்த கோணியைத் தலையிலே போத்திக்கிட்டு நாடார் கடைக்கு ஓடினேன். வீட்டை விட்டு அவசரமா கிளம்பினேனே தவிர, கடை நெருங்க நெருங்க தயக்கம். ஏற்கனவே அங்கே போன வாரம்  வாங்கின கால் கிலோ அரிசிக்கு இன்னும் காசு தரல. அதற்கே போறப்ப வரப்ப எக்கிக்கிட்டிருக்காரு அந்த கடைக்கார  நாடார்.  திருநெல்வேலிக் காரர்!

வேற வழியில்ல.. அவர் எதிரே போய் நின்றேன். குளிர்ல நடுங்கறேனா, பயத்திலே நடுங்கறேனான்னு எனக்கே தெரியலை.

"அண்ணாச்சி... ஒருகிலோ அரிசி கடன் தாங்க! வேலைக்கிப்போனதும் கொடுக்...'' முடிக்கவே இல்லை. அவர்   கோபப்பார்வை பார்த்துட்டு குலை நடுக்கமாயிருச்சு.

"என்னலே... இதென்ன தர்மசத்திரமா... வாரவன் போறவனுக்கெல்லாம் அரிசி கொடுக்க? போன வாரம் வாங்கினதுக்கு  காசு கொடுத்தியாலே? வெட்கமாயில்ல...? மானங்கெட்ட மூதி? அப்படி சோறு திங்கலேன்னா.. என்னலே? ஆங்... களுதை  சம்பாதிக்கிற வரைக்கும் இதை திங்கறதுதானே?''

விளக்குக் கம்பத்துகிட்டேயிருந்ததைக் காட்டினார்.

"நா ஒண்டி கட்டையாயிருந்தா இப்படிக் கடன் கேட்கமாட்டேன் அண்ணாச்சி... பிள்ளை குட்டியெல்லாம் ரெண்டு நாளாப்   பட்டினி.. சம்சாரம் வேற புள்ளத்தாச்சி...''

"என்னைக் கேட்டாலே பெத்தே...? அறிவுகெட்ட முண்டம்! படுக்கிறப்ப தெரிய வேணாம்? கழுதை... அரிசி கடன்   கேட்கறதுக்கு "மோன்பக்' கேளேன்! மூட்டைப் பூச்சி மருந்தை! அதைக் கேட்க மாட்டியே?''

எச்சிலை முழுங்கினேன்.

"உழைக்க மாட்டதவனா இருந்தா அதைத்தான் வாங்கணும் அண்ணாச்சி! இதோ எப்படியும் ரெண்டு, மூணு நாளிலே   மழை நின்னுரும்... நான் சம்பாதிக்க ஆரம்பிச்சுடுவேன்... இப்ப உள்ள கஷ்டத்துக்காக தற்கொலை செய்துக்கிட்டேன்னா நாளைக்கு வரப்போற  சந்தோஷத்தை அனுபவிக்கிறது யாரு...?''னேன். சூடா பெருமூச்சு விட்டேன்.

 

 


"இப்ப நீ இங்கிருந்து போறியா என்னலே? கோட்டிக்காரன் மாதிரி பேசிக்கிட்டு?'' - அவர் சொல்லிகிட்டிருக்கிறப்ப யாரோ சைக்கிள்ளே வந்து கடை முன்னாடி ப்ரேக் போட்டு நிறுத்தினார்! சைக்கிளை ஸ்டாண்டு போட்டு நிறுத்திட்டு வந்து "நாடாரே! ஒரு பாக்கெட் சிசர்!'' என்றார். நான் கொஞ்சம் தயங்கி ஒதுங்கி நின்றேன். அந்த வாடிக்கையாளர் சிகரெட் வாங்கிட்டுப்போனப்புறம் கடனுக்கு இன்னொரு தடவை முயற்சி பண்ணலாம்னு நினைச்சேன். ஜெகதி பாவம்  என்ன பாடு படறாளோ? குழந்தைங்க பாவம் எனக்காக பசியோட காத்திருக்குமே!

வந்தவருக்கு சிகரெட் நீட்டின நாடார், நான் இருப்பதை கவனிச்சிட்டு

"ஏய்... இன்னுமா நீ போகல..?''ன்னாரு என்னைப்பார்த்து.

"ஸார்... பாருங்க ஸார் இவனை! நெதக்கும் மாமூல் கேட்டு தொந்திரவு பண்றான்''னு சொன்னாரே பார்க்கலாம்.

எனக்குத் தூக்கிவாரிப் போட்டுச்சு. சிகரெட் குடிச்சவரை அப்பதான் பார்த்தேன். மஃப்டியிலே இருந்த போலீஸ்காரர்.

"இங்கே வாடா''ன்னு கூப்பிட்டு என் அம்மாவை சம்பந்தப் படுத்தி கெட்ட வார்த்தை சொல்லி திட்டினார்!

"மவனே... மாமூல் கேட்கறியா? ஏரியாவுக்குப் புச்சா... யார்ரா நீ?''

முட்டிக்கு முட்டி தட்டி லாக்கப்லே போட்டுருவேன்''

நான் பதறிப்போய் "ஐயையோ! அதெல்லாம் இல்ல ஸார்... நா... கடன்தான்... எப்பவும் அரிசியெல்லாம் கூட இந்தக்  கடையிலேதான் ஸார் வாங்கறது. அவரையே... வேணா கேட்டுப்பாருங்க''-  நடுங்கிட்டே சொன்னேன். "போடான்னா  போவாம போலீஸ்காரன் கிட்டயே நியாயம் பேசுறியா...''ன்னு சொல்லி சைக்கிள்ளேயிருந்த லத்தியை உருவினார்.

என் மேலே விளாச ஆரம்பிச்சாரு. சேறிலும் சகதியிலும் பொரட்டி பொரட்டி அடிச்சாரு.

இப்ப கூட ஞாபகமிருக்கு... விழுந்த மொத்த அடிகள்... பதிமூன்றுன்னு...

என்னை அவரு மிருகத்தனமா அடிச்சது கூட வருத்தமில்லை. அப்பிராணியா இருந்த என்னைப்போய் ஒரு மிருகமா  மாத்திட்டாரேன்றதுதான் என் சங்கடமெல்லாம். என்னுடைய இன்றைய வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழியே அந்த  போலீஸ்காரர்தான்.   


 

auto