Skip to main content

கோடிகளில் குதூகலித்த மாஜி துணைவேந்தர்! கட்டம் கட்டும் லஞ்ச ஒழிப்புத்துறை!

Published on 15/10/2021 | Edited on 19/10/2021

 

Periyar University former Vice chancellor  corruption case

 

பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதன், யுஜிசி விதிகளை மீறி ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்களை நியமித்த வகையில் பல கோடி ரூபாய்களை சுருட்டியிருப்பது உயர்கல்வித்துறை வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. 

 

சேலம் கருப்பூர் அருகே, 1997ஆம் ஆண்டு முதல் பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டுவருகிறது. இத்துடன் 113 கலை, அறிவியல் கல்லூரிகள் இணைவு பெற்று இயங்கிவருகின்றன. இப்பல்கலை. தொடங்கப்பட்ட நாளிலிருந்தே அரசியல், சாதி ரீதியாக ஏதாவது ஒரு சர்ச்சையில் தொடர்ந்து அடிபட்டுவருகிறது. இந்நிலையில், சுவாமிநாதன் என்பவர் துணைவேந்தராக இருந்த 2014 முதல் 2017 ஜூன் வரையிலான காலக்கட்டம்தான் பல்கலைக்கு உண்மையிலேயே இருண்ட காலம் என்கிறார்கள் பேராசிரியர்கள். 

 

அவர் பணி நிறைவுபெற்றபோதே முறைகேடான பணி நியமனங்கள் குறித்த சர்ச்சைகளும் எழுந்தன. இந்த நிலையில்தான், சுவாமிநாதன் மீதும் அப்போது தேர்வாணையராக இருந்த லீலா மீதும் அண்மையில் சேலம் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. அதனால் மீண்டும் சுவாமிநாதன் தலை உருளத்தொடங்கியுள்ளது. 

 

இது தொடர்பாக பல்கலை. பேராசிரியர்கள் சிலர் நம்மிடம் பேசினர். 

 

''பெரியார் பல்கலையில் துணைவேந்தராக சுவாமிநாதன் பணியாற்றிய காலத்தில்,  பணி நியமனங்களில் அப்பட்டமாக விதிகள் மீறப்பட்டன. 154 ஆசிரியர் பணியிடங்கள் சுவாமிநாதன் காலத்தில் நிரப்பப்பட்டன. உதவி பேராசிரியருக்கு 20 லட்சம், இணை பேராசிரியருக்கு 30 லட்சம், பேராசிரியர் பணியிடத்திற்கு 45 லட்சம் ரூபாய் என பட்டியல் போட்டு பணம் வசூலித்துக்கொண்டு, போதிய கல்வித்தகுதி, முன் அனுபவம் இல்லாதவர்களை எல்லாம் பணியில் நியமித்தார் சுவாமிநாதன். இதன்மூலம் மூன்றே ஆண்டுகளில் 50 கோடி ரூபாய்க்கு மேல் வாரிச்சுருட்டினார் சுவாமிநாதன். பின்னாளில் தேர்வாணையராக பணியாற்றிய பேராசிரியர் லீலா என்பவரும் கூட விதிகளுக்குப் புறம்பாக நியமிக்கப்பட்டவர்தான். பேராசிரியர்கள் லட்சுமி மனோகரி, புவனலதா, ரமேஷ்குமார், முருகேசன், வெங்கடாசலம் ஜோனாதுல்லா, செல்வ விநாயகம், வெங்கடேஷ்வரன், வெங்கடேசன், கார்த்திகேயன் என குறுக்கு வழியில் பணி நியமனம் பெற்ற பத்து ஆசிரியர்களை ரேண்டமாக தேர்வுசெய்து, அவர்களிடம் ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் முதற்கட்ட விசாரணை நடத்தியிருக்கிறார்கள். 

 

Periyar University former Vice chancellor  corruption case

 

சுவாமிநாதன் பரிந்துரை செய்தவர்களில் 46 ஆசிரியர்களின் நியமனத்திற்கு மட்டும் பாட வல்லுநர் குழு ஆட்சேபணை தெரிவித்தது. அதை நிராகரித்த சுவாமிநாதன், தன்னிடம் பணம் கொடுத்த 154 பேருக்கும் தன்னிச்சையாக கடிதம் அனுப்பி, உடனடியாக பணியில் சேரும்படி செய்தார். அதற்குப் பக்கபலமாக அப்போது உதவியாளராக பணியாற்றிய ராஜமாணிக்கமும் இருந்தார்.

 

பணி நியமனத்தின்போது ஏபிஐ எனப்படும் கல்வித்தகுதி குறியீட்டெண் முக்கிய தகுதியாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அதையும் அப்பட்டமாக மீறியிருக்கிறார் சுவாமிநாதன். பலரிடமும் போலி அனுபவ சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டு நியமன ஆணைகளை வழங்கினார். 

 

ஆசிரியர் பணியிடங்கள் தவிர, 47 ஆசிரியரல்லா பணியாளர்களை நியமித்ததிலும் விதிகளை மீறியிருந்தார் சுவாமிநாதன். அதற்காக தலா 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை அவர்களிடம் வசூலித்திருக்கிறார். இவ்வாறு முறைகேடாக நியமிக்கப்பட்ட ஆசிரியரல்லா பணியாளர்களில் சங்கீதா (பர்சார்), மோகனசுந்தரமூர்த்தி, சுகந்தி, நிர்மலாதேவி, குணசேகரன், செல்வராஜ், மருத துரை, கிருஷ்ணன், ராஜா, சிவானந்தம் ஆகியோரையும் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறை ரேண்டமாக தேர்வுசெய்து விசாரணை நடத்தியுள்ளது. இவர்களைப் பல்கலை. உறுப்புக் கல்லூரிகளுக்காக தேர்வுசெய்துவிட்டு, பல்கலையிலேயே பணியாற்ற அனுமதித்தார்,'' என்கிறார்கள் பெரியார் பல்கலை பேராசிரியர்கள். 

 

இது தவிர இன்னொரு முக்கிய முறைகேட்டிலும் சுவாமிநாதன் அன்ட் கோ ஈடுபட்டுள்ளது. 

 

பல்கலை. மற்றும் இணைவு பெற்றுள்ள கல்லூரிகளின் தேர்வு முடிவுகளை வெளியிடும் பணிகளை, சென்னையைச் சேர்ந்த அரவிந்த் என்பவருக்குச் சொந்தமான 'மெசர்ஸ் கேலேப்' என்ற தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுத்திருந்தார் சுவாமிநாதன். இந்த அவுட்சோர்சிங் முறை, அதற்கு முன்புவரை பெரியார் பல்கலையில் நடைமுறையில் இல்லாதது. 

 

தேர்வுக்கான விடைத்தாள்களில் தேர்வர்களின் புகைப்படம், பெயர், டம்மி தேர்வு எண் ஆகியவற்றை அச்சிட்டு வழங்குவதும், விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்ட பிறகு பிரத்யேக சாஃப்ட்வேர் மூலம் மதிப்பெண்களையும், தேர்வு முடிவுகளையும் உள்ளீடு செய்து அனுப்புவதும்தான் கேலேப் நிறுவனத்தின் பணியாகும். இதற்காக ஒரு விடைத்தாளுக்கு 3 முதல் 5.25 ரூபாய் வரை விலைப்புள்ளி நிர்ணயிக்கப்பட்டு, 3.26 கோடி ரூபாய்க்கு சுவாமிநாதனும், அப்போதைய தேர்வாணையர் லீலாவும் ஒப்பந்தம் கொடுத்துள்ளனர். இந்த ஒப்பந்தம் 2015 முதல் 2019 வரை அமலில் இருந்துள்ளது. துணைவேந்தருக்கு, 10 லட்சம் ரூபாய் வரையிலான ஒப்பந்தத்திற்கு மட்டுமே நிதி விடுவிக்கும் அதிகாரம் இருக்கிறது. ஆனால், கேலேப் நிறுவனத்திற்கு ஒவ்வொரு செமஸ்டருக்கும் 50 லட்சம் ரூபாய் சுவாமிநாதன் நிதி விடுவிப்பு செய்திருக்கிறார். இந்த ஒப்பந்தம் வழங்குவது தொடர்பாக உயர்கல்வித்துறையிடம் எந்த முன்அனுமதியும் பெறப்படவில்லை என்கிறது லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறை. 

 

ad

 

தேர்வு நடத்துவது, தேர்வு முகாம் அலுவலர் நியமனம், விடைத்தாள் மதிப்பீடு செய்து மதிப்பெண்களை கேலேப் நிறுவனத்திற்கு அனுப்பிவைப்பது வரை பல்கலைக்கழகமே செய்து கொடுக்கும் நிலையில், தேர்வு முடிவை மட்டும் வெளியிட கேலேப் நிறுவனத்திற்கு எதற்காக ஒப்பந்தம் கொடுக்க வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார்கள் பேராசிரியர்கள். இதன் பின்னணியில், வைட்டமின் 'ப' மட்டும்தான் இருக்கிறது என்கிறார்கள்.

 

அரூரில் உள்ள ஈஆர்கே கலைக்கல்லூரி, சேலத்தில் கொங்குநாடு கலைக்கல்லூரி, மேச்சேரியில் பாலமுருகன் கலைக்கல்லூரி ஆகிய கல்லூரிகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதபோதும் கூட, சுவாமிநாதனும் லீலாவும் கல்லூரி அதிபர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு. புதிய பாடப்பிரிவுகள் தொடங்க அனுமதி அளித்துள்ளனர். அதேபோல் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத நாமக்கல்லில் கவிதா கலைக்கல்லூரி (வையப்பமலை), காந்தி கலைக்கல்லூரி (நல்லூர்), தர்மபுரியில் சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி, தலைவாசலில் ஸ்ரீ கைலாஷ் மகளிர் கல்லூரி, சேலத்தில் மைசூரி கலைக்கல்லூரி ஆகிவை தொடங்கவும் அனுமதி கொடுத்துள்ளனர். 

 

இவை ஒருபுறம் இருக்க, மேற்சொன்ன குற்றச்சாட்டுகள் அனைத்திலும் பெரியார் பல்கலையில் 18.8.2012 முதல் 17.8.2015 வரை பதிவாளராக பணியாற்றிவந்த அங்கமுத்துவுக்கும் தொடர்பு இருக்கிறது என்கிறார்கள் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர். 

 

முறைகேடான பணி நியமனங்கள், பல்கலை மானியக்குழு (யுஜிசி) விதிகளுக்குப் புறம்பாக கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகள் தொடங்க அனுமதி வழங்கியது, தேர்வு முடிவுகள் வெளியிட தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியது ஆகிய முறைகேடுகளில் முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதன், அப்போதைய பதிவாளர் அங்கமுத்து, தேர்வாணையர் லீலா ஆகிய மூவர் மீதும் கூட்டுச்சதி, போலி ஆவணம் தயாரித்தல், மோசடி உள்ளிட்ட 7 பிரிவுகளில் சேலம் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் அண்மையில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் எதிர்பாராத திருப்பம் என்னவென்றால், குற்றம்சாட்டப்பட்ட மூவரில் ஒருவரான அங்கமுத்து கடந்த 18.12.2017 அன்று பெருந்துறையில் உள்ள தனது வீட்டில் விஷ மாத்திரைகளைத் தின்று தற்கொலை செய்துகொண்டதுதான். அங்கமுத்துவின் தற்கொலை பின்னணியிலும் அதிர்ச்சிகரமான கிளைக்கதைகள் இருப்பதாகச் சொல்கிறார்கள் பெரியார் பல்கலை பேராசிரியர்கள். 

 

''ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் நியமனத்தில் பட்டியல் போட்டு வசூலித்ததில் மூளையாக செயல்பட்டது அப்போதைய பதிவாளரான அங்கமுத்துதான். ஆனால் சுவாமிநாதன், ஆசிரியர்களிடம் பட்டியல் போட்டு பணம் வசூலித்துக்கொண்டார். இதில், அங்கமுத்துவுக்கு சரியாக பர்சன்டேஜ் போய்ச் சேராததால் இருவருக்கும் முட்டிக்கொண்டது. பணி நியமனங்களில் நடந்த முறைகேடுகளை வெளியே சொல்வதாக அங்கமுத்து திடீரென்று முரண்டு பிடிக்க, அத்தனைக்குமே அவர்தான் காரணம் என அங்கமுத்து மீதே பிளேட்டை திருப்பிவிட்டார் சுவாமிநாதன். 

 

பணி நியனமம் தொடர்பான முக்கிய கோப்புகள் காணவில்லை என்றும், அது தொடர்பாக அங்கமுத்துவிடம் விசாரிக்க வேண்டும் என்றும் சுவாமிநாதன், பின்னர் பதிவாளராக நியமிக்கப்பட்ட மணிவண்ணனிடம் அழுத்தம் கொடுத்தார். அதன்படியே மணிவண்ணன், சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில்தான் கடந்த 18.12.2017ஆம் தேதியன்று ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஆளுநர் பெரியார் பல்கலைக்கு வந்திருந்தார். அவர் முன்னிலையில் தன்னை காவல்துறை எங்கே கைது செய்துவிடுமோ என்று அஞ்சிய அங்கமுத்து, அன்று பல்கலைக்கு வருவதைத் தவிர்த்ததோடு, வீட்டில் தற்கொலையும் செய்துகொண்டார்,'' என்கிறார்கள். 

 

அங்கமுத்துவின் தற்கொலையால் மனம் உடைந்துபோன அவருடைய மனைவி விஜயலட்சுமி கடந்த 2018ஆம் ஆண்டு பிப். 19ம் தேதி புகாரளித்தார். அதில் முதற்கட்ட விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர், புகாரில் முகாந்திரம் இருப்பதை உறுதி செய்ததை அடுத்து, தற்போது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்திருக்கிறது. பணி நியமனம் தொடர்பாக மாயமான கோப்புகள்தான் இந்த வழக்கில் முக்கிய துருப்புச் சீட்டு. அதையும் காவல்துறையினர் கண்டுபிடித்தாக வேண்டிய நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.

 

மூவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களும் கூட. அந்தக் கல்லூரியைச் சேர்ந்த பலரும், சுவாமிநாதன் துணைவேந்தராக இருந்தபோதுதான் பெரியார் பல்கலையில் உதவி, இணை பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

நம்முடைய கள விசாரணையில், சுவாமிநாதனின் இந்த துணிகர முறைகேடுகளுக்கு அரசியல் பின்புலமும் ரொம்பவவே பக்கபலமாக இருந்துள்ளதும் தெரியவந்தது. அப்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், உயர்கல்வித்துறை செயலர்வரை பணம் கைமாறியுள்ளதாக   சொல்கின்றனர். லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளதை அடுத்து சுவாமிநாதன், பெருந்துறையைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்திடம் தஞ்சம் புகுந்துவிட்டதாக கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர்கள் பழனியப்பன், தோப்பு வெங்கடாசலம் ஆகிய இருவருமே தற்போது திமுகவில் ஐக்கியமாகியிருக்கிறார்கள். 

 

இதற்கிடையே, பெரியார் பல்கலை, மதுரை காமராஜர், அண்ணாமலை பல்கலைகளில் கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கீதா, இளங்கோ ஹென்றிதாஸ் ஆகியோர் கொண்ட குழு அமைத்து, உயர்கல்வித்துறை கடந்த ஜூலை 9இல் உத்தரவிட்டது. மூன்று மாதத்திற்குள் இந்தக்குழு விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், மூன்று மாதம் ஆகியும் இன்னும் பெரியார் பல்கலைக்கு இந்தக்குழு விசாரணை நடத்த வரவே இல்லை. இதிலும் உள்குத்து இருக்குமோ என்ற சந்தேகத்தையும் கல்வியாளர்கள் கிளப்பியுள்ளனர்.

 

உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் இந்திய அளவில் தமிழ்நாடுதான் முன்னணியில் உள்ளது. ஆனால் போதிய அனுபவமில்லாத, பணம் கொடுத்து பணியில் சேரும் ஆசிரியர்களாலும், கையூட்டு பெற்றுக்கொண்டு நியமனம் வழங்கும் துணைவேந்தர்களாலும் உயர்கல்வி பயிலுவோரின் எண்ணிக்கையை உயர்த்த முடியுமே தவிர, ஒருபோதும் தரமான மாணவர்களை உருவாக்க இயலாது. இந்த விவகாரத்தில் உயர்கல்வித்துறையும், காவல்துறையும் விரைவான விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் கல்வியாளர்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெரியார் பல்கலை. பதிவாளர் விவகாரம்; உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Periyar University Registrar Matters The High Court questions

'பியூட்டர் பவுண்டேஷன்' என்ற தனியார் நிறுவனத்தை தொடங்கி பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தராக இருக்கக்கூடிய ஜெகநாதன் மற்றும் பதிவாளர் பொறுப்பு வகித்த தங்கவேல், இணை பேராசிரியராகப் பணியாற்றி வந்த சதீஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியராக இருந்த ராம் கணேஷ் ஆகியோர் கல்விக் கட்டணம் பெற்று மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. இதனடிப்படையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன் கொடுத்த புகாரில் சேலம் கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்தனர். ஜாமீனில் வெளிவந்த ஜெகநாதன் மீண்டும் துணை வேந்தராகப் பணியாற்றி வருகிறார்.

அதே சமயம் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும் கணினி அறிவியல் துறைக்கு தலைவராகவும் பணியாற்றி வந்த தங்கவேல், தனது துறைக்குத் தேவையான கணினி, இணைய சேவைக்கான பொருட்களை வாங்கியதில் முறைகேடு செய்ததாகவும், ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு நடத்தப்படும் திறன் மேம்பாட்டு பாடத் திட்டங்களில் பெரும் முறைகேடு நிகழ்ந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இந்த முறைகேடு தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் தணிக்கைக் குழு ஆய்வு செய்திருந்தது. இந்த ஆய்வில் முறைகேட்டில் தங்கவேல் ஈடுபட்டது நிரூபணமானது.

அதன்பின்னர் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்ய பல்கலைக்கழக துணை வேந்தருக்கு தமிழக அரசு கடந்த 7 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பழனிசாமி குழு அறிக்கை அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை தமிழக உயர்கல்வித் துறைச் செயலாளர் கார்த்திக் பிறப்பித்திருந்தார். இருப்பினும் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்யாமல் இருந்து வந்தார். இதற்கு ஆசிரியர் சங்கங்களை சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து பதிவாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கணினி அறிவியல் துறை தலைவராக உள்ளார். அதே சமயம் தங்கவேல் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் கேட்டு துணைவேந்தர் ஜெகநாதன் உயர்கல்வித் துறைக்கு கடிதம் எழுதி இருந்தார். இது தொடர்பாக தமிழக உயர்கல்வித் துறைச் செயலாளர் கார்த்திக், துணை வேந்தருக்கு மீண்டும் எழுதியிருந்த கடிதத்தில், “பதிவாளராக இருந்த தங்கவேலு மீதான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் அனுப்பப்பட்டுள்ளது. தங்கவேல் மீது 8 புகார்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Periyar University Registrar Matters The High Court questions

இதற்கிடையே பணிநீக்கம் தொடர்பான உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவாளராக இருந்த தங்கவேல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று (28.02.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தங்கவேல் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன்லால், “பல்கலைக்கழகம் என்பது தனிச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. இதில் சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள் உள்ளனர். மனுதாரர் 34 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர். நாளை ஓய்வு பெற உள்ள நிலையில் பணிநீக்கம் செய்வது தொடர்பான பரிந்துரை தங்கவேலுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே பணிநீக்கம் தொடர்பான பரிந்துரைக்கு தடை விதிக்க வேண்டும்” என வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி இளந்திரையன், “உயர் கல்வித்துறை செயலாளரின் பரிந்துரை குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது” எனக் கேள்வி எழுப்பினார்.

Periyar University Registrar Matters The High Court questions

இதற்குப் பதிலளித்த தற்போதைய பதிவாளர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்திரகுமார், “பணி நீக்கம் குறித்து பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் நிர்வாகம் தான் முடிவெடுக்க வேண்டும். இது தொடரான பரிந்துரை சிண்டிகேட் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, “நிதி முறைகேடு புகார் தொடர்பான விசாரணை அறிக்கையைத் தமிழக அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். உயர் கல்வித்துறை செயலாளரின் பரிந்துரை மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் துணைவேந்தர் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டது ஏன்? முறைகேடு புகார் தொடர்பாக சேலம் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் மீது துணைவேந்தர் உரிய நடவடிக்கை எடுக்கலாம். மார்ச் 14 ஆம் தேதி இந்த வழக்கு தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்தார். பதிவாளராக இருந்த தங்கவேல் நாளையுடன் (29.02.2024) பணி ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

பெரியார் பல்கலை. பதிவாளர் விவகாரம்; உயர் கல்வித்துறை அதிரடி உத்தரவு

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Periyar University. Registrar Matters; Higher Education Action Order

'பியூட்டர் பவுண்டேஷன்' என்ற தனியார் நிறுவனத்தை தொடங்கி பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தராக இருக்கக்கூடிய ஜெகநாதன் மற்றும் பதிவாளர் பொறுப்பு வகித்த தங்கவேல், இணை பேராசிரியராகப் பணியாற்றி வந்த சதீஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியராக இருந்த ராம் கணேஷ் ஆகியோர் கல்விக் கட்டணம் பெற்று மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. இதனடிப்படையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன் கொடுத்த புகாரில் சேலம் கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்தனர். ஜாமீனில் வெளிவந்த ஜெகநாதன் மீண்டும் துணை வேந்தராகப் பணியாற்றி வருகிறார்.

அதே சமயம் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும் கணினி அறிவியல் துறைக்கு தலைவராகவும் பணியாற்றி வந்த தங்கவேல், தனது துறைக்குத் தேவையான கணினி, இணைய சேவைக்கான பொருட்களை வாங்கியதில் முறைகேடு செய்ததாகவும், ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு நடத்தப்படும் திறன் மேம்பாட்டு பாடத் திட்டங்களில் பெரும் முறைகேடு நிகழ்ந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இந்த முறைகேடு தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் தணிக்கைக் குழு ஆய்வு செய்திருந்தது. இந்த ஆய்வில் முறைகேட்டில் தங்கவேல் ஈடுபட்டது நிரூபணமானது.

அதன்பின்னர் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்ய பல்கலைக்கழக துணை வேந்தருக்கு தமிழக அரசு கடந்த 7 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பழனிசாமி குழு அறிக்கை அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை தமிழக உயர்கல்வித் துறைச் செயலாளர் கார்த்திக் பிறப்பித்திருந்தார். இருப்பினும் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்யாமல் இருந்து வந்தார். இதற்கு ஆசிரியர் சங்கங்களை சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

Periyar University Registrar Matters Higher Education Action Order

இதனையடுத்து பதிவாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கணினி அறிவியல் துறை தலைவராக உள்ளார். அதே சமயம் தங்கவேல் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் கேட்டு துணைவேந்தர் ஜெகநாதன் உயர்கல்வித் துறைக்கு கடிதம் எழுதி இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் தமிழக உயர்கல்வித் துறைச் செயலாளர் கார்த்திக், துணை வேந்தருக்கு மீண்டும் எழுதியுள்ள கடிதத்தில், “பதிவாளராக இருந்த தங்கவேலு மீதான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் அனுப்பப்பட்டுள்ளது. தங்கவேல் மீது 8 புகார்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 29 ஆம் தேதியுடன் ஓய்வு பெற இருக்கும் நிலையில், தங்கவேலை பணியிடை நீக்கம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டு மீண்டும் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.