மதவெறி அரசியல் தமிழக மண்ணில் வேரூன்றிவிடக்கூடாது என்பதற்காக அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களையும் இணைத்து "தமிழக மக்கள் ஒற்றுமை மேடை'’என்ற அமைப்பை தொடங்கியிருக்கிறார்கள் முற்போக்கு சிந்தனையாளர்கள். அந்த அமைப்பை சேர்ந்த பேராசிரியர் அருணன் நக்கீரனிடம் இதுபற்றி விளக்கினார்.
தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பதற்கான முக்கிய நோக்கம்?
இந்தியா முழுவதும் மதவெறி சக்திகள் தலைவிரித்து ஆடுகின்றன. அரசியல் ரீதியாக ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. உத்திரப்பிரதேச மாநிலத்தில் இந்துப்பெண், முஸ்லிம் பையனுடன் டீ சாப்பிட்டார் என்று சொல்லி, பா.ஜ.க. மகளிர் அணி தலைவி அந்தப் பெண்ணை ரோட்டிலேயே வைத்து கடுமையாகத் தாக்கியிருக்கிறார். 11 வயது பள்ளி மாணவனை, ஆசிரியர் "நீ முஸ்லிம் அல்ல தீவிரவாதி' என்று சொன்னதற்கு... பிரதமருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலைக்கு முயன்று இருக்கிறான். உ.பி.–யில் தொடர்ந்து நடைபெற்றுவரும் சம்பவம் நாளை தமிழகத்தில் நடக்காது என்று எப்படிச் சொல்லமுடியும். குடிமைச் சமூகத்தில் மத வெறுப்பை எதிர்த்து, மத நல்லிணக்கத்திற்காக, மக்கள் ஒற்றுமைக்காக பரப்புரை செய்யவேண்டும் என்பதே இந்த மக்கள் மேடையின் பிரதான நோக்கம்.
மதம் -மூடநம்பிக்கை பற்றி பேசுபவர்கள் படுகொலை செய்யப்படும் நிலை உருவாகிவிட்டதே?
மகாராஷ்ட்ராவில் தொடங்கி கர்நாடகா வரை படுகொலை வந்துவிட்டது. கல்புர்க்கியைக் கொலை செய்த துப்பாக்கியின் ரகமும் கௌரி லங்கேஷைக் கொன்ற துப்பாக்கியின் ரகமும் ஒன்றாக இருப்பதாக தடயவியல் நிபுணர்கள் சொல்லியிருக்கிறார்கள் எனில், கொலையாளிகள் கூட அவர்களாகவே இருக்கலாம். இதைப்போன்ற சம்பவங்கள் மற்ற மாநிலங்களில் மட்டும் நடக்கவில்லை... தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் மணல் கொள்ளையையும், மதவெறியையும் எதிர்த்த கனகராஜ் இதனால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இப்படிப்பட்ட மேடை என்பது அவசியமானதுதான்.
மக்கள் ஒற்றுமை மேடையில் பலதுறையைச் சேர்ந்தவர்கள், அரசியல் கட்சிகள் இடம்பெற்று இருப்பது குறித்து?
எழுத்தாளர்கள், அரசியல் கட்சியினர், திரைப்பட இயக்குனர்கள், கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள் என பலரும் பங்கெடுத்து இருக்கிறார்கள். அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள் அனைவரும் உதவி செய்ய முன்வந்து இருக்கிறார்கள். இதற்காக ஒரு குழுவை உருவாக்கி இருக்கிறோம். அதில் அவர்கள் இருக்கிறார்கள். எதிரிகள் எவ்வளவு பலமானவர்கள் என்று எங்களுக்குத் தெரியும். இந்த மேடை என்பது விரிந்ததாகவும், வலுவானதாகவும் இருக்கவேண்டும் என்று பலரை அணுகி இருக்கிறோம்.
இதன் செயல்பாடுகள் எப்படி இருக்கும்?
மதவெறியை எதிர்த்து பரப்புரையை மேற்கொள்ள இருக்கிறோம். மேலும் கருத்தியல் களத்திலும் ,நேரடி தளத்திலும் செயல்பட பார்க்கிறோம். அவரவர் மதத்தையும், கடவுளையும் வணங்கட்டும், விரும்பும் முறையில் வழிபடட்டும். ஆனால் அதை வைத்து மோதல்களை உண்டாக்கக்கூடாது. மோதல்கள் எப்படி வருகின்றன என்று களஆய்வு மேற்கொண்டு, அவற்றுக்கான உரிய எதிர்நடவடிக்கையை மேற்கொள்வோம். மோதல்கள் வராமல் இருக்க முன்கூட்டியே முயற்சி செய்வோம்; வந்துவிட்டால் அதை செய்தது யார் என்று அம்பலப்படுத்துவோம்.
ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அ.தி.மு.க. முழுமையாக பா.ஜ.க.வின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இது எந்த மாதிரியான பிரச்சினையை ஏற்படுத்தும்?
ஜெயலலிதாவின் திடீர் மரணம், கலைஞர் கருணாநிதியின் சுகவீனம் இவையெல்லாம் அரசியலில் பெரிய வெற்றிடம் ஏற்பட்டதாக கருதி அவற்றை தாங்கள் கைப்பற்றிவிட வேண்டும் என நினைக்கிறார்கள். அதற்கு அ.தி.மு.க. அரசை பயன்படுத்தப் பார்க்கிறார்கள். ஜெயலலிதா தன்னுடைய ஆட்சியில் மதக்கலவரம் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். இதை ஜெயலலிதாவின் ஆட்சி என்று சொல்லி ஆள்பவர்களுக்கும், தற்போதைய அ.தி.மு.க.வின் அனைத்து அணிகளுக்கும் நினைவுபடுத்த இருக்கிறோம்.
பெரியாரிய, பொதுவுடைமை, அம்பேத்கர் கோட்பாடுகளைக் கொண்ட அரசியலை பற்றி இளைய சமூகம் அதிகம் விவாதிக்கிறதை மக்கள் ஒற்றுமை மேடை எப்படிப் பார்க்கிறது?
மூன்று சிந்தனைகளும் இளைய சமூகத்தின் மத்தியில் ஆழமாக வேர்ப்பிடித்து நிற்பதைப் பார்க்க முடிகிறது. குறிப்பாக சமூக ஊடகங்களில் அவர்களின் பங்களிப்பை பார்க்க நமக்கே ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் மதவெறியை எதிர்த்து விதவிதமாக எழுதுகிறார்கள். மக்கள் ஒற்றுமைக்காக, மதவெறி எதிர்ப்புக்காக இளைய சமுதாயத்தை பயன்படுத்துவது குறித்து நிச்சயம் யோசிப்போம்.
-சி.ஜீவா பாரதி
படம்: அசோக்