
சந்தன வீரப்பனின் நினைவிடத்திற்கு வந்த ஆதரவாளர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
தமிழக அதிரடிப்படையால் சந்தன வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டு இன்றுடன் 18 ஆண்டுகள் கடந்து விட்டன. வீரப்பனின் வரலாற்றை அறிய வேண்டும் என்றால் நாம் 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதியிலிருந்து 52 ஆண்டுகள் பின்னோக்கி பயணிக்க வேண்டும். 1952 ஆம் ஆண்டு தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள கோபிநத்தம் கிராமத்தில் பிறந்தார் வீரப்பன். சிறு சிறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட வீரப்பன், திடீரென ஒரு காட்டையே கட்டி ஆளும் அளவுக்கு வல்லமை படைத்தவராக மாறினார். அதற்குக் காரணமும் அரசாங்கம் தான் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். தமிழ்நாடு, கர்நாடகா அரசுகளுக்கு பெரும் தலைவலியாக மாறிப்போன வீரப்பனை பிடிக்க இருமாநில அதிரடிப்படைகள் களமிறக்கப்பட்டன. ஆனால் காட்டைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருந்த வீரப்பனை பிடிக்க இரு அரசுகளும் திணறிப்போயின.
ஒரு பக்கம் வீரப்பன் மீது பல்வேறு குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர் என புகார் வந்தாலும், மற்றொரு பக்கம் அவர் வசிக்கும் காட்டுப் பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் வீரப்பனை கடவுளாக நினைத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதியன்று தருமபுரியை அடுத்துள்ள பாப்பாரப்பட்டியில் தமிழக அதிரடிப்படையினரால் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டாா் என கூறப்படுகிறது.
இதையடுத்து, வீரப்பனின் உடல் சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள மூலக்காட்டில் காவிரிக் கரையோர பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. ஆண்டுதோறும் வீரப்பன் நினைவு நாளில் அவரது குடும்பத்தினரும், ஆதரவாளா்களும், மூலக்காட்டுக்குத் திரளாக வந்து அஞ்சலி செலுத்திவிட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில், இன்று வீரப்பனின் 18-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினா் மூலக்காட்டுக்கு வந்து நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினா்.
வீரப்பன் சடலம் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு முன்பாக போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அங்கு வரும் வாகனங்களின் எண்கள், வருவோரின் பெயா் மற்றும் முகவரியைப் பதிவு செய்த பிறகே நினைவிடத்திற்குச் செல்ல அனுமதித்தனா். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஆதரவாளா்களும் வீரப்பன் உடலுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.