ஒன்பது மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இப்போது தேர்தல் இல்லையென்றாலும், ஆளும் கட்சிக்குள் இருக்கும் கூட்டணிக் கட்சிகள், தங்களுக்கான சீட்டுகளை "கேட்ச்' பண்ணுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. இதில் பா.ம.க. ரொம்பவே தீவிரம் காட்டி வருகிறது. உள்ளாட்சி அமைப்புத் தேர்தலில் சேலம் மாநகராட்சி மேயர் பதவிக்கு அ.தி.மு.க. கூட் டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க.வும் குறி வைத்துள்ளதால், தேர்தலுக்கு முன்பே இரு கட்சிகளிலும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
ஆளுங்கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் மேயர் இடங்களைக் கேட்டுக் கொடுத்த குடைச்சல் காரணமாக, "மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும்' என்று அவசர சட்டத்திருத்தத்தை கொண்டுவந்தார் எடப்பாடி பழனிசாமி. இதனால் பா.ஜ.க. ஒருபக்கம் முறுக்கிக்கொண்டு போக... பா.ம.க.வும் ஏகத்துக்கும் அப்செட் ஆனது என்கிறார்கள். ஆனாலும், அ.தி.மு.க. விடம் சேலம், ஆவடி, ஓசூர், சென்னை ஆகிய நான்கு மாநகராட்சிகளில் மேயர் பதவிகளை விட்டுக் கொடுக்கும்படி பா.ம.க. தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவருகிறது. சென்னையைத் தராதபட்சத்தில் வேலூர் மாநகராட்சியை ஒதுக்கவும் கேட்டுள்ளது.
சேலத்தில், பா.ம.க. தரப்பில் அக்கட்சியின் மாநில துணைச்செயலாளர் அருள் கடந்தமுறை நடந்த தேர்தலின்போது மேயர் பதவிக்கு போட்டியிட்டார். "இந்தமுறை மறைமுக தேர்தலாக இருந்தாலும்கூட, அவரை மேயராக அமர வைத்து அழகு பார்த்திட மாம்பழக் கட்சியின் தலைமை பெரிதும் விரும்புகிறது' என்கிறார்கள் அக்கட்சியினர்.
இதுகுறித்து பா.ம.க. மாநில துணைச் செயலாளர் அருளிடம் பேசியபோது, "ஆவடி, வேலூர், சேலம், ஓசூர் ஆகிய நான்கு மாநகராட்சிகளில் ஏதாவது இரண்டு மாநகராட்சிகளில் மேயர் பதவிகளை பா.ம.க.வுக்கு ஒதுக்கும்படி அ.தி. மு.க.விடம் கேட்டு வருகிறோம். இவற்றில் சேலம் மாநகராட்சியை ரொம்பவே எதிர்பார்க்கிறோம். ஆனால், எந்த இடத்திலும் துணை மேயர் பதவி கொடுத்தால் ஒப்புக்கொள்ள மாட்டோம்'' என்கிறார்.
அ.தி.மு.க.வின் ர.ர.க்கள் சிலரிடம் இதுகுறித்து பேசினோம்...
"சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் கவுன்சிலர் சீட் கேட்டு 540 பேர் விருப்ப மனு அளித்திருந்தனர். மேயர் பதவிக்கு மட்டும் 66 பேர் விருப்ப மனு கொடுத்திருந்தனர். பின்னர் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் என்று அவசர சட்டம் கொண்டுவரப்பட்டதால், மேயர் சீட் கேட்டு விருப்ப மனு கொடுத்திருந்த அனைவரும், கவுன்சிலர் சீட் கேட்டு விண்ணப்பம் அளித்தனர். ஆக, ஒவ்வொரு வார்டுக்கும் கவுன்சிலர் சீட்டுக்கு தலா பத்துபேர் வீதம் கிட்டத்தட்ட 600 பேர் போட்டி போட்டுக்கொண்டு வரிசையில் இருக்கிறார்கள். அதுக்குக் காரணம் இல்லாமல் இல்லை. சேலம் என்பது எப்போதுமே அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்து வந்திருக்கிறது. அதனால்தான் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பலரும் போட்டி போட்டு விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது, சேலம் மாநகராட்சி மேயர் பதவியை பா.ம.க.வுக்கு எப்படி விட்டுத் தரமுடியும்?
இங்குள்ள 60 வார்டுகளில் 50 இடங்களில் அ.தி.மு.க. போட்டியிடவும், எஞ்சியுள்ள பத்து இடங்களைத்தான் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கும் திட்டமும் இருக்கு. ஒருவேளை, பெருவாரியான இடங்களில் அ.தி.மு.க. வெற்றிபெற்றால், கூட்டணிக் கட்சிகளின் தயவின்றியே மேயர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றிவிடும். அநேகமாக பா.ம.க.வுக்கு, வேலூர் அல்லது ஆவடி இவற்றில் ஏதாவது ஒரு மாநகராட்சி மேயர் பதவி மட்டும் ஒதுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது'' என்கிறார்கள் ர.ர.க்கள்.
"பா.ம.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் ரொம்பவே அழுத்தம் கொடுத்தால், "சீச்சீ... இந்தப் பழம் புளிக்கும்' என்று கூறிவிட்டு, உள்ளாட்சியில் தனித்து களமிறங்குவது குறித்தும் கட்சிக்குள் ஒரு பேச்சு ஓடிக்கொண்டுதான் இருக்கிறது' என்றும் அ.தி.மு.க. வட்டாரத்தில் கதைக்கின்றனர். மாங்கனி மாநகராட்சியை குறிவைத்து காய் நகர்த்திவரும் பா.ம.க.வின் எதிர்பார்ப்பு குறித்து சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வெங்கடாசலம் எம்.எல்.ஏ.விடம் கேட்டபோது, "சார்... இது சி.எம். மாவட்டம். அதனால 100 சதவீதம் அ.தி.மு.க.வுக்குதான் சேலம் மாநகராட்சி மேயர் பதவி'' என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.