பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய தமிழறிஞர் நெல்லை கண்ணன் மோடி, அமித்ஷா குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. எனவே அவரை கைது செய்ய வலியுறுத்தி பாஜகவினர் சென்னை மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்படார். இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திரகுமுருகன் காந்தியிடம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
பிரதமர் மோடி, அமித்ஷா குறித்து தவறாக பேசியதாக தமிழறிஞர் நெல்லை கண்ணன் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கையை எப்படி பார்க்கிறீர்கள்?
நெல்லை கண்ணன் பட்டிமன்றத்தில் பேசக்கூடியவர், அதே பாணியில் அந்த விழாவில் பேசியுள்ளார். அதில் தவறு ஒன்றும் இல்லை. அவர் பேசியதில் வன்முறை இருந்தது என்றால், நேரடியாக கொலை மிரட்டல் விடுக்கும் நபர்களை காவல்துறையினர் இதுபோன்று கைது செய்துள்ளார்களா? மாணவர்கள் கல்லை எறிந்தால், அவர்கள் மீது குண்டு வீசுவோம் என்று என்று கூறிய ஹெச்.ராஜா-வை காவல்துறையினர் இதுவரை கைது செய்துள்ளார்களா? அவரின் இந்த பேச்சு வன்முறையை தூண்டுகின்ற மாதிரி இருக்கவில்லையா. இதெல்லாம் வன்முறை பேச்சு இல்லையா? இவ்வளவு மோசமாக வன்முறையை தூண்டுகின்ற இந்த பேச்சுக்கு இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹெச்.ராஜா ஒரு சமூக விரோதியாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். அவர் சமூக நல்லிணக்கத்துக்காக எதுவும் செய்துவிடவில்லை. சிலையை உடைப்பேன் என்பதும், வெட்டுவேன், குத்துவேன் என்று சொல்லும் அவர் மீது வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை.
இதனால் தான் காவல்துறை மீதும், அரசு மீதும் எங்களுக்கு சந்தேகம் வருகின்றது. அவர்கள் ஒரு சார்பாக நடந்து கொள்கிறார்களோ என்று எங்களுக்கு சந்தேகம் உள்ளது. குடியுரிமை போராட்டத்தை திசை திருப்ப பாஜக எடுத்த ஒரு முயற்சியாகத்தான் இதை பார்க்க வேண்டும். இதை எல்லாம் தாண்டி அவர் கைதுக்கு மிக முக்கிய காரணம் விபூதி, குங்குமம் வைத்தவர் எல்லாம் இந்து அல்ல என்று அவர் பேசியதுதான். இது அவர்களுக்கு பெரிய கோவத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாகவே அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்ற தொனியில் அவர் பேசியது இதன் மூலம் மீண்டும் அவர் உறுதி செய்துள்ளார். இது அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஒன்றும் தனிமனிதரல்ல. கைது செய்யப்பட்ட போது அவர் மீது தாக்குதல் கூட நடத்தியிருக்கிறார்கள். நாங்கள் எல்லாம் அவர் கூட இருக்கிறோம்.
நெல்லை கண்ணன் ஆன்மிக கருத்துக்களை அதிகம் பரப்பக்கூடியவர். அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டதை எப்படி பார்க்கிறீர்கள்? பாஜக கூட ஆன்மிகத்தை போற்றக்கூடியவர்கள் தானே?
ஆன்மிகத்துக்கும் பாஜகவுக்கு என்ன சம்பந்தம் இருக்கு. ரவுடித்தனத்துக்கும் பாஜகவுக்கும் சம்பந்தம் இருக்கு என்றால் அதனை ஒத்துக்கொள்ளலாம். பாலியல் பலாத்காரத்துக்கும் பாஜகவுக்கும் சம்பந்தம் இருக்கு என்றால் அதனை ஒத்துக்கொள்ளலாம். ஊழலுக்கும் பாஜகவுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்றால் அதனை ஒத்துக்கொள்ளலாம். பிரிவினைக்கும் பாஜகவுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்றால் அதனை ஒத்துக்கொள்ளலாம். ஆனால், ஆன்மிகத்துக்கும் அவர்களுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. அடிப்பேன், குண்டு வீசுவேன் என்று எந்த மதமும் சொல்லவில்லை. ஆகையால் அவர்கள் வன்முறையாளர்கள் என்று தான் அவர்களை பார்க்க வேண்டும். எனவே அவர்களுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்களை வன்முறையாளர்களாக பாஜக உருவகப்படுத்த முயற்சிக்கும்.